பள்ளிவாசல்கள் மீது கை வைக்கும் போது தான் சமூகத்தின் ஆத்திரம் பன்மடங்கு அதிகரிக்கின்றது. ஆனால், அதனை இன்னும் சரிவர புரிந்துகொள்கிறார்கள் இல்லை என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொழும்பு – 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் புதன்கிழமை (05) இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
இக் கூட்டத்தில் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் வேட்பாளர்களான அர்ஷாத் நிஸாம்தீன், நைஸர் ஹாஜியார், ஹஸன் அல் – பாஸி ஷெரிப், அப்துல் ஹை, பீ.எம். முர்ஷிதீன், நிஸாம் ஆகியோரும் உரையாற்றினர்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
என்னைத் தாக்கிப் பேசுவதில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச என்பவர்களோடு அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இணைந்து கொண்டிருக்கிறார்.
‘ஏன் இவர் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்? விட்டு வீசிபோட்டு வெளியில் வரவேண்டியது தானே?’ என்று ரிசாத் கூறுகிறார்.
என்னை அரசாங்கத்தை விட்டு வெளியே போகச் சொல்வதற்கு இந்த ரிசாத் பதியுதீன் யார்? அவரை நான் ஒரு சதத்திற்குக் கூட கணக்கில் எடுப்பதில்லை.
அப்படி எடுத்தவுடனேயே வெளியிறங்கிப் போவதற்கு நாங்கள் சும்மா வரவில்லை. ஜனாதிபதிக்கு பெரிய உதவியொன்றைச் செய்துவிட்டுத்தான் அரசாங்கத்தில் இருக்கிறோம்.
நாங்கள் செய்த பேருபகாரத்தின் காரணமாகத்தான் இந்த ஆட்சி நீடிக்கின்றது. 18ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கியதன் பயனாகவே, ஜனாதிபதி 3ஆவது முறையாகவும் அதற்கு போட்டியிடுவதற்கு வழிபிறந்திருக்கிறது.
அதன் காரணமாகத்தான் அவரது கட்சிக்குள்ளேயே எல்லோரும் அடங்கிப் போயிருக்கிறார்கள். அல்லாது விட்டால் அவர்களில் முக்கால்வாசிப் பேர் அவரை கைவிட்டு விட்டு போயிருப்பார்கள். அதை அவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனநாயக நாடொன்றில் அமைச்சரவை இருப்பது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கதைப்பதற்குத்தான். அங்கு எனது சமூகத்துக்காக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.
அடுத்த ஆண்டாகும் பொழுது நாம் நாடு தழுவிய முக்கியமான தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதற்காக அறிகுறிகள் தென்படுகின்றன.
அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, பொதுத் தேர்தலாகவோ இருக்கலாம். இத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் நோக்கமும் அதற்கு முன் ஆயத்தமாக மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்பதை நாடி பிடித்து பார்ப்பதற்குத் தான்.
நாட்டில் வாழும் மொத்த சனத்தொகையில் நூற்றிற்கு நாற்பது சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாகாணங்களை உள்ளடக்கிய மேல்மாகாணத்தில்தான் வசிக்கிறார்கள்.
எஞ்சிய அறுபது சதவீதத்தினர்தான் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வசிக்கின்றனர். அதனால்தான் இந்த மேல் மாகாண சபைத் தேர்தல் மிக முக்கியமானது.
பள்ளிவாசல்களில் கை வைப்பதால் ஆத்திரம் அதிகரிக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. விடயங்களை மூடி மறைத்து எங்களால் கதைக்க முடியாது. அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு, அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
கொஹூவளை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட தெஹிவளை கடவத்தை வீதியில் அமைந்துள்ள தாருஸ் ஷாபி பள்ளிவாசல் தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சென்று ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் என்ற காரணத்தினால் இங்கு அதைப்பற்றி என்னால் பேச முடியாது.
இந்த நாட்டில் பள்ளிவாயல்களை நிர்மாணிப்பதற்கு வக்பு சபை அனுமதி வழங்குகிறது. நான் இலங்கையில் முஸ்லிம் சமய, கலாசார விவகார அமைச்சராக மூன்று தடவைகள் பதவி வகித்திருக்கிறேன்.
சந்திரிகாவின் ஆட்சியிலும், ரணில் விக்கிரசிங்க பிரதமராக இருந்த பொழுதும் அந்தப் பதவிகளை மாறி மாறி நான் வகித்திருக்கிறேன். ஆனால், அப்பொழுது இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம் கொடுக்கவில்லை. ஆனால், இப்பொழுது எங்கிருந்தோ பிரச்சினைகள் உருவாகின்றன.
இப்பொழுது புத்தசாசன அமைச்சின் செயலாளர் இவ்வாறான விடயங்களில் வீணாகத் தலையிடுகிறார். அவருக்கு அதற்கான எந்த உரிமையும் இல்லை. எந்தப் பள்ளிவாசலை எங்கு அமைப்பதென்று வக்பு சபைதான் தீர்மானிக்க வேண்டும். வக்பு சபை அனுமதித்திருந்தும், அதற்கு மாற்றமாக பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்புகிறார்.
இதை நான் சும்மாவிடப் போவதில்லை. அதைப்பற்றிப் பேசத்தான் போகிறேன். அப்பொழுது எனக்கு எதிராக இன்னொரு பிரச்சினை கிளப்பப்படும் என்பது எனக்குத் தெரியும்.
பௌத்தாலோக மாவத்தைக்கு அருகில், எம்.எச்.எம் அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கும் பிரச்சினையொன்று வந்தது.
ரஷ்யத் தூதரக காணி தொடர்பில் அங்கு பிரச்சினைகள் தோன்றியது. அது பற்றி அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அது பற்றி ஆராய்வதற்கான குழுவில் என்னையும் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.
இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதைப்பற்றி நான் பகிரங்கமாக பேச விரும்பவில்லை. பொதுவாக இவற்றைப் பற்றி பேசலாம். யார் குற்றியாவது அரிசியாக வேண்டும்.
சில விடயங்களில் சில வேளைகளில் நாங்கள் முட்டி மோதிக்கொண்டு போவதை விடவும், பேசித் தீர்ப்பதற்கு வழிவகைகள் இருந்தால் அவற்றைப் பற்றி உரிய கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிவாசல்கள் மீது கை வைக்கும் போது தான் சமூகத்தின் ஆத்திரம் பன்மடங்கு அதிகரிக்கின்றது. ஆனால், அதனை இன்னும் சரிவர புரிந்துகொள்கிறார்கள் இல்லை. இவற்றினால்தான் சர்வதேசத்தின் கவனம் எமது நாட்டின் பக்கம் திரும்பியிருக்கின்றது.
முஸ்லிம் நாடுகளுக்கு நாங்களாகச் சொல்ல வேண்டியதில்லை. அரபு நாடுகளுக்கு போனால் தெரியும். அங்குள்ள பத்திரிகைகளில் இங்கு நடக்கும் சம்பவங்களைப் பற்றி தாராளமாக செய்திகள் வெளிவருகின்றன. நாங்கள் சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்றார்.
Post a Comment