கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் விசேட பேட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற அந்த இயக்கத்துக்கு கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன். என்னை முதல்வர் பதவியில் அமர வைத்தது இந்தக் கட்சியும் மக்களுமாவர். எனவே தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் என்ற வகையில் என்னால்
முடிந்தளவு எனது அதிகாரங்களுக்கு உட்பட்டு மக்களுக்கு
சேவையாற்றிவருகின்றேன். தொடர்ந்தும் உச்சபட்சமாக மக்களுக்கு
சேவையாற்றவேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். எனவே
எனது காலப்பகுதியில் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்
என்று கோருகின்றேன் என்று கல்முனை மாநகர சபை மேயர் டாக்டர் சிராஸ்
மீராசாஹிப் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மக்கள் எவ்வாறான தீர்மானங்களை
எடுக்கின்றனரோ அதற்கு நான் தலை வணங்குவேன். என்னை
பாராளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள் தீர்மானித்தால் அதனையும் ஏற்க
நான் தயாராக இருக்கின்றேன். இறைவனும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி
கட்சியும் அனுமதித்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருக்கின்றேன்.
கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு நான் எப்போதும் தலைவணங்குவேன்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செவ்வியின் முழுவிபரம் வருமாறு:
கேள்வி: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன?
பதில்: 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் கல்முனை
மாநகர சபையை பொறுப்பேற்றபோது அங்கு பின்தங்கிய நிலைமை
காணப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் மாநகர சபையை மக்கள்மயப்படுத்தி
செயற்பட்டுவருகின்றோம். குப்பைகளை அகற்றுவதும் மின்குமிழ்களை
பொருத்துவதும்தான் மாநகர சபையின் பணி என
நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அப்படியல்ல. பல
அபிவிருத்தித் திட்டங்களை மாநகரசபை மூலம் முன்னெடுத்துள்ளோம்.
குறிப்பாக கல்முனை மாநகரத்துக்குள் கூடுதலான பாதைகளை
செப்பனிட்டுள்ளோம்.
அதேபோன்று, அதிகளவு குப்பைகளை அகற்றும்
உள்ளூராட்சி நிறுவனமாக எமது மாநகர சபை உள்ளது. சுமார் 40
தொடக்கம் 50 தொன் வரை குப்பைகளை மாதாந்தம் அகற்றிவருகின்றோம்.
அதுமட்டுமன்றி பல அபிவிருத்தித்திட்டங்களை
முன்னெடுத்துவருகின்றோம். வாசிக சாலைகளை தரமுயர்த்தியுள்ளோம்.
பீச் பாக் திட்டம் ஒன்றை நிர்மாணித்துவருகின்றோம். எமது மக்கள்
மாலை நேரங்களை பிள்ளைகளுடன் உல்லாசமாக பொழுதைக் கழிப்பதற்கு பீச்
பாக் ஒன்றை உருவாக்கி வருகின்றோம். இதற்கு உள்ளூரிலேயே பல
எதிர்ப்புக்கள் வந்தன. ஆனால் அவற்றை முறியடித்து அதனை அமைப்பதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒன்றரை கோடி ரூபா செலவில் இதனை
மேற்கொள்கின்றோம்.
மக்கள் ஆதரவுடன் அதனை செய்கின்றோம். யார்
விரும்பியோ விரும்பாமலோ எனக்குரிய காலப்பகுதியில் மக்களால்
பேசப்படுகின்ற மாநகர சபையாக கல்முனை மாநகசபையை மாற்றியமைக்க
வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். நிதிவளத்திலும் ஏனைய
துறைகளிலும் கல்முனை மாநகர சபை ஸ்திரமான நிலைமையில் உள்ளமை குறித்து
பெருமையடைகின்றேன்.
கேள்வி: மேயர் பதவிக்காலத்தை இரண்டாகப் பிரித்து
இருவர் அதனை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன.
அதன்படி உங்கள் பதவிக்காலம் முடிவடையப்போகின்றதா? அந்த
விவகாரம் என்ன நிலையில் உள்ளது?
பதில்: உண்மையில் நான் பதவியேற்கின்றபோது
சாய்ந்தமருது மக்கள் 95 வீதமானோர் எனக்கு வாக்களித்திருந்தனர்.
ஏனைய பகுதி மக்களும் வாக்களித்திருந்தனர். அந்த வகையில் மக்கள்
எங்கும் இரண்டு வருடங்களுக்கு என்று வாக்களிக்கும் சரித்திரம்
கிடையாது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற அந்த
இயக்கத்துக்கு கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு
நடப்பேன். என்னை முதல்வர் பதவியில் அமரவைத்தது இந்தக் கட்சியும்
மக்களுமாவர்.
எனவே, தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுக்கு
எப்போதும் கட்டுப்பட்டவனாக இருப்பேன். மக்களின்
அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும். இரண்டு வருடங்களா?
அதற்கு மேலதிகமா என்பதனை கட்சியும் மக்களுமே
தீர்மானிக்கவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் அவ்வாறான
எந்தவொரு உடன்படிக்கையும் செய்யவில்லை. ஆனால் நேரம்
வருகின்றபோது கட்சி எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்படுவேன்.
கேள்வி: கல்முனை மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: நிச்சயமாக இல்லை என்றே அதற்கு பதில்
கூறுவேன். தமிழ்க் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும்
உறுப்பினர்கள் என்னுடன் சுமுகமாக செயற்பட்டுவருகின்றனர். நான்
அரசியலுக்கு வந்தபின்னர் நிலைமையை புரிந்துகொள்ள சற்று காலம்
எடுத்தது. எனினும் நான் நிலைமையை விரைவாக புரிந்துகொண்டு மிகவும்
அந்நியோன்யமாக செயற்பட்டு
வருகின்றேன். அவர்களின் தேவைகளை
நிறைவேற்றிக்கொடுக்கின்றேன். குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்குத்
தேவையான சேவைகளை இந்த உறுப்பினர்கள் ஊடாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
அண்மையில் கூட உறுப்பினர்களுடன் தமிழ்க் கிராமம்
ஒன்றுக்குச் சென்று மலசலகூடத் தொகுதி கழிவுகளின் நிலைமையை கண்டு
அதிர்ந்துவிட்டேன். உடனடியாக நான் அதிரடி நடவடிக்கை எடுத்து
பிரச்சினையை நிவர்த்தி செய்துகொடுத்தேன். நீர்வசதி இல்லாத பகுதி
களுக்கு அவற்றை செய்து கொடுத்துள்ளேன். அந்தவகையில்,
கூட்டமைப்பின் உறுப்பினர்களும் நானும் சுமுகமாக செயற்பட்டு
வருகின்றோம். ஆனால், எனக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும்
இடையில் காணப்படுகின்ற உறவை கெடுத்துவிடவேண்டும் என்று சில உள்ளூர்
அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். அதற்கு நான்
இடமளிக்கமாட்டேன். என்னுடை பதவிக்காலத்துக்குள் தமிழ்
பகுதிகளுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளையும் சேவைகளையும் நான்
பெற்றுக்கொடுப்பேன். இதனை மாதாந்தக் கூட்டத்திலும் கூறியுள்ளேன்.
தமிழ் மக்களுக்கு அநியாயம் நடப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க
மாட்டேன்.
கேள்வி: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட
பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும்போது பிரதேச ரீதியில்
பாரபட்சங்கள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் ...?
பதில்: என்னைப் பொறுத்தவரை நான் சாய்ந்தமருதில்
பிறந்தாலும் கொழும்பில் கல்வி கற்று வெளிநாட்டில் வாழ்ந்தவன். எனக்கு
இந்த பிரதேசவாதம் என்றாலே என்னவென்று தெரியாது. ஒருசிலர் இந்த
விடயத்தில் குளிர்காய நினைக்கின்றனர். நான் சாய்ந்தமருதில்
பிறந்ததன் காரணமாக நான் சாய்ந்தமருதுக்கு அதிகமாக செய்கின்றேன்
என உள்ளூர் அரசியல்வாதிகள் கதைகளை பரப்பிவிட்டு அதில் குளிர்காயப்
பார்க்கின்றனர். ஆனால், நான் அவ்வாறு இல்லை. எல்லோருக்கும்
சமபங்கீடு என்ற வகையிலேயே எனது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதுமட்டுமன்றி, ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்ற
வித்தியாசமின்றி அனைவரையும் அரவணைத்துச்செல்லும் போக்கை
கொண்டுள்ளேன். ஆனால், கடந்த சில மாதங்களாக எமது ஆளும் கட்சி
உறுப்பினர்கள் என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தலைவரிடம்
முறையிட்டிருந்தனர். இரண்டு வருடங்களில் பதவியில் இருந்து
அகற்றவேண்டும் என்று பகல் கனவு கூட காண்கின்றனர். ஆனால் நான்
என்னுடைய அபிவிருத்திப் பணிகளை சம அளவிலேயே முன்னெடுத்து
வருகின்றேன்.
கேள்வி: அரசியலுக்கு புதிதாக வந்து மிக விரைவாக மேயர் பதவிக்கு வந்துவிட்டீர்கள். எவ்வாறு உணர்கின்றீர்கள்?
பதில்: இது பல சவால்களுக்கு உட்பட்ட விடயமாகும்.
30 வருடங்களாக கட்சிக்குள் இருப்பவர்களும் தேர்தலில்
போட்டியிட்டனர். எனினும் மக்கள் என்னை தெரிவு செய்தனர். மக்களிடம்
வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு இளைஞனை தெரிவு
செய்யவேண்டும் என்ற ஆக்ரோஷம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. மக்கள்
என்னில் பாரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 45 நாட்களில்
அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகியதில் சரித்திர நாயகனாக நான் இன்று
முஸ்லிம் காங்கிரஸில் இடம்பிடித்துள்ளேன். அதற்காக
தலைமைத்துவத்துக்கும் நான் என்றும் நன்றியுடையவனாகவும்
விசுவாசம் உடையவனாகவும் இருப்பேன்.
என்னை இனம்கண்டு தேர்தலில் கட்சி
களமிறக்கியது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்தக்கட்சிக்காக நான்
மிகவும் பாடுபடுகின்றேன். இந்தக் கட்சியை வளர்த்தெடுக்கவேண்டும்
என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். முஸ்லிம்
காங்கிரஸை அழிக்கவேண்டும் என பேரினவாத சக்திகளும் வெளிநாட்டு
சக்திகளும் செயற்பட்டுவருகின்றன. மக்கள் மத்தியில் நான்
முதல்வராக வந்தாலும் சிராஸ் என்பவர் முஸ்லிம் காங்கிரஸின்
பிரதிநிதியாகவே உள்ளார். என்னை பொறுத்தமட்டில் கட்சியை
வளர்க்கவேண்டும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதே
பிரதான குறிக்கோளாகும். இது ஒரு சவாலான விடயமாகும். பல
சவால்களுக்கு மத்தியிலேயே அந்த ஆசனத்தில் நான் அமர்ந்துள்ளேன்.
இன்றும் கூட பல பிரச்சினைகள் உள்ளன. என்னுடைய உயிருக்கே ஆபத்து
ஏற்படும் வகையில் சதித்திட்டங்கள் உள்ளன. எனினும் இறைவனின்
நாட்டப்படி என்னுடைய கடமைகளை செய்துவருகின்றேன்.
கேள்வி: அரசியலுக்கு வந்து 45 நாட்களில் மாநகரசபை முதல்வராகியுள்ளீர்கள். அடுத்த இலக்கு என்ன?
பதில்: நான் இறைவன் மீது விசுவாசம் கொண்டவன். நான்
மாநகர சபை முதல்வராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்தலில்
போட்டியிட்டு மக்களின் ஆணையை பார்ப்போம் என்றுதான் போட்டியிட்டேன்.
ஆனால் மக்களின் தேவையை அறிந்திருந்தேன். மக்கள் வெள்ளம் போன்று
எனக்கு வாக்களித்தனர். நான் பணத்தை வாரி வீசியதாக சிலர் கூறினர்.
அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அனைவருக்கும் நன்றாக உணவு
வழங்கினேன். அந்த வகையில் மக்கள் எனக்கு ஒரு ஆணையை வழங்கினர்.
எதிர்காலத்தில் மக்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றனரோ
அதற்கு நான் தலை வணங்குவேன். என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்ப மக்கள்
தீர்மானித்தால் அதனையும் ஏற்க நான் தயாராக இருக்கின்றேன். இறைவனும்
அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி கட்சியும் அனுமதித்தால் அதனை
பரிசீலிக்க தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டம் குறித்த உங்கள் நிலைப்பாடு ?
பதில்: 13 ஆம் திருத்தத்தில் கைவைப்பதானது
சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கை வைப்பதற்கு சமமாகும். இது எனது
தனிப்பட்ட கருத்தாகும். இந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம்
குறித்து மக்கள் ஆவலுடன் உள்ளனர். கிழக்கு மாகாண சபையில் காங்கிரஸ்
என்ன செய்யப்போகின்றது என்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்
நீக்கப்பட்டுவிடுமா என மக்கள் சிந்திக்கின்றனர். எனவே அரசாங்கம்
இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். மக்களோடு நாங்கள்
நேரடியாக தொடர்புகொள்கின்றோம். 13 இல் கைவைப்பதானது
பாரதூரமான விடயமாக உள்ளது. இந்த விடயத்தில் தலைவரும் உறுதியாக
உள்ளார்.
கேள்வி: இது தொடர்பில் உங்கள் கட்சியின் தலைமைத்துவத்துடன் பேசினீர்களா?
பதில்: தலைவருடன் இது தொடர்பில் பேச்சு நடத்தினேன்.
அத்துடன் அடுத்த மாதாந்த கூட்டத் தொடரில் 13 இல் கை வைக்கக்கூடாது
என பிரேரணை ஒன்றை நிறைவேற்றவுள்ளோம். இது மிகவும் முக்கியமான
விடயமாகும். 13 இல் கைவைப்பது என்பது சிறுபான்மை மக்களுக்கு
மட்டுமல்ல பெரும்பான்மை மக்களுக்கும் பாதிப்பாகவே அமையும். இந்த
விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் மிகவும்
தெளிவாக இருக்கின்றது.
இதேவேளை கல்முனை மாநகர மக்களுக்கு ஒரு விடயத்தை
தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது நான் எந்த
நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தேனோ பல சவால்களையும் தாண்டி அந்த
நோக்கத்தை அடைய மக்களுகக்கு சேவையாற்றிவருகின்றேன். மக்கள்
தற்போது விழிப்பாக உள்ளனர். மக்கள் மாநகர சபையை தராசில் வைத்து
நிறுக்கின்றனர். ஒருவருக்கு வழங்கப்பட்ட காலப்பகுதியில் அவர் என்ன
செய்துள்ளார் என்று அளவிடுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள
அரசியல்வாதிகளை மக்கள் அளவிடுகின்றனர்.
மக்களை அரசியல் ஊடாக ஏமாற்ற முடியாது. அரசியல் இன்று
மக்கள் மயப்படுத்தப்பட்டுவிட்டது. மக்கள் தெளிவாக உள்ளனர். மக்களின்
தேவைகளை நிறைவேற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம். நான் மாநகர சபைக்கு மட்டுமே
முதல்வராக இருக்கின்றேன். இதனை தாண்டி தேசிய அரசாங்கத்திலோ அல்லது மாகாண
அரசாங்கத்திலோ நான் இடம்பெறவேண்டுமானால் அதனை மக்கள் தீர்மானிக்கலாம்.
முதல்வர் என்ற வகையில் என்னால் முடிந்தளவு எனது அதிகாரங்களுக்கு உட்பட்டு
சேவையாற்றுவேன்.
எனவே எனது காலப்பகுதியில் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோருகின்றேன்.
Post a Comment