Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

தேர்தலை வென்று வரும்படி மன்மோகன் கூட்டமைப்புக்கு சொன்னார் - விக்னேஸ்வரன்

Wednesday, August 280 comments

தேர்தலை வென்று வரும்படி மன்மோகன் கூட்டமைப்புக்கு சொன்னார் - விக்னேஸ்வரன்
(பிபிசி)
வட மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பு தினத்தில் சிலர் வெளிநாடுகளிலும் கொழும்பில் இருக்க கூடும், சிலர் வர முடியாது இருக்ககூடும். இந்நிலையில் எந்தெந்த குடும்பத்தில் எவர் எவர் எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் எல்லாம் இராணுவத்தின் வசம் இருக்கின்றது.

ஆகவே அவர்கள் சார்பாக வேறு எவரையும் கூட்டிவந்து கள்ள வாக்கு போடுவதற்கு வாய்ப்புள்ளதால் அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டும் என வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எவ்வித அதிகாரமும் இல்லாத மாகாணசபையில் ஏன் போட்டியிடுகின்றீர்கள் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றது.

முதன் முறையாக வட மாகாணத்தை மையமாக வைத்து இந்த தேர்தல் இடம்பெறுகின்றது. அதாவது 1980ஆம் ஆண்டுகளில் மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் எங்களுக்கு சில சலுகைகளை தருவதாக அரசாங்கங்கள் கூறி வந்தது.

ஆனால் தற்போது 1987ஆம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன் செய்யப்பட்ட உடன்பாட்டின் காரணமாக எங்களுக்கு மாகாண சபை ஓர் அலகாக தரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என எம் மண்ணையும் சேர்த்திருக்கின்றது இந்த வட மாகாண சபை. பாரம்பரிய தமிழர்கள் குரிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என எம் மண்ணைப் பற்றி கூறுவார்கள்.

அவ்வாறாக எம் மண்ணை சேர்த்து வட மாகாணத்தை தந்துள்ளார்கள். ஆகவே வட மாகாண அலகை வைத்து இந்த தேர்தல் இடம்பெறுவது எமக்கு நன்மையை தரும்.

இரண்டாவதாக இது ஜனநாயக முறையிலான தேர்தல். முன்னைய தலைமைகள் ஆயுதம் ஏந்தி தலைமைத்துவத்தை பெற்றதால் உண்மையான தலைமைத்துவம் இல்லை என எமது அரசாங்கங்களும் பிற நாட்டு அரசாங்கங்களும் கூறி வந்தன. அதாவது ஆயுதத்தின் துணை கொண்டு தலைமைத்துவத்தை ஏற்றதால் அது உண்மையான தலைமைத்துவம் இல்லை என்றனர்.

ஆகவே ஜனநாயக முறையிலான இந்த தேர்தல் இடம்பெறும் போது நீங்கள் எங்களை ஆதரிப்பீர்களானால் அமோக வெற்றியை தருவீர்களானால் நாங்கள் உங்களுடைய ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவோம்.

இதனால் தான் இந்திய பிரதமர் எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கூறினார் முதலில் இந்த தேர்தலை வெல்லுங்கள் அதன் பின் நாம் உங்களை பார்த்துக் கொள்கின்றோம், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என அவர் கூறினார்.

இதற்கு காரணம் ஜனநாயக ரீதியாக நாங்கள் வாக்கை பெற்று அந்த நியமனத்தை பெற்றால் உலகம் எங்களை ஏற்றுக்கொள்கின்றது. உங்களுடைய எண்ணங்கைள நாங்கள் பிரதிபலிப்பதாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

ஆகவே நாங்கள் சொல்வதில் ஓர் பலன் இருக்கின்றது. ஓர் வலு இருக்கின்றது. ஓர் சக்தி இருக்கின்றது. நாங்கள் பேசும் போது உங்களுடைய வாக்கு எமக்கு பின்புலமாக இருக்கின்றது.

எவ்வாறு நீங்கள் எமக்கு இந்த பலத்தை தரப்போகின்றீர்கள் என்றால் நீங்களும் ஆயுததாரிகள் தான். இருபத்தியோராம் திகதி உங்களுடைய புள்ளியை பேனாவால் போடும்போது அதுவே உங்களுடைய ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.

அந்த ஆயுதத்தின் பலனாகத்தான் எங்களை நீங்கள் அங்கு அனுப்புகின்றீர்கள். அதனூடாக எமக்கு ஓர் பதவியை அளிக்கின்றீர்கள். அந்த ஆயுதத்தை அனைவரும் பாவிக்க வேண்டும். அந்த ஆயுதத்தின் பலனால் எங்களுக்கு பலம் கிடைக்க வேண்டும். அந்த பலத்தினூடாக நாங்கள் அரசாங்கத்துடனும் பிற நாட்டாருடனும் பிற நாட்டு அரசாங்கங்களுடனும் பேசி நன்மையை பெற்று தரமுடியும்.

எனவே நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஆனால் அது மாத்திரம் போதாது. உங்களுடன் இணைந்த வயோதிபர்கள், நோயாளிகள், விசேடதேவையுடையோர் என வர முடியாதவர்களை கூட அழைத்து சென்று இந்த புள்ளடி அடையாளம் எனும் ஆயுதத்தை பயன்படுத்த உதவி செய்ய வேண்டும்.

ஆகவே அதி முக்கியமான விடயம், பலருக்கு வரமுடியாது இருக்கலாம். எனவே முன்னமே திட்டமிட்டு அவர்களை கொண்டு வந்து வாக்கு இட ஆவன செய்ய வேண்டயது உங்கள் பொறுப்பு. அத்துடன் எமது மாற்று சக்திகள் கூறுவது தாங்கள் செய்தது போன்று நாங்கள் ஒன்றும் செய்வதில்லை என. ஆனால் அவர்கள் செய்தது என்ன?. தெருக்களை அமைத்தார்கள். அது இராணுவத்தின் நன்மை கருத்தி செய்தார்கள். உடனுக்குடன் தெற்கில் இருந்து இராணுவம் வடக்கிற்கு வருவதற்கும் வடக்கில் இருந்து தெற்கிற்கு செல்வதற்கு உரிய நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்வதற்குமே இவைகள் செய்யப்பட்டதுடன் தமிழ் மக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்குமேதான் இதனை செய்தார்கள். இதில் இருந்து வரும் நன்மைகள் அவர்களுக்குதான்.

குறிப்பாக இந்த தெருக்களை சீர் செய்வதற்கு கூட தெற்கில் இருந்துதான் தொழிலாளிகளை கூட்டி வந்தார்கள். ஏனெனில் ஒப்பந்தங்களை எல்லாம் தெற்கில் உள்ளவர்களுக்கே கொடுத்தார்கள். தற்போது எமது பிரதேசத்தில் விளையும் பயிர்களை எல்லாம் குறைந்த விலையில் இந்த தெருக்களால் எடுத்துச்சென்று தெற்கிலே அதிக விலையில் வற்று வருகின்றனர். இதற்கெல்லாம் இந்த தெருக்களே; பயன்பட்டதே தவிர எமக்கு இந்த அபிவிருத்திகள் பயன்பட்டது என கூறுவதில் அர்த்தமில்லை.

அப்படித்தான் அவர்கள் கூறினாலும் யார் இவர்கள். யாருடைய கையாட்கள் இவர்கள். யாருடைய அருவருடிகள் இவர்கள். எங்களை கொன்றவர்களினதும். எங்கள் பெண்களை விதவையாக்கியவர்களதும் கையாட்களே இவர்கள். ஆகவே எங்கள் மண்ணிலே அத்தனை அவலங்ளை ஏற்படுத்தி விட்டு உங்களுக்கு அபிவிருத்தி செய்திருக்கின்றோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பதில் ஓர் வெட்கமில்லையா? என தெரிவித்தார்.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by