கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து நிந்தவூரில் மக்கள்
முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதேசவாசிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் நேற்றிரவு
இடம்பெற்ற மோதலினை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன
குறிப்பிட்டார்.
விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் நிந்தவூர் பகுதிக்கு நேற்றிரவு
சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நிந்தவூர் பகுதியில் கடந்த நாட்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் இவர்கள்
தொடர்புபட்டிருக்கலாம் என பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால்
நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசேட அதிரடிப் படையினர் தவறிழைத்தமை விசாரணைகளில்
கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும்,
பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவையும் மீறி, அமைதியை பாதிக்கும் வகையில்
செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன
குறிப்பிட்டார்.
Post a Comment