எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
ஆதவளிக்க முன்வந்தமை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எமது
தீர்மானத்தின் பெறுமானத்தை தேர்தல் முடிவுகளில் கண்டு கொள்ளலாம் எனப்
பீ.எம்.ஜே.டி யின் ஊடகப் பேச்சாளர் இர்பான் காதர் தெரிவித்தார்.
பீ.எம்.ஜே.டி யின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அவர் தொடர்ந்தும்
கூறுகையில், எமது தாய்நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும்;,
சிறுபான்மையினர் தற்போது எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் குறித்து அரசு உரிய
நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்குத் எங்களது கவலையைத்
தெரிவிக்குமுகமாகவுமே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்
கட்சிக்கு எமது ஆதரவைத் தெரிவிக்க முன்வந்தோம்.
எமது அமைப்பு பல சமூகநல அமைப்புக்கள், முக்கிய நபர்களுடன் ஐம்பதுக்கும்
மேற்பட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே மேற்படி தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் காலப் பிரிவில், கண்டி மாவட்டத்தில்
இருக்கின்ற எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, எமது அமைப்பின் தீர்மானம்
குறித்தும், கொள்கைகள் குறித்தும் விளக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அக்குறணைக்கு வெளியில் உள்ள முக்கிய ஊர்களில் இயங்குகின்ற சிவில்
அமைப்புக்கள், தனிநபர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் எம்மைச்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அச்சந்திப்புக்களின் போது, அவர்களது
ஊர்களுக்கு இந்தக் கொள்கையை விஸ்தரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதேபோன்று, கண்டி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலும் இருந்து எமக்கு
அழைப்புக்கள் வந்துள்ளன. அவற்றினூடாக மக்களை விழிப்புணர்வூட்டி, மக்களது
வாக்குப் பலத்திற்குப் பெருமானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான
முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம். எமது செயற்பாடுகள், எதிர்வரும் மாகாண
சபைத் தேர்தல் முடிவில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொடர்தேச்சையாக அரசியல் ரீதியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ள கண்டி மாவட்ட
மக்கள் மத்தியில், நல்லதொரு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றமையை
எமது கலந்துரையாடல்களின் போது உணர முடிகின்றது. எனவே, எமது செயற்பாடுகள்
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் நல்ல செல்வாக்கைச்
செலுத்தும் என்பது நிச்சயம்.
இதேவேளை, இம்மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்ற விகிதாசாரத்தை
அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளோம்.
இத்தீர்மானம் போட்டியிடுகின்ற அனைவருக்கும் நல்ல பிரதிபலனை அளிக்கும் என
எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Post a Comment