Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டால் குரல் கொடுப்போம்: அக்குறணையில் அஸாத் சாலி

Monday, May 270 comments

http://www.navamani.lk/wp-content/uploads/2013/05/DSC_0587.jpgவடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்க்கின்ற கட்சிகள் எல்லாம் நாட்டின் ஏனைய மாகாண சபைகளில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள நிலையில் அவற்றின் வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றன. இந்நிலையில் வடபகுதி மக்களுக்கு மட்டும் இவற்றை வழங்க மறுப்பது ஏன்? நாட்டில் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டதே அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டம். இன்று அதன் பலன்களை ஏனைய மாகாண மக்கள் அனுபவித்து வருகின்ற நிலையில் வட பகுதி மக்களுக்கு மட்டும் இந்த உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பினார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி.


நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய ஐக்கிய முன்னணியின் அக்குறணை கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, புதிய சிஹல ஊறுமய கட்சி தலைவர் மனமேந்திர ஆகியோரும் இந்த வைபவத்தில் பங்கேற்றனர். பெருந்திரளான பிரதேசவாசிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து பேசிய அஸாத் சாலி; இந்த நாட்டில் சகல இனங்களும் சம உரிமைகளோடு வாழ்வதற்கான அங்கீகாரம் அரசியல் யாப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்கள் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன.எனவே அவற்றை உடைக்க வேண்டும் என்று சில அடிப்படைவாத அமைப்புக்கள் கூறிவருகின்றன.

இந்தப் பள்ளிவாசல்கள் அவர்கள் குறிப்பிடுவதுபோல் சட்டவிரோத கட்டிடங்களாக இருக்குமானால் அவற்றை உடைக்க நாம் தயார். ஆனால் அவை பள்ளிவாசல்களாக மட்டும் இருக்கக் கூடாது. சட்டவிரோதமான முறையில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்லா வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எமது கருத்தாகும்.

தம்புள்ள பள்ளிவாசலை இவர்கள் உடைக்கப் போகின்றார்கள் என்பதை அறிந்து நான் ஜனாதிபதியிடம் அதுபற்றி முன் கூட்டியே தெரிவித்தேன். ஆனால் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. ஹலால் பிரச்சினையை அவர்கள் தொடங்கியபோது பிரதான பிரச்சினை ஹலால் விடயமல்ல முஸ்லிம்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவமேயாகும்.

இதுதொடர்பான உண்மை நிலைகளை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தினோம். அதன் பலன் என்னை பயங்கரவாதி என்றும் பயங்கரவாத தலைவன் என்றும் கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். நான் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட பிறகே விடுதலை செய்யப்பட்டதாக அரச ஊடகங்களில் பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
P1040713
ஆனால் நான் அவ்வாறு யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை. நான் இன்றும் சொல்கிறேன் நான் பயங்கரவாதி அல்ல. எந்தவொரு பயங்கரவாத குழுவையும் ஆதரித்தவனும் அல்ல. நான் பயங்கரவாதி என்பதை முடியுமானால் நிரூபித்துக் காட்டுங்கள். நான் சகல மக்களினதும் அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும், சம உரிமைக்காகவும் குரல் கொடுப்பவன்.

இந்த நாட்டில் சமாதானத்துக்கு கேடு விளைவித்தவர்கள் இராணுவத்தினரையும், அப்பாவி பொதுமக்களையும், மதகுருமாரையும் துடிக்கத் துடிக்க கொன்று குவித்தவர்கள் இன்று இந்த நாட்டில் அரசாங்கத்தின் சகல வசதிகளுடனும், பாதுகாப்புடனும், பிரபுக்கள் நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களெல்லாம் இப்படியே இருக்க மக்களின் சமாதானத்துக்காக குரல் கொடுத்தவர்களை பயங்கரவாதி என்கின்றனர்.
அநுராதபுரத்தில் ஒரு பள்ளிவாசலை உடைக்குமாறு நகரபிதாவே கடிதம் அனுப்பி வைத்துள்ளார். நீங்களாக உடைக்காவிட்டால் நாங்கள உடைப்போம் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அக்குறணை பிரதேசத்தில் எட்டு பள்ளிவாசல்களில் பங்கர்கள் உள்ளதாக இதே அடிப்படைவாத குழுவினர் கூறுகின்றனர். இதை சட்டப்படி நிரூபித்தால் நாம் சட்டத்துக்கு கட்டுப்படும் பிரஜைகள் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம். மாவனல்லை பிரதேசத்திலும் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் புதையல் இருப்பதாகவும் அந்தப் பள்ளவாசலை அகற்ற வேண்டும் என்றும் இவர்கள் கோஷமிடத் தொடங்கியுள்ளனர்.

முஸ்லிம்களும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் குறித்து நாம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அஸாத் சாலி மேலும் கூறினார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by