வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏனைய முஸ்லிம் அரசியற்
கட்சிகளுடன் கூட்டிணைந்து ஒரு குழுவாக தனித்துப் போட்டியிடுவதற்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி
தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை கட்சியின் செயலகத்தில் நடைபெற்ற அரசியல் உயர் பீட
கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘வடமேல், மத்திய மற்றும் வடமாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது
என்றாலும் வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப்
பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதனால் ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன்
கூட்டுச்சேர்ந்து ஒரு குழுவாகப் போட்டியிட வேண்டுமென அரசியல் உயர்பீட
கூட்டத்தில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. எனவே, ஏனைய முஸ்லிம் அரசியற்
கட்சிகள் இணக்கம் தெரிவித்தால் உடன்பட்டால் கூட்டுச் சேர்ந்து
போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
25 வருடங்களுக்குப் பின்பு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் நீதியாக,
நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ்
வலியுறுத்துகிறது. தேர்தல் கண்காணிப்புகளுக்கு வெளிநாட்டு
கண்காணிப்பாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் விரும்புகிறது
என்றார்.
Post a Comment