
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தங்களை
மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதனை
எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தீர்மானித்துள்ளது.
இன்று அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
தலைமையில் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்திலே மேற்குறிப்பிட்ட தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 13ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ள
பிரேரணை முன்வைக்கப்படக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கிழக்கு
மாகாண சபைக்கு முன்னறிவித்தல் கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக
கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி
தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் 7 பேரில் ஐவர்
சமுகமளித்திருந்தனர். இருவர் சமுகமளிக்கவில்லை. உறுப்பினர் ஹசன் மெளலவி
சுகயீனம் காரணமாக சமுகமளிக்க இயலவில்லையெனவும் உறுப்பினர் மன்சூர்
தனிப்பட்ட காரணங்களால் சமுகமளிக்க இயலாதெனவும் அறிவித்திருந்ததாகவும் ஹசன்
அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறிப்பிட்ட திருத்தச் சட்டத்தில்
மாற்றங்களை செய்வதற்கு தாம் ஆதரவளிக்கமாட்டோம் என கட்சித்தலைமைத்துவத்திடம்
உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
Post a Comment