
முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றினால் அரசாங்கம் விளைவுகளை அனுபவிக்க நேரும்!
வட மாகாணசபை தேர்தலுடன் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி விடும் என்று கூறப்படுகின்றது.
அவ்வாறு வெளியேற்றினால் அதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்தார்.
புதன்கிழமை வடமாகாணத்தில் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீம் புளிச்சாக்குளத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
வடமாகாண சபை தேர்தலில் அரசை பலவீனப்படுத்துவதற்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவில்லை. நடுநிலைமையிலிருந்தே போட்டியிடுகின்றது.
இந்நிலையில் அரசு எம்மை விமர்சிக்கும் நோக்கோடு பார்க்கிறது. நாம் அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடாமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறுதலடைவதாகத் தெரிகிறது.
வட மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கயிறு இழுத்தல் போட்டியொன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலை பார்வையாளராக இருப்பதோடு தனது அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லாது தனித்துவ அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கம் அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி எல்லா விடயங்களிலும் எம்மை அடிபணிய வைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.
வட மாகாணசபை தேர்தலில் எங்களை அரசுடன் சேர்ந்து போட்டியிடச் செய்து எமது முதுகில் ஏறி சவாரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கட்சியில் உள்ளவர்களும் இதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள்.எம்மை பகடைக்காயாகக் கருதினார்கள். இதற்கு கட்சியின் அபிமானிகள், விசுவாசமுள்ளவர்கள் இடமளிக்கவில்லை.
எமது கட்சியை உள்ளே வைத்துக் கொண்டே பலவீனப்படுத்துவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. நாம் சரணாகதி அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஏமாந்த சோனகிரிகளுமல்ல.
வட பகுதியில் இன்று இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. மன்னார் முசலிப் பிரதேசத்தில் சிலாவத்துறையில் உள்ள கடற்படை முகாம் அந்தக் கிராமத்தையே உள்வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
இவ்வாறான கெடுபிடிகளை தவிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசியல் வேறுபாடுகளை மறந்து உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.
எமது அரசியல் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது உரிமைகளுக்கு இணைந்து குரல் கொடுப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
இன்று உரிமைகளுக்காக சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
Post a Comment