
முஸ்லிம் சமூகத்திடம் தங்களின் கொள்கையையோ அல்லது இதுவரை தாங்கள் சமூகத்துக்கு செய்துள்ள நல்லவற்றையோ கூறி நேரடியாகவும் நேர்மையாகவும் வாக்குகளை கேட்கும் தகுதியுற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாட கையாண்டுள்ள கபட நாடகமே ஹக்கீம்-பஷீர் முறுகல் நிலையாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கெலிஓய, மஹியாவ, முருத்தகஹமுல்ல, வட்டதெனிய, படுபிடிய ஆகிய பகுதிகளுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“கடந்த வருடம் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த போது அரசுக்கு எதிராக வாலைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிய முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
அரசாங்கத்துக்கு தேவை எந்த வகையிலாவது முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதுதான்.
அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி. கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதை பாரிய விவகாரமாக்கி மக்களின் வாக்குகளைச் சுருட்டிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இறுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்து ஒட்டு மொத்த சமூகத்தையும் அடகு வைத்து இன்றும் அதன் தலைமைகளும் மக்கள் பிரதிநிதிகளும் பதவிகளையும் பகட்டுக்களையும் அனுபவித்து வருகின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுவிட்டன. அப்போதெல்லாம் இவர்கள் எங்கு இருந்தார்கள்? என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
இந்த அரசுக்கு நன்கு தெரியும் அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்துள்ள அநியாயங்களுக்காக எந்தவொரு முஸ்லிமும் அரசுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று. ஆனால் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காது என்பதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் அரச தரப்பு தயாராக இல்லை. எப்படியாவது முஸ்லிம்களின் வாக்குகளை கபடத் தனமாக சூறையாடும் முயற்சியை அரசாங்கம் விடப் போவதில்லை.
அதற்காக அவர்கள் பாவிக்கும் ஆயுதம் தான் முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்பது போல் நாடகமாடி உங்கள் வாக்குகளை சூறையாடிக் கொண்டு இறுதியில் தங்களது சொந்த நலன்களுக்காக அரசுடன் பேரம் பேசி அரசாங்கத்தின் கரங்களைத் தான் பலப்படுத்துவார்கள்.அவர்களுக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
இந்த கபடத்தனத்தை கச்சிதமாக அரங்கேற்றுவதற்காக அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள கதைதான் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றார்.
எனவே அவரை கட்சியில் இருந்து நீக்கப் போகின்றோம் என்று.பஷீர் அரசுக்கு ஆதரவாக உள்ளார் என்பதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்குவதாயின் கட்சித் தலைவர் ஹக்கீமை என்ன செய்வது?
கிழக்கு மாகாண சபையின் ஒட்டுமொத்த அமைச்சரவை உறுப்பினர்களையும் என்ன செய்வது? அவர்கள் எல்லாம் அரசுக்கு எதிராகவா இருக்கின்றனர்?
அரசுக்குள் இருந்து கொண்டே அமைச்சரவை சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு பஷீர் மட்டும் கட்சிக்கொள்கைக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் இருக்கின்றார் என்று கூறுவது வேடிக்கை அல்லவா?
பஷீருக்கும் ஹக்கீமுக்கும் முறுகல் நிலை தோன்றியிருப்பதாகக் கூறுவது மக்களை ஏமாற்ற முஸ்லிம் காங்கிரஸ் கையாளும் தந்திரம்.இது நாட்டின் எந்தப் பகுதி முஸ்லிம்களிடமும் இனிமேல் எடுபடாது.
வெளியே அரசியல் முறுகல் இருப்பது போல் காட்டிக் கொண்டு உள்ளே இருவரும் ஒய்யாரமாக பேசிக் கொள்வார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது பரம இரகசியம்.அந்த இரசகியம் இருக்கின்ற வரை பஷீருக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஆசனமும் நிச்சயம்.
எனவே தங்களது சேவைகளைச் சொல்லி,தாங்கள் சமூகத்துக்கு ஆற்றிய நன்மைகளைச் சொல்லி,சமூகத்துக்கு தாங்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளைப் பறைசாற்றி வாக்குகளைப் பெற முடியாத முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவரை பலி கொடுத்து முஸ்லிம்களின் வாக்குகளையப் பெற முயற்சிப்பது கேவலமாகும்.
இது அந்தக் கட்சியின் வங்குரோத்து நிலையின் உச்ச கட்டத்தையே எடுத்துக் காட்டுகின்றது” என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment