![மஹிந்த ‘ஜனாதிபதிக்கு’ கரீம் காக்காவின் “திறந்த” கடிதம் Share ஜனாதிபதி அவர்களே, வெலிவேரிய விடயத்தில் நீங்கள் தலையிட்டதாகக் கேள்விப்பட்டதும் எனக்கு நல்ல சந்தோஷம்.அதே நேரம் நான் என்னுடைய சமூகத்தைப் பற்றியும் கொஞ்சம் பேச வேண்டும். முதுகெலும்பில்லாத அரசியல் வாதிகள் என்பதை விட உங்களால் முதுகெலும்புகள் வளைக்கப்பட்டுள்ள அரசியல் வாதிகளைக் கொண்டுள்ள […]](http://www.sonakar.com/wp-content/uploads/2013/02/karremlive-200x190.png)
ஜனாதிபதி அவர்களே, வெலிவேரிய
விடயத்தில் நீங்கள் தலையிட்டதாகக் கேள்விப்பட்டதும் எனக்கு நல்ல
சந்தோஷம்.அதே நேரம் நான் என்னுடைய சமூகத்தைப் பற்றியும் கொஞ்சம் பேச
வேண்டும்.
முதுகெலும்பில்லாத அரசியல் வாதிகள் என்பதை
விட உங்களால் முதுகெலும்புகள் வளைக்கப்பட்டுள்ள அரசியல் வாதிகளைக்
கொண்டுள்ள காரணத்தால் இன்று அரசியல் அரங்கில் பலவீனப்பட்டுத்தான்
இருக்கிறோம். அதற்காக மூன்று உயிர்களைப் பலி கொடுத்தால் தான் எங்கள்
விடயத்தைப் பார்க்கப் போகிறாரா ஜனாதிபதி?
அப்படி காவு கொடுக்க எங்களிடம் அப்பாவி
உயிர்கள் இல்லை, வேண்டுமென்றால் அஸ்வர், அலவி மெளலானா, பைசர் முஸ்தபா
போன்றவர்களை நீங்கள் வீட்டோடு வைத்திருங்கள். நீங்கள் கொடுக்கும் வேலையை
மட்டும் தான் அவர்கள் செய்கிறார்கள் எனவே அவர்களை நீங்கள் நிரந்தரமாக
வைத்திருக்கலாம். அதே போன்று உங்கள் சொல் பேச்சு கேட்டு ஒழுங்காக நடக்கும்
இன்னொரு நல்ல பிள்ளையிருக்கிறார். அவர்தான் எங்கள் அதி மரியாதைக்குரிய
ரவூப் ஹகீம் .அவரை உங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு குடில் அமைத்து
வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
தப்பித்தவறியும் உங்களை எதிர்த்துப்
பேசக்கூடாது என்று வலு கவனமாக சேகு பசீர் இருக்கிறார் அவரை இனாமாக
வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு யாரையாவது தாரை வார்த்துக்கொடுத்தால் தான்
எங்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பீர்களானால் இவர்களை இனாமாகவே
வைத்துக்கொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க அவர்கள் உங்களோடு இருக்கட்டும்,
திருப்பியும் அனுப்ப வேண்டாம்.
எப்போது நீங்கள் “பைலைத்” திறப்பீர்கள்
என்ற பயத்தில் தான் ரிஷாத் பதியுதீனும் காலத்தைக் கடத்துகிறார். லைட்டை
அணைத்து விட்டு தேர்தலில் “இந்த முறையும்” வெல்லலாம் என்று அதாவுல்லா
இருக்கிறார் இவர்களையெல்லாம் சம்பிரதாயபூர்வமாக பெரஹர வைத்துத் தாரை
வார்த்துக் கொடுப்பதற்கு எமது சமூகம் தயாராகத் தான் இருக்கிறது.
நீங்கள் கொஞ்சம் முறைத்துப் பார்த்தால்
போதும் ஓடிப்போய் ஞானசாரவின் காலில் விழுந்து தன் நாக்காலேயே அவர் காலை
நக்கி விடும் நிலையில் “தயாராகவே” ஹிஸ்புல்லாவும் இருக்கிறார் அவரையும்
நீங்கள் நிரந்தரமாக வைத்துக்கொள்ளுங்கள். சமூகத்துக்காக அரசியலில்
இருக்கிறோம் என்று தானே சொல்கிறார்கள் இவர்கள்? அப்படியானால் இந்த
சமூகத்திற்காக உங்களிடம் வந்து தங்கிக் கொள்ளட்டும். ஆனால் அப்பாவி மக்களை
விட்டு விடுங்கள்.
அநியாயமாக வீடுகளை உடைக்காதீர்கள்,
முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்காதீர்கள், எமது குழந்தைகளின் மனதில்
இனவாதத்தை விதைக்காதீர்கள், நேற்று வரை ஒன்றாக இருந்த நண்பர்களை திடீரென
இனவாதம் பேசிப் பிரிக்காதீர்கள்.
உங்கள் மூதாதையர்கள் வருமுன் அவர்களும்
எங்கள் மூதாதையர்களாகவே இருந்தார்கள். உங்களுக்கு இருக்கும் உரிமை இந்த
மண்ணில் எங்களுக்கும் இருக்கிறது. அந்த சம உரிமையையும், சமத்துவத்தையும்
பேணிப் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தானே உங்களை ஆட்சியில் அமர
வைத்தோம். அதற்காகவாவது நீங்கள் எங்களுக்காகவும் பணியாற்ற வேண்டாம்.
அப்படியும் இல்லை யாரையாவது உங்களுக்கு
தாரை வார்க்கத்தான் வேண்டுமென்றால் மேற்குறிப்பிட்டவர்களை தாள
தப்பட்டையுடன், பெரஹரவும் வைத்து உங்கள் வீட்டடியில் கொண்டு வந்து விட எமது
சமூகம் தயாராகத்தான் இருக்கிறது.
இங்கனம்,
கரீம் காக்கா,
Post a Comment