பொத்துவில் பிரதேசம் பற்றி அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் செய்திகள்
வெளிவந்தவண்ணமுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் நீதியமைச்சரும், ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், பொத்துவில் பிரதேச சபை
நிர்வாகத்தை அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் முஸ்லிம் காங்கிரஸ்
கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையிட்டு அங்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பின்னர், அவர்
பசரிச்சேனை அல் இஷ்ராக் வித்தியாலயத்திற்குச் சென்று அவ்வூர் மக்களுடன்
நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
அந்த அனுபவம் அலாதியானது. அமைச்சர் ஹக்கீம் அந்தப் பாடசாலைக்குச் சென்ற
முதல் சந்தர்ப்பம் அதுவாகும். அவரது வருகை அவ்வூர் மக்களை வியப்பில்
ஆழ்த்தியது.
மக்களின் உள்ளக் கிடக்கைகளை அவர்களாகவே கூறக் கேட்பதில் அமைச்சர் ஆர்வம்
கொண்டிருந்தார். பன்னெடுங்காலமாக தமது தொழில்துறைகளில் ஈடுபட்டு, அன்றாட
வாழ்க்கையை நிம்மதியாக ஓட்டிக்கொண்டு, இறை நம்பிக்கையோடு வாழ்ந்து
வந்திருந்த மக்களின் வாழ்வு இப்பொழுதெல்லாம் முன்னரைப் போன்று இல்லை.
ஆனால், அவர்களது இறை நம்பிக்கையும், திட உறுதியும் மட்டும் இன்னும்
அற்றுப்போகவில்லை. அது அந்த மக்களின் வார்த்தைகளின் ஊடாக வெளிவந்தது
அமைச்சர் ஹக்கீம் அமைதியாக செவிமடுத்துக்கொண்டிருந்தார்.
இதுவரை காலமும் இல்லாத வகையில் பேரினவாதம் தனது கோரப்பற்களை
காட்டத்தலைப்பட்டதாலும், இராணுவக் கெடுபிடிகள் போகப் போக அதிகரித்ததாலும்,
காணிக் கபளீகரம், மீனவர்களின் கரைவலை பிரச்சினை உட்பட அவர்களது கடற் தொழிற்
பிரச்சினை, காட்டுத் தொழிலுக்குச் சென்று விறகு சேகரித்து வருவோர் மீதான
அச்சுறுத்தல் மற்றும் நெருக்குவாரங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எல்லாம் இன்று
அவர்களது வாழ்வியலாகி விட்டது.
காட்டுப் பகுதிக்குச் சென்று விறகு வெட்டி வருவோர் அவற்றை வண்டில்களில்
கொண்டு வரும்பொழுது 'இடைமறிப்போருக்கு' கைகளில் பொத்த வேண்டிய நிர்ப்பந்தம்
வேறு.
வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என
பல தரப்பினர் அவர்களது அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளில்
குறுக்கிடுகின்றனர்.
குடாக்களி கரைவலைப் பிரச்சினையால் 125 குடும்பங்கள் நிர்க்கதியாகும் நிலை.
சுதந்தரமாக முன்பெல்லாம் தாம் நடமாடிய காடுமண்டிய பிரதேசங்களிலும்,
புதர்க் காடுகளிலும் இப்பொழுது அவ்வாறு சஞ்சரிக்க முடியாத இக்கட்டான
சூழ்நிலையில் பரிதவிப்பதை அவர்களது வார்த்தைப் பிரயோகங்கள் நன்கு
வெளிப்படுத்தின.
அறுகம்பை, அகத்திமுனை, பூவரசம் தோட்டம், சாஸ்திரவெளி, நாவலாறு, சின்னஉல்ல,
பெரியஉல்ல, சர்வோதயபுரம் போன்ற இடங்கள் அவர்களது வாழ்வியலோடு ஒன்றிக்
கலந்தவை.
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப போராளி தாடி மூசா மற்றும் அவரது மகன் பொத்துவில்
சபை பிரதேச உறுப்பினர் முபாரக் ஆகியோரும் தங்களது உள்ளக் குமுறல்களை
கொட்டித் தீர்த்தனர். மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பொத்துவில்
மண்ணுக்குச் செய்த அளப்பரிய பங்களிப்பையும் அவர்கள் நன்றியறிதலோடு
நினைவூட்டத் தவறவில்லை.
1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசரியூர் அல் இஷ்ராக் வித்தியாலயத்தில்
இப்பொழுது 610 மாணவர்கள் வரை கல்வி பயின்று வருவதாகவும் ஆசிரியர்களுக்கு
பற்றாக்குறை நிலவுவதாகவும், தேவையானளவு தளபாடங்கள் இல்லையென்றும், போதிய
இடவசதி இல்லாத காரணத்தால் சமயலறையில் கூட மாணவர்கள் பாடம் படிக்க வேண்டிய
பரிதாப நிலை காணப்படுவதாகவும் அமைச்சரிடம் கூறப்பட்டது. அதுபற்றி உரிய
அமைச்சரினதும், கல்வி உயர் அதிகாரிகளினதும் உடனடிக் கவனத்திற்கு கொண்டு
வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஏனைய விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.
அன்றைய நாள் உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு நாள், அது வெசாக் தினம்.
திரும்பும் வழியில் புத்தர் சிலையை வாகனமொன்றில் இருத்தி அதனை
பின்தொடர்ந்து ஓர் அமைதி ஊர்வலம் பொத்துவில் நகர வீதி ஊடாக நகர்ந்து
கொண்டிருந்தது.
Post a Comment