
நாட்டில் இன்று பெளத்த மேலாதிக்கம்
தலைதூக்கி முஸ்லிம்களின் மத உரிமைகளை பறிக்கும் நிலைமை தலை தூக்கியுள்ளது.
இவ்வாறானதோர் நிலையில் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு நல்லிணக்கம் தொடர்பில்
பாடம் கற்பிக்கின்றார். இதனை கைவிட்டு பெளத்த குருமார் வேடத்தில் இயங்கும்
மதவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென ஐ.தே. கட்சியின் மேல் மாகாண சபை
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பேருவளையில் ஜனாதிபதி பள்ளிவாசலை திறந்து வைக்கையில் கிராண்ட்பாஸில்
பெளத்த குருமார் பள்ளிவாசலை இழுத்து மூடுகின்றனர். இதுவா ஜனநாயகம் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ணசைத்திய மாவத்தையில் 40 வருடங்களுக்கு மேலாக
இயங்கி வந்த பள்ளிவாசலில் இடவசதி இல்லாத காரணத்தினாலும், அரச மரமொன்று
அக்கட்டிடத்தில் விருட்சமாக வளர்ந்திருந்ததாலும் இந்நிலையில் சொந்தக்
காணியில் சட்டபூர்வமாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் புத்தசாசன
அமைச்சினதும் அனுமதியுடன் புதிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து
வைக்கப்பட்டது.
ஆனால் அங்கு தொழுகையை நடத்தவிடாமல் அப்பிரதேச பெளத்த குருவோடு
வெளியிடங்களிலிருந்து வந்த இனவாதக் கும்பல் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி
பொலிஸாருக்கு முறையிட்டு பள்ளிவாசலை மூடிவிட்டனர்.
சட்டத்தை மதிக்க பொலிஸார் தவறி இனவாதிகளின் மத்தியில் மெளனிகளாகி விட்டனர்.
அந்தளவிற்கு நாட்டின் பெளத்த மேலாதிக்கம தலைதூக்கி ஏனைய மதங்களை நசுக்கி, அடக்கும் நிலை தோன்றியுள்ளது.
இது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதற்கு நியாயம் கேட்டு
புத்தசாசன அமைச்சின் செயலாளருடனான பேச்சுவார்த்தைகளும் பெளத்த மதவாதிகளின்
நெருக்குதல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
பேருவளை தர்கா நகரில் அண்மையில் பள்ளிவாசல் ஒன்றை திறந்து வைத்து
உரையாற்றிய ஜனாதிபதி, ‘நாட்டில் எவரும் அடிமைகளில்லை. அத்தோடு சட்டத்தை
எவரும் கையிலெடுக்க முடியாது. அனைத்து இனங்களுக்கும் சகல உரிமைகளும் உள்ளது
எனத் தெரிவித்தார்’.
ஆனால் பேருவளையில் பள்ளிவாசல் திறந்து வைக்கப்படுகிறது. கிராண்ட்பாஸில்
பள்ளிவாசல் இனவாதிகளால் மூடப்படுகிறது. இதுவா ஜனாதிபதி சொன்ன அனைவருக்கும்
உரிமைகளுண்டு என்பதற்கு அர்த்தமா?
எனவே முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிப்பதை கைவிட்டு பெளத்த இனவாதிகளுக்கு
ஜனாதிபதி பாடம் கற்பிக்க வேண்டுமென்றும், உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தெரிவித்துள்ளார்.
.
Post a Comment