Homeநாளை என்னையும் 4 ஆம் மாடியில் விசாரணை செய்வீர்களா? அமைச்சர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு
நாளை என்னையும் 4 ஆம் மாடியில் விசாரணை செய்வீர்களா? அமைச்சர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு

சிவசக்தி ஆனந்தனை சில தினங்களுக்கு
முன்னர் விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து
விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச்
செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்கள் தானே என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்
அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சிவசக்தி ஆனந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத்
தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்
கைதிகளுக்கும் தனக்கும் கடந்த வருடம் கைத்தொலைபேசி மூலமான தொடர்புகள்
இருந்தது எனக் கூறியே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தன்னைத்
துருவித்துருவி விசாரணை செய்தனர் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்
மதிய போசன வேளையின் போது அமைச்சர்கள் முன்னிலையிலேயே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தன் எம். பி. மேலும் கூறுகையில்,
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான
சிறிதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வைத்து
விசாரித்துள்ளீர்கள். கடந்த செவ்வாய்க்கிழமை நான்காம் மாடியில் வைத்து
விசாரித்துள்ளீர்கள் நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை
செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றீர்கள் ?
தமிழர்களும் அவர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்களும் மனிதர்களே தானே?
ஏன் எம்மைப் புலிகள் என்று நினைக்கின்றீர்களா? அல்லது நான்காம் மாடி
விசாரணை மூலம் தமிழர்களை அல்லது கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சமடையச்
செய்யலாம் என்று நினைக்கின்றீர்களா? கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளைப் பார்வையிட உரிமை
இல்லையா? ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லையா? இவ்வாறு
கேள்விகளைத் தொடுத்தார் சம்பந்தன்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனைக் கடும் தொனியில் தெரிவிக்கும்
போது அமைச்சர்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தனர். பின்னர் பாதுகாப்பு
செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே நான்காம் மாடி விசாரணைக்குப் பொறுப்பு எனவும்
அவரே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள்
கூறியுள்ளனர்.
உடனே குறுக்கிட்ட சம்பந்தன் கோத்தபாயவும் உங்கள் அரசின் கீழ்தானே இயங்குகின்றார் என்று பதிலளித்தார்.
Post a Comment