Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது: முஜிபுர்

Wednesday, July 310 comments




முஸ்லிம்களுக்கு உண்மையான, சமூக உணர்வு இருக்குமானால் கண்டியில் ஜனாதிபதி நடத்தும், ‘இப்தார்’ நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும். அதைவிடுத்து ‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது என ஐ.தே.கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலேயே முஸ்லிம்கள் கடுமையான அடக்கு முறைக்கு உள்ளானார்கள். அதன் பின்னர் இந்த அரசாங்கமே முஸ்லிம்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இனவாத, மதவாத மோதல்களை ஏற்படுத்தும் அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

விசேடமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இருபது வருட காலமாக இயங்கி வந்த மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டு அக் காணிச் சொந்தக்காரரை அச்சுறுத்தி அங்கு தொழுகை நடத்துவதை தடை செய்ய கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் மூடப்பட்டு அங்கு வாழ்ந்த 25 முஸ்லிம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

வாத்துவையில் இறைச்சிக் கடை நேற்று முன்தினம் அதிகாலை தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தெமட்டகொடையில் இறைச்சி லொறி தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஆனால் இதுவரையில் இச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை.

அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அசமந்தமான போக்கையே கடைப்பிடிக்கின்றது.

போர்த்துக்கேயர்
இலங்கையை போர்த்துக்கேயர் ஆக்கிரமித்து ஆட்சி செய்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும் அடக்குமுறையை மேற்கொண்டனர். இதன் போது சிங்கள அரசர்கள் முஸ்லிம்களை பாதுகாத்தனர்.
அதன் பின்னர் இலங்கை வரலாற்றில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழேயே முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை இடம்பெறுகிறது.

இப்தார்
இவ்வளவு காலமும் ஜனாதிபதி கொழும்பு அலரி மாளிகையிலேயே முஸ்லிம்களுக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தினார்.
ஆனால் இன்று மத்திய மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து, கண்டி ஜனாதிபதி மாளிகையில் இதனை 3, 4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளனர்.
கஞ்சிக்கோப்பையையும் புரியாணி பொதியையும் கப்பமாக முஸ்லிம்களுக்கு வழங்கி வாக்குகளை கொள்ளையடிக்க முயல்கிறார்.

முஸ்லிம்கள் இன்று பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில் உண்மையான சமூக உணர்வு இருக்குமானால் இந்த இப்தார் நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும்.

அதை விடுத்து இதில் கலந்துகொள்வதென்பது முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் செயலாகுமென்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by