
கொழும்பில்
இடம்பெறுகின்ற பாதுகாப்பு செயலமர்வில் பேசும் போது பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ இஸ்லாமிய தீவிரவாதம் இன்று உலகை
ஆட்டிப்படைப்பதாகவும், இந்தப் பிராந்தியத்திலும் அது தீவிரமாகப் பரவி
வருவதாகவும் இலங்கையில் உள்ள சில பிரிவினரும் அதனால் ஈர்க்கப்பட்டுள்ளமை
பற்றி பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை நான் மிக
வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உலக
நடப்பு விவகாரங்கள் பற்றியும் அவருக்குள்ள மந்தபுத்தியையே இது
பிரதிபலிக்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலும்
அவமதிக்கும் வகையிலும் இந்தக் கூற்று அமைந்துள்ளது.இதனை இலங்கையில் உள்ள
ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கண்டிக்க வேண்டும்
என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்
அசாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து
நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பின் சார்பாக கொழும்பில் நேற்று
(04.09.2013) நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்று உரை
நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் தொடர்ந்து பேசும்போது:
அரசாங்கத்துக்கு
வக்காளத்து வாங்கும் முஸ்லிம் காங்கிரஸின் திருகுதாளத்தை முஸ்லிம் சமூகம்
இன்று நன்கு உணர்ந்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் எந்தவொரு
உண்மையான முஸ்லிமும் இந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டான். மூன்று
மாகாணங்களிலும் ஒன்றிலேனும் அவர்கள் ஒரு ஆசனத்தையும் வெல்லப் போவதில்லை.அது
நிச்சயம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அரசியல் குத்துக்கரணம் இன்று
மக்களுக்கு அத்துப்படியாகிவிட்டது. அதேபோல்தான் அந்தக் கட்சியின் கிழக்கு
மாகாண சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும்,ஆளுக்கு ஒரு திசையில்
சென்று தமது சட்டைப் பைகளை இயன்ற வரையில் நிரப்பிக் கொள்வதையே
குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டார்.
Post a Comment