
கல்முனை மேயர் பதவியிலிருந்த சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்வார் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியை இராஜினாமா செய்வார் எனவும் இதனூடாக கட்சி ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேயர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதற்கு மேயர் சிராஸ் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் இந்த கூட்டத்தில் கூறினார்.
கல்முனை மேயர் பதவியிலிருந்த சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக், கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் ஒன்பது மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எனினும் இந்த கூட்டத்தில் கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றகீப் மற்றும் எம்.சாலிதீன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment