
சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மேயரை அவரின் பதவிக்காலம் பூர்தியாகும் முன்பே பதவி விலகும்படி வற்புறுத்தப்படுமேயானால் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தியிலும் பாதிப்புற்றிருக்கும் சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபையை வேண்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் கழகங்கள் மற்றும் விளையட்டுக் கழகங்கள் அடங்கிய பல இளைஞர் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது மக்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சாய்ந்தமருதில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் நடைபெறுவதில்லை குப்பைகள் சீராக அகற்றப்படுவதில்லை தெரு லாம்புகள் வீதிகளுக்கு பொருத்தப்படுவதில்லை என ஆத்திரப்பட்டு தனியான பிரதேச சபைக் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்துவதற்கும் இதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கைகளை முன் வைக்க முனைந்ததாகவும் இந் நடவடிக்கைகள் எடுத்த அந்தக் கால கட்டத்தில் கல்முனை மாநகர சபைத் தேர்தல் நடைபெற்றதால் எங்கள் போராட்டம் இடை நிறுத்தப்பட்டதாகவும் இளைஞர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் இன்று தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபைத் தேர்தல் கூட்ட மேடைகளில் கட்சி முக்கியஸ்தர்களால் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுபவரே கல்முனை மாநகர சபை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதி அன்று தரப்பட்டதால் சாய்ந்தமருதுக்கு என தனிப் பிரதேச சபை கோரும் போராட்டத்தைக் கைவிட்டு சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிபுக்கு கூடுதலான வாக்குகளை சாய்ந்தமருதிலிருந்து அளித்தோம். மேயரையும் இங்கு பெற்றோம்.
இன்று என்ன நடைபெறுகின்றது? மக்களின் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டவரை பதவி விலகும்படி வேண்டப்படுகின்றார். சாய்ந்தமருது மக்களின் விருப்பம் இங்கு நிராகரிக்கப்படுகின்றது. எனவே சாய்ந்தமருது மக்களின் விருப்பம் நிறைவேற தனியான பிரதேச சபைக் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இளைஞர்களாகிய எமக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. எனவும் இளைஞர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.
17 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சாய்ந்தமருதில் மொத்தமாக 25 ஆயிரத்து 500 மக்களையும் ஏறக்குறைய 7000 குடும்பங்களையும் 17000 ற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியுள்ளது.
இங்கு தனியான பிரதேச செயலகம், ஒன்பது அரச பாடசாலைகள், மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதான தபால் அலுவலகம், மூன்று உப தபால் நிலையங்கள், விவசாய விஸ்தரிப்பு நிலையம் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், முக்கியமான அரச தனியார் வங்கிகள் என்பனவற்றைக் கொண்டிருப்பதோடு பல அரச அலுவலகங்களும் சாய்ந்தமருதில் தனியாகச் செயல்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீட்சி பெறாவிடினும் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது. எனவும் தனியான பிரதேச சபைக் கோரிக்கைக்கு இப் பிரதேச மக்களால் ஆதாரம் தெரிவிக்கப்படுகின்றது.
சனத்தொகையில் குறைவாகவும் ஏனைய பொருளாதார, கல்வி, வாழ்வாதார விடயங்களில் குறைந்த மட்டத்திலுமுள்ள பல பிரதேசங்களுக்கு தனியான பிரதேச சபை இருக்கின்ற போது, சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு பிரதேச சபை வழங்கப்பட முடியாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய முடியவில்லை. என்றும் சாய்ந்தமருது மக்கள் அன்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட ஒரு குழப்பமான நிலைமையின் போது ஒரு மாநகர சபை உறுப்பினரின் அறிக்கையிலே தற்போதய மாநகர முதல்வரைப் பதவி விலக்கும் போது சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் தனியான பிரதேச சபைக் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்படலாம் எனவே தற்போதய முதல்வரையே பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துப்பட கூறினார். அதுவே இன்று நடைபெறப்போகின்றது எனவும் இளைஞர் அமைப்புக்களில் உள்ள முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.
எனவே அடுத்த தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு முன் தற்போதய கல்முனை மேயரை பதவி விலகும்படி வற்புறுத்தப்படுமேயானால் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை உருவாக்கித் தரும்படி கோரிக்கை விடுத்து அது நிறைவேற்றித் தரும் வரை போராட்டம் மேற்கொள்ளப்படும் என இளைஞர் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
Post a Comment