புத்தளத்தையும் அதனை அண்டிய
பிரதேசங்களிலும் வசிக்கும் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அங்கு
நிரந்தர பதிவை உறுதிசெய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக தமது ஆவணங்களை கிராம
அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் ஊடாக அத்தாட்சிப்படுத்துவதில்
இதுவரை காலமாக எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கு
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கிங்ஸ்லி
பெர்னான்டோ, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான
ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.
யுத்த
காலத்தில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, இவ்வாறான பிரதேசங்களில்
வசிக்கும் பொதுமக்கள் அங்கு தமது வதிவிடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு
தேவையான பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவு, மரண சான்றிதழ், மின்சார
பற்றுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், போன்றவற்றை
கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அத்தாட்சியைப் பெறுவதற்கு
மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது அமைச்சர் ஹக்கீமின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்ததையடுத்தே புத்தளம் மாவட்டச் செயலகத்தில்
அரசாங்க அதிபருடனும், புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளருடனும், பொலிஸ் உயர்
அதிகாரியுடனும் செவ்வாய்க்கிழமை (28) முற்பகல் இந்தச் சந்திப்பு
இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக், சட்டத்தரணி மில்ஹான்,
அமைச்சரின் இணைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான எம்.
நியாஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலரும் இடம்பெற்றனர்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அமைச்சர்
ஹக்கீம், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்
முன்னிலையில் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில்
வாழ்ந்து வரும் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளை
ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினார்.
அமைச்சர் முன்வைத்த கருத்துக்களை கவனமாக
செவிமடுத்த அரசாங்க அதிபரும், உயர் அதிகாரிகளும் இனிமேலும் அவ்வாறான
சிரமங்கள் ஏற்படாதவிதத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு இவ்வாறான விடயங்களில் போதிய
அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கும் விதத்தில் ஒரு தகவல் மத்திய
நிலையமொன்றை செயல்படுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இப் பிரதேசங்களில் மக்கள் மத்தியில்
ஏற்படும் பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வுகளை காணும் விதத்தில் மத்தியஸ்த சபை
உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் தமது அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு
பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
அண்மையில் கொண்டுவரப்படவுள்ள புதிய
சட்டமொன்றின் மூலம் வேறு இடங்களில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிராத
வடபகுதி மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்காளர்களாக மேலதிகப் பட்டியல்
ஒன்றில் இடம்பெறச்செய்ய வாய்ப்பளிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
உண்டெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் சந்திரசிறி பண்டார,
புத்தளம் பிரதேச செயலாளர் எம்ஆர்.எம். மாலிக், முந்தல் பிரதேச செயலாளர்
வன்னி நாயக்க, கல்பிட்டி பிரதேச செயலாளர் ரங்கன பெர்னான்டோ, வனாத்தவில்லு
பிரதேச செயலாளர் ரவீந்திர விக்கிரமசிங்க, புத்தளம் சிரேஷட பொலிஸ்
அத்தியட்சகர் அனுர அபயவிக்கிரம ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
Post a Comment