Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அரசாங்கத்துக்கு விரோதமான வாக்குகளைப் பெறுவதே எனது குறிக்கோள்

Monday, July 220 comments

azath-salley
கேள்வி: எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு கண்டி மாவட்டத்தில் நீங்கள் போட்டியிடுவதன் நோக்கமென்ன?

பதில்: இம்மாகாண சபைத் தேர்தலில் வட மாகாண சபைக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் அபேட்சகராக போட்டியிடுவதற்கே தீர்மானம் எடுத்திருந்தேன். என்றாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மத்திய மாகாண சபையில் களமிறங்கியுள்ளேன்.

உண்மையில் இன்றைய கால கட்டத்தை பொறுத்தவரை தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று அந்த மக்களை பாதுகாத்து அவர்களுக்கு குரல் கொடுக்கின்ற அநியாயம் இழைக்கப்பட்ட இனக் குழுவின் பிரதிநிதியாக வெளிப்படுவதே என்னுள்ளத்தின் அபிலாஷை.

எனவேதான், எதிர்வருகின்ற மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு கண்டி மாவட்டத்தின் அபேட்சகராக போட்டியிடுகின்றேன். இது கண்டி வாழ் மக்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் என்றும் கருதுகின்றேன்.

கேள்வி: மத்திய மாகாண சபைக்குப் போட்டியிடுவதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்: ஆம், கண்டி மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்கள் அழைப்பு விடுத்தார்கள். சுமார் ஒரு நாளைக்கு கண்டி மாவட்டத்தில் இருந்து நூறு, நூற்றி ஐம்பது பேர் மத்திய மாகாண சபைக்கு கண்டி மாவட்ட தேர்தல் களத்தில் குதிக்குமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கின்றார்கள். அழைப்பு விடுப்பது மாத்திரமல்லாமல் மத்திய மாகாண சபைத் தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

நான் பல இடங்களில் தேர்தலில் குதித்த அனுபமுள்ள அரசியல்வாதி, ஆனால் கண்டி மாவட்டத்தில் எனக்கு இருக்கும் வரவேற்பைப் போல் வேறெங்கும் இருக்கவில்லை. ஆகவே, கண்டி வாழ் மக்கள் என் மீது அக்கறையுடன் இருப்பதை உணருகின்றேன்.

கேள்வி: ஏனைய முஸ்லிம் அபேட்சகர்களின் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டுள்ளதாமே?

பதில்: அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட எந்தவொரு வாய்ப்பும் இல்லை. பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியமும் இல்லை. கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அபேட்சகர் பட்டியலில் ஆறு முஸ்லிம் அபேட்சகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் ஆறு முஸ்லிம் அபேட்சகர் பட்டியலில் நான்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இம்முறை நடக்கவிருக்கின்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணியான நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற வியூகத்தை வகுத்தே செயற்படுகின்றோம். ஆகவே, அன்றைய முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட ஆறு முஸ்லிம் அபேட்சகர்களில் இரண்டைக் கேட்டு தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட எண்ணியுள்ளோம். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அபேட்சகர்களுக்கு எந்தவொரு அநியாயமும் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் வராது என்றும் உறுதியளிக்கின்றேன்.

கேள்வி: மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான உங்களுடைய தேர்தல் நடவடிக்கைகளை கண்டி மாவட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றீர்கள்?

பதில்: நான் பல பிரதேசங்களில் தேர்தலில் போட்டியிட்டே பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். அதனால் மத்திய மாகாண சபைத் தேர்தலில் எனக்கு எந்தவொரு சவாலும் வரும் என்று நினைக்கவில்லை. குறிப்பாக கண்டி மாவட்ட மக்கள் என்மீது பெரியளவிலான அக்கறையுடன் இருப்பது எனது வெற்றிக்கான ஒரு அனுமான நிலையே. எனது வெற்றி தொடர்பாக நான் உறுதியுடன் கூறினாலும் தேர்தல் நடைபெறும் வடிவம் தொடர்பாக எனக்கு எதுவும் கூற முடியாது.

கேள்வி: பல பிரதேசங்களில் தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள். அதுபற்றிக் கூற முடியுமா?

பதில்: உங்கள் கேள்விக்கான பதிலை நான் முன்னர் கூறியிருக்கின்றேன். முஸ்லிம்கள் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு எங்கெல்லாம் அநியாயம் நடக்குமோ அங்கெல்லாம் அந்த அநியாயத்தை தட்டிக் கேட்க அஸாத் சாலி இருப்பார். அதில் எந்த சநதேகமும் இல்லை. ஆனால் நான் போட்டியிட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சில விஷேடமான விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலோ அல்லது அம்பாறை மாவட்டத்திலோ அபேட்சகராகப் போட்டியிட்டிருந்தால் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நான் முதலாவது இடத்திற்கு வந்து அமோக வெற்றியீட்டியிருப்பேன். ஆனால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது அசுர வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பிரபலத்தை தக்க வைத்துக் கொள்கின்ற ஒரு பெரும் போராட்டமாகவே காணப்பட்டதனால் காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தரையிறக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருந்ததால், அவருடைய பிரபலத்தை நிலைநாட்டிக் கொள்ள என்னைப் பலிக் கடாவாக்கியுள்ளார். ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

அரசாங்கத்துக்கு விரோதமான வாக்குகளைப் பெறுவதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துக்கு விரோதமான பிரசாரங்களை முடுக்கி விட்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த தறுவாயில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டு அரசாங்கத் தரப்புடன் ஆட்சியமைத்து முஸ்லிம் வாக்காளருக்கு ரவூப் ஹக்கீம் துரோகம் செய்துள்ளார்.

அவர் அவ்வாறு செய்தது மாத்திரமல்லாமல், அவரது மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மக்களை ஏமாற்றி விட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாகாண சபையிலே ஒரு அமைச்சைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தார்.

அவ்வாறு செயற்படாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சி அமைத்திருந்தால் முதலமைச்சர் பதவியுடன் இரு அமைச்சுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்து. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பல நன்மைகளைப் பெறும் வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நகர்த்தியிருக்க முடியும்.

கேள்வி: நிலையான அரசியல் கொள்கைக்கு உங்களுக்குக் கிடையாது என குற்றஞ்சாட்டுகிறார்களே?

பதில்: கொள்கை இல்லாத கட்சிகளில் இருந்து என்னுடைய கொள்கையைப் பாதுகாக்கவே கட்சித் தாவல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான நிலை உருவானது. ஒரு முறை பெரும்பான்மை இனத்தவர்கள் சேர் ராஸிக் பரீதை பார்த்து ஏன் துருக்கித் தொப்பி திரும்புகின்ற பக்கமெல்லாம் திரும்புகின்றது? என்று வினவியதற்கு என்னுடைய சமுதாயத்துக்கு எங்கெல்லாம் பிரச்சினை வருகின்றதோ அவ்விடத்தில் என் மனசாட்சி செயற்படும் என்று விடை பகர்ந்தார்.

நான் சேர் ராஸிக் பரீதை போல் இல்லாவிட்டாலும் மற்றைய அரசியல்வாதிகளை போலன்றி எனது சமுதாயத்துக்கு பிரச்சினைகள் வருகின்ற இடத்தில் நான் இருக்கத் தயாரில்லை. நான் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள தறுவாயில் முஸ்லிம்களை வந்தேறு குடிகள் என்றும் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை என்றும் கூறிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது.

இலங்கையில் சிறுபான்மையினர் உள்ளடங்கலான மக்கள் ஆதரவைப் பெற்ற மிகப்பெரிய கட்சி என்ற வகையில் சிறுபான்மையினருக்கு விரோதமாக கருத்துத் தெரிவிக்கும் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலுக்கான அபேட்சகராக நிறுத்த எந்த பண்பாட்டு ரீதியான உரிமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியத்தில் ஒரு காலத்திலும் ஒரு தேர்தலுக்கேனும் ஒரு அபேட்சகரைத் இறக்குமதி செய்ததில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வர இருந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் என்னை மேயரபேட்சகராகத் பெயர் குறிப்பிட்டு இருந்த நிலையிலும் குறிப்பிட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அபேட்சகராகத் போட்டியிட வேண்டும் என்று செயற்குழுவில் வாதாடினேன். அவ்வாறு அவருக்கு முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு சஜித் பிரேமதாஸவுக்கோ, எஸ்.பி. திஸாநாயக்கவுக்கோ போட்டியிட முடியுமான தகுதிகளை எடுத்துக் காட்டினேன். ஆனால் நான் எடுத்துக்காட்டிய காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஜனாதிபதி அபேட்சகராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இறக்குமதி செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்ற ஒருவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிடுவதன் மூலம் ஏற்படும் அபாயத்தை நான் தூரநோக்குடன் அறிந்தேன். எனவே, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தோற்கடிக்கச் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தேன். அன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னாள் இராணுவத் தளபதியை இறக்குமதி செய்ததை எதிர்த்துப் பேசாமல் மற்றவர்களைப் போல் மௌனமாக இதனை ஆதரித்து இருந்திருந்தால், இன்று நான் கொழும்பு மாநகர சபை மேயராக இருந்திருப்பேன்.

ஆனால் என் கண்முன்னே பதவிகளை விட எனது சமூகமே எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து குறைந்தது ஒரு வருடமேனும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பல நிகழ்வுகள் அரங்கேறுகின்ற நேரத்தில் நான் மறுமை நாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்வதா? ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் சொல்வதா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பதில் சொல்வதா?

இதுதான் எனது கொள்கை, கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு என்னை நோக்குபவர்கள் எனது கொள்கை பிழை என்று தம்பட்டம் அடிக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

என்னைப் பார்க்கின்ற மக்கள் நான் எந்தக் கொள்கையில் இருக்கின்றேன் என்று விளங்கிக் கொள்வார்கள். எனது சமூகத்துக்கு எங்கெல்லாம் பிரச்சினை வருகின்றதோ அவற்றுக்கு முகம் கொடுக்க நான் தயார். அதற்கு தலைமைத்துவம் வழங்கவும் தயார். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக என்னுயிர் தொடர்பாக கவலைப்படாமல் எந்த அவதானத்தையும் எடுக்க நான் தயார்.

கேள்வி: இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் நீங்கள் கைது செய்யப்பட்டதை உங்களுடைய சுய அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: பாதுகாப்புத் தரப்பினரால் நான் கைது செய்யப்பட்டமை எவ்வாறு என்னுடைய அரசியல் நலனுக்கு சாதகமாக அமையும் என்ற நான் அறியவில்லை? பாதுகாப்புத் தரப்பினர் என்னை கைது செய்தது எனக்கு தீவிரவாத சாயம் பூசியாகும். குறிப்பாக முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கினால் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவேன் என்ற ஊகத்தினாலாகும். ஆனால் அவ்வாறு முட்டாள் தனமான செயற்பாடுகளில் நானோ, முஸ்லிம்களோ முட்டாள்களல்ல.

நான் கைது செய்யப்பட்ட பின் என்னுடைய மக்கள் எனக்காக நோன்பு பிடித்து குரல் கொடுத்து துஆ செய்தார்கள். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக என்னை கைது செய்தவர்களுக்கு என்னை விடுவிக்க வேண்டிய நிலை உருவாகியது. அவர்கள் என்மீது கொண்ட பேரன்பினால் விடுவிக்கவில்லை. அவர்கள் இன்னும் என்னுடன் கோபமாகத்தான் உள்ளார்கள். என்னுடைய அரசியலை நான் மிகக் கௌரவமாகத்தான் முன்னெடுக்கின்றேன்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாங்களை சுதந்திரமான குழுவாக இயங்குவதாக கூறி தேர்தல் முடியும் தறுவாயில் அரசாங்கத் தரப்பில் இருந்து விலகுவதாக வாக்குறுதி வழங்கி எங்களையும் அழைத்தார்.

இறுதியில் அரசாங்கத்துக்கு விரோதமான கருத்துக்களை தேர்தல் மேடைகளில் இடியோசை அளவில் முழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் முடிந்த சூடு தணியும் முன்பே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். இதுபோன்றதொரு மக்களை ஏமாற்றிய நயவஞ்சகத்தனமான அரசியலை நாம் முன்னெடுத்தும் இல்லை. முன்னெடுப்பதும் இல்லை.

குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் மேடைகளில் பேசுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை இடைமறித்து என்னைப் பேசுமாறு என் பேராதரவாளர்கள் அழைத்தபோது நான் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை நீதி நியாயம் இல்லாத இந்த இலங்கையில் இவர் ஒரு நீதி அமைச்சராக இருக்கின்றார் என்று கூட விளித்தேன். அவர்கூட அதை அமோதித்தார். இதுதான் எங்களுடைய அரசியல் என்னுடைய அரசியல் எல்லா மக்களுக்கும் எளிதில் புலப்படும் படியாக ஊடுருவிச் செல்கின்றது. அவ்வாறான ஒரு கௌரவமான அரசியலையே நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.

கேள்வி: துணிச்சல் கரமான கருத்துக்களை அதிரடியாக வெளியிடும் உங்களுக்கு ஒரு தனியார் பத்திரிகை உங்கள் வாயினை பிரேக் இல்லாத வாய் என்று வர்ணித்து இருந்தது. இது தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இன்றைக்கு எல்லாவற்றையும் பேசுவார்கள். ஏனென்றால் ஊடகங்கள் இன்று ஒரு பலமான சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது. என்னுடைய சமூகத்துக்காக நான் குரல் எழுப்பியதற்காக எனக்கு பிரேக் இல்லாத வாய் என்று குறிப்பிடுவதனால் இதுபற்றி நான் கவலைப்பட வில்லை. இது ஒரு பெரிய பிரச்சினையாக எனக்கு இல்லை. அது எனக்கு மகிழ்ச்சி.

ஏனென்றால் ஏனைய அரசியல்வாதிகள் சமூகத்துக்காக பேச வேண்டிய இடங்களில் நாவுக்குப் பிரேக் இட்டுக் கொண்டிருந்தாலும் நான் அவ்வாறு இல்லாமல் இருப்பதன் காரணமாக என்னைப் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

கேள்வி: இறுதியாக கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நான் பொதுபலசேனாவுக்கு நன்றி கூற விரும்புகின்றேன். ஏன் என்றால் பிரிந்திருந்த முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்திய கௌரவம் பொது பல சேனாவையே சாரும். ஒற்றுமையை வழி நடத்தவதே முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள சவால். அதற்கான நல்ல சந்தர்ப்பம் எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களின் வாக்குகளைப் சிதறடிப்பதற்காக எல்லா கட்சியிலும் பல அபேட்சகர்களை இடுவார்கள்.

அவ்விடத்தில் சாணக்கியமாக முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பும் மூன்று உறுப்பினர்களை மத்திய மாகாண சபைக்கு அனுப்புவதே கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்குரிய தார்மீகப் பொறுப்பு என்பதை கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு கூற விரும்புகின்றேன்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by