
‘முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே
நான் அரசுடன் இணைந்து அரசியல் செய்கின்றேன். அரசுடன் இணைந்து அரசியல்
செய்வது எதிர்க் கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிடவும் சிரமமான
காரியமாகும்’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
‘அரசுடனான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
உறவு ஒட்டியும் ஒட்டாததுமான ஒரு உறவாகும். ஏனெனில் நான் அமைச்சரவையில்
அல்லது ஜனாதிபதியுடன் பேச வேண்டிய இடத்தில் பேசியுள்ளேன். ஆனால் கூட்டுப்
பொறுப்பை நான் மீறமுடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டி மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், ’இன்று
பேரினவாதிகள் சிலரால் முஸ்லிம்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளன. அதனை தந்திரோபாயமாகத்தான் அனுகவேண்டியுள்ளது. இதற்காக நான்
அரசை விட்டு வெளியேவர முடியாது. அப்படி வெளியேறினால் அது பேரினவாதத்திற்கு
உடந்தையாகிவிடும். நான் கட்சியின் தலைவன் என்ற வகையில் கட்சியைப்
பாதுகாப்பதுடன் உணர்வுபூர்வமாக சமூகம் தொடர்பான பிரச்சினைகளை
அனுகவேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்
தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும்.
ஆனால் நான் அப்படிச் செய்திருந்தால் அப் பதவியின் ஆயுள் மிகக் குறுகி
இருக்கும். அத்துடன் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பது
பாரிய சவாலாக மாறி இருக்கும். பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல்
நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும்.
எனவே முஸ்லிம் சமூகத்திற்காகத்தான் நான் அரசுடன் இணைய வேண்டிவந்தது. அதேநேரம் கட்சியையும் பாதுகாக்கவேண்டி இருந்தது.
வேண்டாத சம்சாரத்தை கைவிடலாம். பின்னர்
எந்தப் பிள்ளை எந்தப் பக்கம் தாவும் என்பது தெரியாது. பேரினவாதத்தின் ஊடாக
சிங்கள மக்களை ஓரணியில் திறட்டும் இக்கால செயற்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து முற்றாக விலகி இருக்கமுடியாது.
எனக்கு அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே
மடவளையுடன் உண்டு. இருப்பினும் எனது ஊர் மடவளை என்று வெளியாட்கள் கருதும்
அளவிற்கு எனக்கும் மடவளைக்கும் தொடர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு
எனது அரசியல் பயணத்திற்கு மடவளை மக்கள் வழங்கிய 10 உயிர் தியாகம் என்னை
அந்தளவு பிணைத்துவிட்டது. இது எந்தப் பகுதி மக்களும் செலுத்தாத விலையாகும்’
என்றார்.
Post a Comment