நாட்டில் பௌத்த மதத் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பற்ற அச்சம் மிகுந்த ஒரு
சூழல் காணப்படுகின்றது. அரசுக்கு எதிராகவோ அல்லது பொது பல சேனாவுக்கு
எதிராகவோ யாராவது எங்காவது வாய் திறந்தால் போதும் அடுத்த நிமிடம் முதல்
அவரின் பாதுகாப்பு கேள்விக்குரியாக்கப்பட்டு விடுகின்றது. மகியங்கனை
ரோத்தலாவல விகாரையின் நாயக்க தேரர் வடரேக்க விஜித தேரருக்கு இன்று
ஏற்பட்டுள்ள கதியும் இதுதான்.
அவர் பொது பல சேனாவுக்கு எதிராகவும் அவர்களின் முஸ்லிம் விரோதப் போக்கை
கண்டித்தும் சில கருத்துக்களை பொது மேடையில் பகிரங்கமாக முன்வைத்தார்
என்பதற்காக மகியங்கனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து
கொண்டிருந்த போது பிலிமத்தலாவையில் வழிமறித்து நடு வீதியில் வைத்து சுமார்
30 பேர் கொண்ட கும்பல் அவர் மீதும் அவரோடு பயணம் செய்து கொண்டிருந்தவர்கள்
மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதுமட்டுமல்ல கொழும்பு வரை அவர்கள்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பின் தொடரப்பட்டுள்ளனர். இவர் மகியங்கனை நகர
சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமாவார்.
இத்தகையவர்களுக்கே இந்த நாட்டில் இந்தக் கதி என்றால் சாதாரண மக்களின்
நிலையைக் கேட்கவும் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார் தேசிய ஐக்கிய
முன்னணியின் தலைவர் அஸாத் சாலி.
மத்திய மாகாண சபைத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி
சார்பாக ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிடும் அஸாத் சாலி கம்பளை
பிரதேசத்தில் தன்னை சந்தித்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போதே இவ்வாறு
கேள்வி எழுப்பினார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அஸாத்
சாலி,
இதே கண்டி மாவட்டத்தில் கம்பளை நகரில் பேசும் போது தான் ஒரு சிறந்த
ஜனநாயகவாதி என்றும் தன்னை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
விமர்சிக்கலாம் என்றும் அதற்கான ஜனநாயக உரிமையை தான் மக்களுக்கு
அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மார் தட்டிக் கொள்கின்றார். ஆனால் இதே கண்டி
மாவட்டத்தின் இன்னொரு புறத்தில் பொது பல சேனா ஆதரவாளர்கள் தமது தலைவர்களை
விமர்சித்தவர்களை நடு வீதியில் விரட்டி விரட்டி அடிக்கின்றனர்.
அப்படியானால் ஜனாதிபதியை விட இவர்கள் இந்த நாட்டில் சிறப்புரிமை
மிக்கவர்களா? ஜனாதிபதி மக்களுக்கு அளித்துள்ளதாகக் கூறும் ஜனநாயகம் இன்று
பேச்சளவிலும் பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் செய்தி
அறிக்கைகளுக்குள்ளும் தான் அடங்கிப் போய் உள்ளன. உண்மையான ஜனநாயக
சுதந்திரத்தை மக்கள் இழந்து குறிப்பாக சிறுபான்மை மக்கள் இழந்து நீண்ட
நாற்கள் ஆகின்றன.
ஜனநாயக சுதந்திரத்தின் முக்கியமான பண்புகளுள் ஒன்று சமய சுதந்திரமாகும்.
அது இன்று இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு உள்ளது என்று இந்த நாட்டின்
ஜனாதிபதியாலோ அல்லது அரசாங்கத்தின் அமைச்சர்களாலோ முஸ்லிம் மக்கள்
மத்தியில் பகிரங்கமாகக் கூற முடியுமா? நிச்சயம் முடியாது. அந்தளவுக்கு
இன்று முஸ்லிம்களின் சமய உணர்வுகள் இந்த அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற
காடையர்களாலும், காவல்துறையாலும் புண்படுத்தப்பட்டுள்ளன.
எனவே முஸ்லிம்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பாடம் புகட்ட
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நல்லதோர் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
மாகாண சபை தேர்தல் மூலம் நாட்டில் ஆட்சிமாற்றத்தை எற்படுத்த முடியாது அது
உண்மை. ஆனால் அரசின் வீழ்ச்சிக்கான அடிக்கல்லாக இந்த தேர்தலை பயன்படுத்த
முடியும். அதற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் தமது வாக்குகளை வீணாக்காமல்
துணிச்சலான தலைமைகளை இனம் கண்டு அவற்றைப் பயன் படுத்த வேண்டும் என்று அஸாத்
சாலி கேட்டுக் கொண்டார்.

Post a Comment