Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியின் கீழும் பள்ளிவாசலில் மூர்க்கத்தனமான சம்பவம் இடம்பெற்றதில்லை!

Sunday, July 140 comments

இவ்வருடத்தின் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாத்தை அவமானப்படுத்தும்,முஸ்லிம்களின் மனதை புன்படுத்தி அவர்களை வேதனைக்குள்ளாக்கும் முதலாவது செயற்பாடு மஹியங்கனை பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆ பள்ளிவாசல் நேற்று முன்தினம் இரவு புனித றமழான் மாதத்தின் விஷேட இரவு நேர தொழுகையான தராவீஹ் தொழுகையை அடுத்து மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளது.

மிகவும் திட்டமிட்ட முறையில் பள்ளிவாசலின் மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டு பள்ளிக்குள் புகுந்த காடையர் கும்பல் அங்கிருந்த நபர்மீது மிளகாய்த்தூளை தூவி விரட்டிவிட்டு பள்ளிவாசலின் யன்னல்களைத் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். சுமார் பத்து நிமிட நேரம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவர்கள் சென்ற உடன் மீண்டும் மின்சார விநியோகம் வந்துள்ளது. மின்சாரம் வந்த பிறகுதான் அங்கு என்ன நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. அறுக்கப்பட்ட பன்றியொன்றின் பாகங்களையும் அதன் இரத்தத்தைம் பள்ளிவாசலுக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு ஆட்சியின் கீழும் ஒரு பள்ளிவாசலில் இந்த மாதிரியான கேவலமான மூர்க்கத்தனமான சம்பவம் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் அந்தப் பெருமை தற்போதைய ஜனாதிபதியையே சாரும்.

ஜனாதிபதிக்கு ஜால்ரா அடிக்கும் நமது முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் அடிவருடிகளும் இது பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்? அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று முழுப் பூசனிக்காயையும் சோற்றில் புதைத்துவிடுவார்களா? அல்லது இது ஒரு சிறிய விடயம் பள்ளியை கழுவிவிட்டு வேலையைப் பாருங்கள் மற்றதை எல்லாம் ஜனாதிபதி பார்த்துக் கொள்வார் என்று கூறப்போகின்றார்களா?

அல்லது நாம் இந்த விடயத்தை பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொணடுவந்துள்ளோம் அவர் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறப்பேகின்றனரா? இந்த பதில்களைக் கேட்டுக் கேட்டு முஸ்லிம் சமூகம் அழுத்துப் போய்விட்டது என்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது.

கடந்த காலங்களிலும் றமழான் மாதத்தில் இதுபோன்ற மோசமான கசப்பான அனுபவங்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த சம்பவங்களுக்குக் காரணமான எவரும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இதன் காரணமாகத் தான் இந்தச் சம்பவங்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக முஸ்லிம்கள் சந்தேகப்படுகின்றனர்.

பொலிஸ் நம்மைத் தேடாது, கண்டுபிடிக்காது, நமக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற நம்பிக்கையிலும் ஒருவேளை பாதுகாப்புத் தரப்பின் ஆதரவு தமக்குள்ளது என்ற உத்தரவாதத்திலும் தான் இந்த இன வெறிக் கும்பல் தனது நடவடிக்கைளை இம்முறை மஹியங்கனையில் தொடங்கியுள்ளது.

ஒரு பிரதேசத்தின் மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு துண்டிப்பது என்பது சாதாரன விடயமல்ல. அதை சாதாரண நபர்களால் செய்யவும் முடியாது.எனவே இதில் இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு முக்கிய புள்ளி அல்லது முக்கிய பிரிவு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். முறையான விசாரணைகளை மேற்கொண்டால் இதைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல.

ஆனால் பொலிஸ் விசாரணைகள் இதற்கு முந்திய சம்பவங்களின் விசாரணைகளைப் போன்று வெறும் கண்துடைப்பாக அமைந்தால் நிச்சயம் இந்த சம்பவமும் ஒரு பதிவு செய்யப்பட்ட சம்பவமாக இருக்குமே தவிர உண்மையான குற்றவாளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பின் கீழ் தப்பிவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட காரணம் என்ன? அதைச் செய்தவர்கள் யார்? என்பதற்கான விளக்கத்தை ஜனாதிபதி தலையிட்டு வெளிக் கொண்டு வர வேண்டும்.

ஜனாதிபதி பள்ளிவாசல்களைத் திறந்து வைத்து அந்த நேரத்தில் மட்டும் முஸ்லிம்களின் மனது குளிர பேசிவிட்டு வருவதில் பயனில்லை. உண்மையிலேயே தனது ஆட்சியின் கீழ் பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுவதையும், முஸ்லிம்கள் தமது புனித காலம் உட்பட ஏனைய காலங்களிலும் நிம்மதியாக தமது சமயக் கடமைகளில் ஈடுபடுவதையும் இந்த அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் பௌத்த புனிதத் தலமொன்று தாக்கப்பட்டபோது ஜனாதிபதி அடைந்த வேதனையை நாம் ஊடகங்கள் வாயிலாகக் கேள்வியுற்றோம். ஆனால் தனது ஆட்சியின் கீழ் அடுத்தடுத்து முஸ்லிம்; கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் புனிதச் சின்னங்களும் தாக்கப்படுகின்றபோதும் அழிக்கப்படுகின்றபோதும் அவருக்கு இந்த வேதனை ஏன் வரவில்லை? என்ற கேள்வியும் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மஹியங்கனை பள்ளிவாசல் சம்பவத்தை ஜனாதிபதி கேள்வியுற்றிருப்பார் என்று நம்புகின்றோம். அவர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டு முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதோடு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசிங்கமான சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் உறுதி செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அஸாத் சாலி
தலைவர் 
தேசிய ஐக்கிய முன்னணி

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by