ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமையை
மீண்டும் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அரச உயர் மட்டத்
தகவல்கள் தெரிவிப்பதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற பிரபல
எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரும் சில மதத்தலைவர்களும் கடந்த வாரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் படி 2010 ஆம் ஆண்டு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சரத் பொன்சேகா 2012 ஆம் ஆண்டு மே மாதம்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்ட போதும் ஏழு
வருடங்களுக்கு பறிக்கப்பட்ட குடியுரிமை வழங்கப்படவில்லை. தேர்தல்
நடவடிக்கைகளில் அவருக்கு ஈடுபடக் கூடியதாகவிருந்த போதும் தேர்தலில்
போட்டியிடும் உரிமை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment