Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

முஸ்லிம்களிடம் கோதபாய பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

Friday, September 60 comments


இலங்கை வாழ் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துகளை அவர் உடனடியாக வாபஸ் பெறுவதுடன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோர முன்வர வேண்டும் என சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கருத்தானது  எதிர்காலத்த்தில் மிகவும் பாரதூரமான விபரீதங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

"இந்த நாட்டில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை அடிப்படை வாதிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் அதற்கு முஸ்லிம் நாடுகள் உதவியளித்து வருகின்றன எனவும் பொது பலசேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த பேரினவாத அமைப்புகள் கோஷம் எழுப்பிக் கொண்டு வன்முறைகளைப் பிரயோகித்து வருகின்ற நிலையில் அதே கருத்தை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் வெளியிட்டிருப்பதானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கருத்தை அமைச்சர் மேர்வின் சில்வா போன்ற ஒருவர் சொல்லியிருந்தால் அதனை பாரதூரமாக நோக்க வேண்டியிருக்காது. ஆனால் ஜனாதிபதியின் சகோதரரும் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான அதிபதியுமான பொறுப்பு வாய்ந்த ஒருவர் இதனைக் கூறியிருப்பதானது பெரும் பாரதூரமான விடயமாகும்.

பௌத்த பேரினவாத அமைப்புகள் மேற்கொள்ளும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னணியில் இந்த அரசாங்கமும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே இருக்கின்றனர் எனும் சந்தேகத்தை இன்னும் பல மடங்கு உறுதிப்படுத்துவது போல் அவரது கருத்து அமைந்துள்ளது.

இந்நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் கொடூரப் பிடியில் இருந்து இம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சுமந்திருக்கின்ற பாதுகாப்பு செயலாளர், முஸ்லிம்கள் மீது இன்னும் பேரின வக்கிரத்தை ஊட்டி வளர்க்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் தீவிரவாதத்தில் ஈடுபடவும் இல்லை அதனை ஆதரிக்கவும் இல்லை. அத்துடன் இலங்கை முஸ்லிம் ஒருவர் தீவிரவாதி என்ற அடையாளத்துடன் உலகின் எப்பாகத்திலும் இதுவரை கைது செய்யப்பட்ட வரலாறும்  பதிவாகவில்லை.

உலகில் சில முஸ்லிம் நாடுகளில் தீவிரவாதம் காணப்படுகின்ற போதிலும் இலங்கை முஸ்லிம்கள் அதில் சிக்கிக் கொள்ளவில்லை என்பதை எம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதும் காத்தான்குடி, ஏறாவூர், மூதூர் போன்ற முஸ்லிம் கிராமங்கள் புலிகளால் தாக்கப்பட்ட போதும் கூட முஸ்லிம்கள் ஆயுதத்தையோ தீவிரவாதத்தையோ நாடவில்லை.

அது மாத்திரமல்லாமல் அண்மைக்காலமாக இந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரினவாதிகளால் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, தம்மீது வன்முறைகள்  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதும் முஸ்லிம்கள் எவ்விதத்திலும் மாற்று வன்முறைகளில் ஈடுபடாமல் மிகவும் சகிப்புத் தன்மையுடன் இருந்து வருவதை முழு உலகமும் அறியும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எந்தளவுக்கு சமாதான விரும்பிகள் என்றால் தம்மீதான காட்டுமிராண்டித் தனங்களுக்கு எதிராக ஒரு கண்டனப் பேரணியையோ ஆர்ப்பாட்டத்தையோ மேற்கொள்ளவில்லை. ஏனெனில் நாட்டின் தேசிய ஒருமைப்பாடிற்கும் இன ஐக்கியத்திற்கும் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்கின்ற ஓர் உத்தம நோக்கம் முஸ்லிம்கள் மத்தியிலும் அவர்களை வழிநட்டத்துகின்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் தலைமைகள் மத்தியிலும் காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு அமைதியான, கட்டுக்கோப்பு மிக்க சமூகத்திற்கு தீவிரவாத முத்திரை குத்தி ஏதோ ஒரு நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு சிங்களப் பேரினவாதிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பாதுகாப்பு செயலாளரும் அதற்கு தீனி போடும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பததில் சந்தேகம் கிடையாது. இதனை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உணர்ந்து கொண்டு தான் வெளியிட்டிருக்கும் கருத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும்என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் வலியுறுத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்" என்று முயீஸ் வஹாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by