Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சாய்ந்தமருது பீச் பார்க் சர்ச்சைக்கு சுமூக தீர்வு ஒரு வாரத்திற்குள் தடைகளை நீக்கி நிர்மாண பணிகளை தொடர பணிப்பு

Tuesday, July 230 comments


கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற சாய்ந்தமருது பீச் பார்க் கட்டுமான பிரச்சினை தற்போது பொதுமக்கள் பிரச்சினையாக மாறி உள்ளது என சாய்ந்தமருது ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
சாய்ந்தமருது பீச் பார்க் கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் 
சாய்ந்தமருது ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் நிர்வாக சபை கட்டிடத்தில் இன்று (22) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜசூர் மற்றும் ஊர்பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இங்கு பெரியபள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உரையாற்றும்போதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில். ஜூம்ஆ பள்ளிவாசல் இதில் பங்கு பற்றுவதனால் இது மக்கள் பிரச்சினையாக கருதப்படுகிறது. அனைத்து தரப்பினரிலும் தவறுகள் இருக்கின்றன. எனவே இது தொடர்பில் கடந்த கால பிரச்சினைகளை கதைக்காமல் பீச் பார்க்கினை அமைப்பதற்கு யார் யார் எவ்வாறு உதவி புரிய முடியும் என தெரிவியுங்கள் எனக் கூறினார்.
இங்கு முதல்வர் உரை நிகழ்த்துகையில்.​
சாய்ந்தமருது பீச் பார்க் என்பது எல்லோருக்கும் தெரியும் எமது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு சாதாரண அளவில் கட்டப்பட்டு அது பின்னர் விஷமிகளினால் உடைக்கப்பட்டது. இவ்வாறு பல வரலாறுகள் இந்த பீச் பார்க்கிக்கு இருக்கிறது. நான் முதல்வர் பதவியை ஏற்ற பின்பு எங்களுடைய சாய்ந்தமருதில் ஒரு பிச் பார்க் அமைய வேண்டும் என்று சாய்ந்தமருதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்களின் ஆதரவுடனும் தீர்மானங்களை மேற் கொண்டோம். எமது பிரதேசத்திற்கு வெளி  இடங்களில் இருந்து வருகை தருபவர்கள் பார்வை இடுவதற்கு எதுவுமே இல்லாத ஒரு நிலமை காணப்படுகின்றது. எனவே இந்த பீச் பார்க் அதற்கான ஒரு தீர்வாக கிழக்கு  மாகாணத்திலே ஒரு சிறந்த பீச் பாக்காக அமைய வேண்டும் என நினைத்தேன். இதற்கு அமைவாக இந்த பீச் பார்க்கிற்கான பட வரைபினை மேற் கொள்வதற்கான திட்டங்களை வகுத்தோம். இதற்காக அரம்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களை சந்தித்து அவரிடம் ஆலோசனை கேட்டேன், இவர் வெளிநாடுகிளில் பட வரைபினை மேற் கொண்டவர் என்றவகையில் இவரை நாடினேன். இது எமது உருக்கானது எனவே இதற்கான பட வரைபினை நான் இலவசமாக செய்துதருகிறேன் என குறிப்பிட்டார். இதற்கான பட வரைபினை மேற் கொள்வதற்கு சுமார் 7 அல்லது 8 இலட்சங்கள்  செலவாகும். ஆனால் இதனை இரண்டு மாத காலத்திற்குள் இலவசமாக எமக்கு செய்து தந்தார்.
இது பீச் பார்க்கினை திருத்தி அமைக்கும் ஒரு வேலைத்திட்டமாகவே நாங்கள் கருதி  இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தோம். இதற்கான நிதி நெல்சிப் திட்டத்தின் மூலமாக முதற்கட்ட நிதியாக 67 இலட்சம் ரூபாய் கிடைத்தது. இதனைக் கொண்டு முதற்கட்ட வேலைகள் நிறைவடைகின்ற தறுவாயில் பிரச்சினைகள் ஆரம்பிக்க தொடங்கின.
இந்த பீச் பார்க் தொடர்பாக பொது மக்கள் பலரும் நல்ல படியாக  கதைக்க ஆரம்பித்தனர். இவ்வாறு சகலரது  பார்வையும் பீச் பார்க் பக்கம் திரும்பியது.
இந்த பீச் பார்க் சிராஸ் மீராசாஹிபின் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல எனது பிள்ளைகள் இங்கு வந்து விளையாடப் போவதுமில்லை. இது ஊருக்கு உரிய ஒன்று. இப்பிரதேச வாசிகளுக்கான ஒரு அபிவிருத்தியாக தான் நாங்கள் கருதிச் செயற்பட்டோம். இது இவ்வாறு இருக்க இக்கட்டுமானம் அனுமதி பெறப்படாத கட்டுமானம் என்று கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் பல பிரச்சினைகளை உருவாக்க  ஆரம்பித்தார். இந்த கரையோர பாதுகாப்பு அதிகாரியின் பின்னால் யாரோ ஒருவர் செயற்படுகின்றார் என நான் கருதுகின்றேன்.
இந்த பீச் பாக்கினை நாங்கள் விஸ்தரித்தோம். இவ்விஸ்தரிப்பிற்காக இரண்டு கடைகள் உள்வாங்கப்பட்டது. இவர்களுடன் நாங்கள் சமரசமாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இவர்களை தூண்டி நீதி மண்றத்தில் எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வைத்தனர். 
இப்படியாக பல வழிகளிலும் இந்த பீச் பாக்கினை தடுப்பதற்காக முனைகின்றனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ அல்லது ஏதோ ஒரு சதித்திட்டமாகவோ அமைவதாக நான் கருதுகின்றேன். 
ஊருக்கு வருகின்ற அபிவிருத்திகளை எவர் கொண்டுவந்தாலும் அவற்றுக்கு ஆதரவாக நாங்கள் செயற்பட வேண்டும் அதைவிடுத்து அவற்றை தடுப்பவர்களாக நாங்கள் ஒரு போதும் இருந்து விடக்கூடாது. இது மக்களிற்காக வருகின்ற அபிவிருத்திகள். தயவு செய்து அல்லாஹூவிற்காக ஊருக்கு வருகின்ற அபிவிருத்தியை தடுக்க வேண்டாம். எவர் அபிவிருத்தியை கொண்டுவந்தாலும் செய்ய விடுங்கள்.
இது இவ்வாறு இருக்க நவம்பர் மாதத்திற்கு முன்னராக முதல் தடைவாயாக பெறப்பட்ட நிதிக்கான கட்டுமானங்களை நிறைவடையச் செய்யவில்லை என்றால் இரண்டாம் கட்ட நிதியினை பெற முடியாமல் விடும். இதனால் பீச் பார்க் அமைப்பதற்கு கிடைக்கவிருக்கின்ற பணம் திரும்பி எமக்கு கிடைத்த சந்தர்ப்பம் நழுவிவிடும். 
இதனால் சென்ற வெள்ளிக்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தனர். அவர்களை நான் தடுத்துவைத்திருக்கின்றேன். இது சிராஸ் மீராசாஹிபினுடைய விடயம் அல்ல இது ஊரினுடைய விடயம்.
இது தொடர்பாக கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுதன்ற உறுப்பினருமான ஹரீஸ் அவர்கள் பல கூட்டங்களை நடத்தினார். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு அபிவிருத்தி குழு கூட்டத்தினை கூட்டி அதன்போது சில உடன்பாடுகள் எட்டப்பட்டு கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தரின் வேண்டுதலுக்கு அமைவாக வரைபடம் திருத்தி அமைக்கப்பட்டு கரையோ பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதிக்காக வழங்கப்ட்டிருந்தது. ஆனால் அப்போது எட்டப்பட்ட உடன்பாடு தற்போது மீரப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் பாசிக் குடா, உல்லை போன்ற கரையோரப் பிரதேசத்தில் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இருக்கும்போது சாய்ந்தமருதில் ஏன் ஒரு பீச் பார்க் அமைக்க முடியாது.
ஒன்ரரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்த பீச் பாக்கினை நாங்கள் இடை நடுவே விட்டு விட முடியாது. எனவே கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தரின் இச் செயற்பாடுகளுக்கான பின்புலம் என்ன இந்த பீச் பார்க்கிற்கான தீர்வு என்ன என்பது இப்போது இங்கு எட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் முடிவாக கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரை கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் நேரில் சென்று இது தொடர்பில் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்ட்டது.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by