Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வாசிகசாலை திறப்பு விழாவை மு.கா மாநகர சபை உறுப்பினர்கள் பகிஷ்கரித்தமையானது என்னை அவமானப்படுத்தும் செயலாகவே பார்க்கிறேன் - அமைச்சர் ஹக்கீம்

Friday, May 240 comments

சாய்ந்தமருதில் நேற்று மாலை இடம்பெற்ற மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவை கல்முனை மாநகர பிரதி மேயர் உட்பட ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்  ஏழு பேர் பகிஷ்கரிப்பு செய்தனர்.

கல்முனை மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.பறக்கத், உமர் அலி, எம்.எம்.முஸ்தபா, சாலிதீன் ஆகியோரே இவ்வாறு பகிஷ்கரிப்பு செய்தவர்களாவர்.

கல்முனை மாநகர சபையில் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேயர் உட்பட 11 உறுப்பினர்களும்,
எதிரணியில் 8 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வாசிகசாலைக்கு சபையின் அங்கீகாரமின்றி கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது தந்தையின் பெயரை தன்னிச்சையாக சூட்டிக் கொண்டமையை ஆட்சேபித்தே இவர்கள் இவ்விழாவை பகிஷ்கரிப்பு செய்ததாக அறிய முடிகிறது.

ஏற்கனவே இவர்கள் தமது ஆட்சேபனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து குறித்த வாசிகசாலையை திறப்பு விழா செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதின் உத்தரவை கருத்தில் கொள்ளாமல் இத் திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.

அதேவேளை இவ்வாசிகசாலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம், கல்முனை மாநகர சபை மு.கா. உறுப்பினர்களின் பகிஷ்கரிப்பு குறித்து தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக தனது உரையின் ஆரம்பத்தில் அவர் கூறியதாவது;
“உங்களுக்குள் எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் தலைவனாகிய நான் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் பங்குபற்றியிருக்க வேண்டும். ஆனால் என்னை மதியாமல் அகௌரவப்படுத்தி விட்டீர்கள். நான் எல்லோருக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன். எனினும் எல்லோரினதும் தொலைபேசிகளும் நிறுத்தப்பட்டிருந்தது. மேயருடன் இவர்களுக்கு உள்ள முரண்பாடுகள் குறித்து அனைவரையும் நான் கொழும்புக்கு அழைத்து பேசி கடந்தவாரம்தான் சமாதானம் செய்து வைத்தேன். எல்லோரும் என் முன்னிலையில் முஸாபஹா செய்து ஆரத்தளுவி சமாதானமாகினர்.

ஆனால் இது நடந்து ஒரு வாரம் கழிவதற்குள் மீண்டும் பிணக்கு.
இங்கு முக்கால்வாசிப் பேரைக் காணவில்லை. அவ்வாறாயின் அவர்கள் செய்து கொண்ட முஸாபஹாவுக்கு அர்த்தம்தான் என்ன?
அவர்கள் சிராஸ் மீராசாஹிபின் நிகழ்வை பகிஷ்கரித்தாலும், என்னை அவமானப்படுத்தும் செயலாகவே இப்பகிஷ்கரிப்பை நான் பார்க்கிறேன்.

ஆகையினால் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.

அதேவேளை சபை உறுப்பினர்களின் அபிலாஷைகள், வேண்டுகோள்களை  நிவர்த்தி செய்து கொடுக்கும்படி மேயரிடம் முன்னரும் கூறியிருந்தேன். அவை தொடர்பில் மேயர் கவனம். செலுத்தியதாகத் தெரியவில்லை. எனவே இவை குறித்து மேயர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என நான் மீண்டும் அவரிடம் வலியுறுத்துகிறேன்.

இன மத பேதமின்றி – எதிர்க்கட்சி இல்லாத, அனைவரையும் அரவணைத்து, மக்களுக்கு சேவையாற்றுகின்ற ஒரு முன்மாதிரியான சபையாக கல்முனை மாநகர சபை திகழ வேண்டும் என்பதே எனது அவா” என்று குறிப்பிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by