முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை
அனுஷ்டித்துவரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா
பள்ளிவாசல் மீது நேற்றிரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல்
நடாத்தியதோடு, அங்கு பன்றி
இறைச்சியையும் வீசியெறிந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்,
அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இதுபற்றி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்த நீதியமைச்சர் ஹக்கீம்,
மஹியங்கனை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியுடனும் கதைத்து அங்கு சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அப்
பகுதியில் மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதைப்பற்றி
விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறும் அப் பிரதேசத்திற்குப் பொறுப்பான மின்சார
சபை பொறியியலாளரிடம் அமைச்சர் ஹக்கீம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்தப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்
தொழுகையை நடாத்துமாறும் ஏனைய நாளாந்த சமயக் கடமைகளையும் அச்சமின்றி
நிறைவேற்றுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டுமென்றும் அவர் மேலும்
கூறியுள்ளார்.
இனவாத கும்பல்களால் தலைநகரிலும், நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்
தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும்
அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இவைபற்றி இன்று மாலை நீர்கொழும்பில்
நடைபெறவுள்ள நீதிமன்ற கட்டடத்தொகுதியின் திறப்பு விழாவுக்கு வருகை தரும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக தாம் உரையாடவுள்ளதாகவும் அமைச்சர்
ஹக்கீம் கூறினார்.
Post a Comment