
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முஸ்லிம்களின் தனித்துவமிக்க கட்சியாகக் கூறப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் இந்தக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதனை விட வேட்பாளர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருப்பதனையே காண முடிகிறது. காரணம், வட மாகாணத்தில் இதன் செல்வாக்கு என்பது செல்லாக் காசு ஆகியுள்ளது.
வட மாகாண முஸ்லிம்களுக்கு விசேடமாக, இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களைப் பராமுகமாக நடத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுடன் வடக்கு முஸ்லிம்களிடம் அமைச்சர் றிஷாதின் செல்வாக்கு அதிகரித்தும் காணப்படுகிறது. இவற்றின் காரணமாகவே வேட்பாளர்களைத் தேடும் வேட்டைக்கு இந்தக் கட்சி தள்ளப்பட்டிருக்கலாம்.
பாதிக்கப்பட்ட வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் நிச்சயமாக முஸ்லிம் காஙகிரஸினை ஆதரிக்கமாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தாவது வடக்கில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தையேனும் கைப்பற்றி தனது கௌரவத்தை காப்பாற்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கான தூதுகள் இப்போது ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. இருப்பினும் இந்த முயற்சியானது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது ஒரு ஒரு புறமிருக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்ததனையடுத்து கட்சியின் முக்கியஸ்தரகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வேறொரு எதிர்பார்ப்பும் ஆதங்கமும் தற்போது காணப்படுகிறது. அதாவது, அந்தக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகுதாவூத் குறித்தே இந்த எதிர்பார்ப்பும் ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் அமைச்சர் பதவியை விட்டு விலகுவார் என்ற எதிர்பார்ப்பே இன்று மிகைத்துக் காணப்படுகிறது. ஏனெனில் அவர் நாகரிகமான அரசியல் செய்பவர். தாங்கள் அரசை விட்டு விலகவும் மாட்டோம்.. அமைச்சுப் பொறுப்பைத் துறக்கவும் மாட்டோம் என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வளவுதான் சொன்னாலும் அமைச்சர் பஷீர் அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் தனது அமைச்சுப் பொறுப்பினை இராஜினாமாச் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு கௌரவமிக்க அரசியல்வாதி என்பதால் மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கலாம்.
அதற்கான காரணம், இறுதியாக நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது அந்தத் தேர்தலில் அரசாங்கத்திலிருந்து கொண்டே அதாவது, அமைச்சராக பதவி வகித்து, அரச வளங்களைப் பாவித்த நிலையில் தனித்து நின்று கிழக்கில் போட்டியிட்டது. அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களைச் செய்து வந்தது.
ஆனால், அன்று பிரதியமைச்சராகவிருந்த பஷீர் ஷேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்த பின்னரே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.
தான் ஏன் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தேன் என்பதற்காக அவரால் அன்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
”கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரஸை மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்து பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேன். அரச வளங்கள் மற்றும் நற்பெயரை பயன்படுத்தி கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை.”
அன்று அவர் இவ்வாறு சொன்னதன் அடிப்படையிலேயே இம்முறையும் தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதில் எவ்வித தவறும் இல்லை.
முன்னர் நடைபெற்றது கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமான தேர்தல். ஆனால் இன்று மூன்று மாகாணங்களுக்குத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் தவிசாளர் எனற வகையில் அந்த மாகாணங்களில் இடம்பெறும் தேர்தல் பிரசராக் கூட்டங்களிலும் அவர் உரையாற்ற வேண்டியவராகவுள்ளார்.
அதுவும் தனித்தே தேர்தல் களத்தில் முஸ்லிம் காங்கிரஸ் குதித்துள்ளதால் அரசுக்கு எதிராகவும் அவரும் கருத்துத் தெரிவிக்கவும் வேண்டிவரும். இவ்வாறான சூழலில் அரசு வளங்களைப் பயன்படுத்துவதனை தவிர்க்கவும் முடியாது. ஆகவே, இந்த நிலையில் பஷீர் ஷேகுதாவூத் அரசிலிருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது அரச வளங்களைப் பயன்படுத்தவோ மாட்டார் என்ற நிச்சயமான நம்பிக்கை முஸ்லிம் மத்தியில் உள்ளது.
இவற்றின் காரணமாக மீண்டும் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வார் என்ற நம்பிக்கை முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. அத்துடன் அவர் தான் ஒரு கௌரவமிக்க அரசியல்வாதி என்பதனையும் மீண்டும் நிரூபிப்பார் என்றும் கூறப்படுகிறது
இதேவேளை, அரசிலிருந்து விலகுவதும் இல்லை, அமைச்சு பொறுப்புகளை இராஜினாமாச் செய்வதும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவின்படியே நான் நடப்பேன் என்று கூட பஷீர் ஷேகுதாவூத் காரணம் கூற முடியாது.
ஏனெனில், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்திலும் இதே முடிவினையே கட்சித் தலைமை எடுத்திருந்தது. ஆனால், கட்சியின் விருப்பத்துக்கு மாறாகவே பஷீர் ஷேகு தாவூத் பதவியை இராஜினாமா செய்து விட்டே அது குறித்து அமைச்சர் ஹக்கீமுக்கு அறிவித்திருந்தார்.
ஆகவே, கட்சித் தீர்மானங்களோ கட்டுப்பாடுகளோ அமைச்சர் பஷீர் ஷேகு தாவூதின் தன்மானத்துக்கு சவால் விடவும் அவைகள் அவருக்கு ஓரு பொருட்டுமல்ல அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு அவர் வெளியே வரக் கூடியவர்.
அத்துடன் அவர் தற்போது அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். இந்தப் பெறுமதிமிக்க அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்த அரசாங்கத்துக்கு எதிராக மேடைகளில் அவர் பிரசாரம் செய்ய ஒரு போதும் விரும்பமாட்டார்.
ஏனெனில் அது ”கூட இருந்தே குழிபறிக்கும்” இவ்வாறான ஈனச் செயல்களை விரும்பும் ஓர் அரசியல்வாதியல்ல பஷீர் ஷேகுதாவூத். ஆகவே, அவர் தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்வது என்பது நடக்க முடியாத காரியமல்ல.
மேலும் முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் இவ்வாறும் அவர் தெரிவித்திருந்தார்.
”தேர்தலுக்கு பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை ஏற்பதற்கு நான் திட்டமிட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் பதவிகளை நோக்கமாக கொண்டு செயற்படுபவன் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகவே பதவியை இராஜினாமா செய்தேன்.“
எனக் கூறியிருந்தார்.
ஆனால், அவர் கூறியபடி இந்த விடயம் நடக்கவில்லை. பதிலாக அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைத்தது. அதுவும் கட்சியின் தலைமையின் கலந்தாலோசனையின்றியே அவர் அமைச்சராகப் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த விடயங்களையெல்லாம் பார்க்கும் போது தற்போது நடைபெறவுள்ள தேர்தல்கள் என்பது பஷீர் ஷேகுதாவூதுக்கு ஒரு சோதனைக் களமாகவே அமைந்துள்ளது.
அன்று அவர் எந்தக் காரணங்களைக் கூறி தனது பிரதியமைச்சர் பதவியை இரஜினாமாச் செய்தாரோ அதே காரணங்கள் கொண்ட நிலைமைகளே இன்று அவர் முன் தோன்றியுள்ளன. அது மட்டுமல்ல. எதனை எதிர்பார்க்காமல் அவர் ராஜினாமாச் செய்தாரோ அதே போன்ற சந்தர்ப்பத்தினையே அவர் இன்றும் எதிர்நோக்கியுள்ளார்.
ஆகவே, பஷீர் ஷேகுதாவூத் அன்று கூறியவைகள் கூட சரியா என்பதனை நிரூபிக்கும் சந்தர்ப்பமே இன்று அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது கௌரவ அரசியலின் உண்மையான புனிதத் தன்மை இனித்தான் நிரூபிக்கப்படப் போகிறது.
இவற்றினை விடுத்து அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற டயலக்கை அவர் கூறுவாராயின் அது அவரது அரசியல் நிர்வாணத்தையே வெளிக்காட்டும் என்பது மட்டும் நிச்சயம்.
“அவர்.. சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே!
ஹரிச்சந்திரனா? அரசியல் தந்திரமா? பெறுத்திருந்து பார்ப்போம்!
Post a Comment