(சித்தீக் காரியப்பரின் பேஸ்புக்கிலிருந்து)
“பிரதேசவாதத்தை விதைத்து பதவி பெறுபவன் தான் அல்ல“ என கல்முனையின் பிரதி
மேயரும் எனது சகோதரருமான (தம்பி) நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.
தனது பிரதேச மக்களின் கருத்தைக் கேட்டுத் தான் மேயர் பதவியை இராஜினாமாச்
செய்வேன் என சிராஸ் மீராசாகிப் தெரிவித்தமைக்கே அவர் பதில் இவ்வாறு
அமைந்திருக்கலாம். ஆனால் சிராஸின் கருத்தில் என்ன அப்படி பிரதேசவாதம்
காணப்படுகிறது?
அதிக கூடுதலான வாக்குகளால் சிராஸ் மீராசாகிப் தெரிவு செய்யப்பட்ட ஒருவர்.
அப்படிப்பட்ட ஒருவரை பதவியை இராஜினாமாச் செய் என்பதற்காக அவர் எவ்வாறு
உடனடியாக பதவியை இராஜினாமாச் செய்ய முடியும்? இந்த விடயத்தில் மக்கள்
கருத்து அறிவதில் என்ன பிழை?
அதேவேளை, இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் கீழ் எல்லாம்
சரியாக, புனிதமாக நடக்கின்றனவா? இல்லையே? என்ன அங்கு நடக்கிறது என்பது
எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
என்னைப் பொறுத்த வரை நானும் கல்முனை சாய்ந்தமருதுவைச் சேர்ந்தவன்தான்.
ஆனால் கல்முனை மேயரான சிராஸ் மீராசாகிப்பை நான் நேரில் கண்டதும் இல்லை.
கதைத்ததும் இல்லை. இருப்பினும் அவரின் அளப்பரிய சேவைகளை ஓர் ஊடகவியலாளர்
என்ற வகையில் நான் கொழும்பிலிருந்தே தெரிந்து கொள்ள அதிக சந்தர்ப்பம்
கிட்டியுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச மக்கள் மட்டுமல்ல கல்முனை நகர சபைக்கு உட்பட்ட அனைத்து
மக்களும் இன்று இன, மத ,சமய வேறுபாடின்றி சிராஸ் மீராசாகிபை
நேசிக்கின்றனர். இதற்கான காரணம் அவர் கல்முனையில் செய்து வரும் இமயமலைக்கு
ஒப்பான சேவைகளும் நிகழ்த்தி வரும் எவரெஸ்ட் சாதனைகளுமே ஆகும்.
இவ்வாறான நிலையில் நிஸாம் காரியப்பர் அவர்களே, உங்களை மேயராக நியமிக்கும்
விடயத்தில் மக்கள் எந்தளவு விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்களோ தெரியாது.
உங்களிடமிருந்து சேவைகளை எதிர்பார்ப்பது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு
ஆசைப்பட்ட கதையாகத் தான் முடியும்.
உங்களது நடவடிக்கைகள், போக்குகள், கொழும்பு கறுவாக்காட்டு
அரசியல்வாதிகளுக்கே பொருந்துமே தவிர எங்களைப் போன்ற கிராமத்தவர்களுக்குச்
சரிபட்டு வராது. உங்களுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டு விட்டால் இப்போது
உங்களுக்கு வளர்ந்துள்ள இரண்டு கொம்புகளுடன் மூன்றாவது கொம்பும் முளைத்து
விடும்.
மேலும் நீங்கள் மக்களைத் தேடிச் செல்லும் நபரும் அல்ல. மக்கள் உங்களைத் தேடி வந்தாலும் உதவி செய்யும் முகமும் மனமும் உங்களிடமில்லை.
“சேர் இந்த விசயத்தைச் செய்து தாருங்கள்“ என ஒரு கிராமத்தவன் தமிழில்
உங்களைக் கேட்டால்.. அவனுக்கு நீங்கள் ஆங்கிலத்தில் தான் பதில்
சொல்வீர்கள். இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட அரசியல். இதற்கு மேலாக நீங்கள்
எந்தச் சேவையையும் மக்களுக்குச் செய்யப் போவதும் இல்லை..
இதன்போது ஒரு பழைய பாடல் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.. அதாவது “மக்கள்
நலம்.. மக்கள் நலம் என்று கூறுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில்
கொள்வார்.. என்பதே அந்தப் பாடல்..
உங்களை ஹக்கீம் துரை மேயராக நியமிக்கப் போவது என்பது அது அவர் கல்முனை மக்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம்.
ஹக்கீம் துரை மத்திய அரசின் ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு கூட தேசிய
நிதி ஒதுக்கீடுகளில் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக்கு எதனையும் செய்யாதா
நிலையில் உங்களை மேயராக்கி உள்ள அபிவிருத்தி திட்டங்களையும் இல்லாமல்
செய்யப் பார்க்கிறார் போல்.
மாமனிதர் அஷ்ரஃப் மறைவுக்குப் பின்னர் ஹரீஸ் எம்.பியும் சிராஸ்
மீராசாகிபும் கல்முனைக்கு கிடைத்திராவிட்டால் கல்முனை பிரதேசம் இன்றும்
இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஒரு கிராமப் பிரதேசம் போன்றே
காட்சியளித்திருக்கும் என்பதனையும் இங்கு கூறிக் கொள்கிறேன்.
ஆகவே, உங்கள் நலனுக்காக கல்முனையின் தலைவிதியை மாற்றி எழுதி விடாதீர்கள்.
இறைவன் கூட உங்கள் செயலை ஏற்கமாட்டான்.தயவு செய்து மேயர் கனவை மக்கள் நலன்
கருதி மறந்து விடுங்கள் எனது தம்பியாரே!
(தொடரும்)

Post a Comment