
மகிந்தசிந்தனை வேலைத்திட்டத்தின்கீழ் நிர்மானிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் எதிர்வரும் 01.09.2013அன்று அதிமேதகு ஜனாதிபதியினால் திறக்கப்படுகின்றது. இத்துறைமுகம் தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராமங்களான ஒலுவில் பாலமுனை எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது துறைமுக அமைச்சராக இருந்த மறைந்த முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்துறைமுகம், பின்னர் மகிந்த ராஜபக்ஸ்ஸ ஜனாதிபதியாக வந்தவுடன் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் துரிதசெயற்றிட்டத்தின் அடிப்படையில் மீண்டும் புத்தாக்கத்துடன் இன்றைய ஜனாதிபதி தலைமையில் அன்று ஆரம்பிக்கப்பட்டன.
இத்துறைமுகம் வர்த்தக மற்றும் மீன்பிடி துறைமுகமாக அமையவுள்ளதாகவும், இதன் கடல் எல்லை 14 ஹெக்ரெயர்களாகவும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு உத்தேச நிர்மாணச் செலவு 46.1 மில்லியன் யூரோக்கள் எனவும், இந்தத் தொகையை டென்மார்க் அரசாங்கம் வட்டியில்லாக் கடனாக வழங்கியுள்ளதாகவும் இக்கடனை துறைமுகம் செயற்படத் தொடங்கி 06 மாதத்திலிருந்து 10 வருடங்களுக்குள் கடனை அடைப்பதாகவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பமான இந்த துறைமுகக் கட்டுமான வேலைகள், 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் நிறைவடையும் என்கிற வகையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஆயினும் பல மாதங்களுக்கு முன்னரே துறைமுகப்பணி முடிவடைந்திருந்த போதிலும் தற்போதுதான் இதனை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படுகின்றது. துறைமுகப் பணியின் கட்டுமானங்களை எம்.ரி.ஹொஜ்காட் எனும் டென்மார்க் நிறுவனம் பெறுப்பேற்றிருந்தது.
அதேவேளை துறைமுக அபிவிருத்திக்காக கொள்வனவு செய்யப்பட்ட காணி உரிமையாளர்கள் பலருக்கு அவர்களின் நிலத்தினது விஸ்தீரணத்துக்கேற்ப இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்கிற பிரச்சினைகளும் எழுந்திருந்தன. இந்நிலையில் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டின் ஒரு பகுதியினை முதற்கட்டமாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்தை அண்மையில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் றோஹித அபே குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, துறைமுகங்களின் தவிசாளர் சாலித பிரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது முப்பத்தைந்து காணிச் சொந்தக்காரர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் முதற்கட்ட கொடுப்பனவாக பேர்ச் ஒன்றுக்கு ரூபா 30,000 வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. உரிய மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அதற்கேற்ப இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை இத்துறைமுகம் ஆரம்பிக்கப்படுகின்றபோது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்புக் கிட்டும் எனவும் கூறப்படுகின்றது. இருப்பினும் இன்று திறக்கப்படுகின்ற ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள கிராமங்களில் வாழும் படித்த இளைஞர்கள், யுவதிகள் வேலைவாய்ப்பற்று காணப்படுகின்றனர். இவர்களையும் இதில் இணைப்பதற்கான முயற்சிகளை இப்பிராந்திய அரசியல்வாதிகள் ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கவனமெடுத்து செயற்படுவார்கள் என நம்புவதாக தொழில்வாய்ப்பற்ற நிலையில் காணப்படும் இளைஞர்கள் கருதுகின்றனர்.
Post a Comment