Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.

Monday, May 270 comments

http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-frc1/581163_157605161086358_1883313123_n.jpg

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த 6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்றிரவு அரங்கேறியது. இதில் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்த ஆட்டத்திலும் இடம் பெறவில்லை.

ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையிலும், கொல்கத்தா மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 66 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்தனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் ஷர்மா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இதன்படி வெய்ன் சுமித்தும், ஆதித்ய தாரேவும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். முந்தைய இரு ஆட்டங்களில் அரைசதம் அடித்து பிரமாதப்படுத்திய அபாயகரமான துடுப்பாட்ட வீரரான வெய்ன் சுமித் (4 ஓட்டங்கள்), வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவின் முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஆதித்ய தாரே (0), ரோகித் ஷர்மா (2) ஆகியோரின் விக்கெட்டுகளையும் மும்பை அணி தாரை வார்த்தது. 16 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால், மும்பை அணி பரிதாபமாக காட்சி அளித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் (21 ஓட்டங்கள், 26 பந்து, 3 பவுண்டரி) நீடிக்காததால், மும்பை அணியின் ஊசலாட்டம் தொடர்ந்தது. இதனால் ஓட்ட எண்ணிக்கை மந்தமானதுடன் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ஓட்டங்களையே எடுத்திருந்தது.

இதன் பின்னர் அம்பத்தி ராயுடுவும், கிரன் பொல்லார்ட்டும், அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதிலும் கவனம் செலுத்தினர். 15–வது ஓவரில் மும்பை அணி 100 ஓட்டங்களை தொட்டது. அப்போது இந்த ஜோடியை பிரித்த வெய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடுவை (37ஓட்டங்கள், 36 பந்து, 4 பவுண்டரி) போல்டாக்கினார்.

இதைத் தொடர்ந்து, ஒரு பக்கம் சில விக்கெட்டுகள் சரிந்தாலும், பொல்லார்ட் மட்டும் மனஉறுதி தளராமல் போராடினார். சென்னை பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ விக்கெட்டுகளை வீழ்த்திய அதே வேளையில் ஓட்டங்களையும் சகட்டுமேனிக்கு வாரி இறைத்தார். 18–வது ஓவரில் 4 பவுண்டரி உள்பட 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதே போல் அவரது கடைசி ஓவரில் பெல்லார்ட் இரண்டு இமாலய சிக்சருடன் மும்பையின் இன்னிங்சை அட்டகாசமாக முடித்து வைத்தார்.

149 ஓட்டங்கள் இலக்கு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் சேர்த்தது. பொல்லார்ட் 60 ஓட்டங்களுடன் (32 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை அணியின் களத்தடுப்பு என்று மெச்சத் தகுந்த வகையில் இல்லை.

டோனி 2 பவுண்டரிகளை தடுத்து நிறுத்த தவறினார். இதே போல் அஸ்வினும் இரு பிடியெடுப்பு வாய்ப்புகளை வீணடித்தார். களத்தடுப்பில் அசத்தியிருந்தால், மும்பையை இதைவிட குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

சென்னை தரப்பில் பிராவோ 4 விக்கெட்டுகள் அள்ளினாலும், 42 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். அதே சமயம் 3 ஓவர்களில் 12 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து சிக்கனமாக பந்து வீசிய அல்பி மோர்கலுக்கு டோனி வாய்ப்பு வழங்காதது ஆச்சரியம் அளித்தது.

பின்னர் 149 ஓட்டங்கள்; இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய சென்னை அணி, 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

ஆரம்ப ஆட்டக்காரர் ஹஸி 1 ஓட்டத்துடனும், ரெய்னா, பத்ரிநாத், ஜடேஜா, மோரிஸ் ஆகியோர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். முரளி விஜய் 18 ஓட்டங்களுடனும், பிராவோ 15 ஓட்டங்களுடனும், மோர்கல் 10 ஓட்டங்களுடனும் அஸ்வின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒற்றை நபராக அதிரடி காட்டி ஆடிய டோனியால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. டோனி 63 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை எடுத்து தோல்வியுற்றது. மும்பை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் சென்னை அணியின் கனவு தகர்ந்தது. மும்பை அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by