
மாவனெல்ல சாஹிரா கல்லூரி நிர்வாகத்தின்
போக்கால் ஒரு மாணவியின் கல்வி எதிர் காலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
சம்பவம் மாவனெல்ல வாசிகளால் (மாவனெல்ல செய்தி )எமது கவனத்துக்கு
கொண்டுவரப்பட்டிருந்ததை தொடர்ந்து இது குறித்த முழுமையான விசாரணையில் நாம்
இறங்கியிருந்தோம்.
இதன் பொது நாம் தொடர்பு கொண்ட பலரது
கருத்துக்கள் மற்றும் எட்டப்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த
அறிக்கையை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பின்னணி
சுமார் 17 வருடங்கள் வெளி நாட்டில்
வசித்து ஊர் திரும்பியவர் திரு நௌஷாத் ஹனீபா, இவர் குறித்த கல்லூரியின்
பழைய மாணவர் மாத்திரமன்றி கடந்த காலங்களில் தன்னார்வ அடிப்படையில் இதே
பாடசாலையில் ஒரு உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார்
.
மாவனெல்ல சாஹிரா கல்லூரியிலிருந்து 200
மீட்டர் தொலைவிலேயே இவரது வீடும் அமைந்திருப்பதனாலும் தற்போது அங்கே ஆங்கில
மொழி மூலம் கல்வி கற்கும் வசதியும் இருப்பதனாலும் வெளிநாட்டில் கல்வி
பயின்ற தனது மகளை இதே பாடசாலையில் சேர்ப்பதை விரும்பி கல்லூரி
நிர்வாகத்தினை அணுகியபோது, வெளிநாட்டில் கல்வி கற்ற இக்குழந்தை பாடசாலையில்
சேர்க்கப்பட வேண்டும் எனின் கல்வி அமைச்சிடமிருந்து கடிதம் ஒன்று பெற்று
வர வேண்டும் என நிர்வாகத்தினால் வேண்டப்பட்டுள்ளார்.
கல்லூரியின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளூர்
பிரதேச சபை உறுப்பினர் காமிலின் உதவியும் பெற்று கல்வி அமைச்சிடமிருந்து
கடிதத்தையும் தந்தையான நௌஷாத் பெற்றுள்ளார் (அதன் பிரதியும் எம் கைவசம்
இருக்கிறது).
அதனை தொடர்ந்து இதில் தலையிட்ட பாடசாலை
அபிவிருத்தி சபை, குழந்தையை சேர்ப்பதற்க்கு ஒன்றரை லட்சம் ரூபா (நன்கொடை)
தரப்பட வேண்டும் என கோரியதையடுத்து, எப்படியாவது தன குழந்தையின் கல்வியை
தொடர வேண்டும் என்பதால் குறித்த நன்கொடையை பணமாக அன்றி மதரசா கட்டிட
நிர்மாணத்திற்காக ஒதுக்கி அதை செயற்படுத்துவதாக கூறிய நௌஷாத், அதற்கான
பணிகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இதற்கிடையில் மீண்டும் தலையிட்ட SDS (
பாடசாலை அபிவிருத்தி சபை ) கட்டிட நிர்மாணம் தேவையில்லை பணமாக தர வேண்டும்
எனும் கோரிக்கையை முன் வைத்ததாகவும் இதன் பின்னணியில் பாடசாலையில்
அனுமதிக்கப்பட்ட குழந்தையை முறைப்படி பதியாமல் அழுத்தம் கொடுக்க
முனைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதற்கிடையில் கடந்த காலத்தில் குறித்த
விவகாரத்தின் பின்னணியில் இயங்கியவராக கருதப்படும் கல்லூரி அதிபர்
நிசார்தீன் இட மாற்றம் பெற்றுள்ள நிலையில் தற்போது இவ்விடயம் தற்காலிக
அதிபர் பஹ்மி அவர்களின் பொறுப்பை அடைந்திருக்கிறது.
சமூக ஒற்றுமை
குறித்த விவகாரம், துரதிஷ்ட வசமாக
புரிந்துணர்வு மற்றும் செயற்பாட்டு வரையறைகளை தாண்டி இரு தரப்புக்கு
இடையிலான குறிப்பாக தவ்ஹீத் ஜமாத்துக்கும் , ஜமாஅத் தே இசலாமிக்கும்
இடையிலான முறுகலாகவும் ஊரில் பார்க்கப்படுவது இங்கு கவனிக்கப்பட வேண்டிய
மேலும் ஒரு விடயமாகும்.
பாடசாலை அபிவிருத்தி சபை ஜமாத் தே இஸ்லாமி
அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தௌஹீத்
ஜமாத்தை சேர்ந்தவராகவும் இருப்பதாகவும் இது இரு அமைப்புகளுக்கு இடையிலான
முறுகலாக இருப்பத்தாலேயே இவ்வாறு இழு படுகிறது எனும் பேச்சும் ஊர் மக்கள்
மத்தியில் இருப்பதோடு நௌஷாத் அவர்கள் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர் என்று
வாதிட முன் வரும் ஒரு சிலரும் இருக்க, இந்த பிரச்சினை தற்போது ஒரு சமூக
பிரச்சினையாக உருவெடுக்காமல் தடுக்கும் பொறுப்பும் அதிபர் பஹ்மியை
வந்தடைகிறது.
இந்நிலையிலேயே , குறித்த விவகாரம் ஊடகங்களை வந்தடைந்திருக்கிறது.
இது குறித்து எமக்கு கிடைக்கபெற்ற
செய்தியின் நிமித்தம் நாம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படியிலும் எமக்கு
இரு தரப்பினாலும் வழங்கப்பட்ட ஆதாரங்களின் மற்றும் வாக்குறுதிகளின்
அடிப்படையிலும் குறித்த விடயம் பூதாகரமாக எழாமல் தடுப்பதற்கான வழிமுறைகள்
இருப்பதால் இவ்விடயம் சரியான முறையில் இரு தரப்புக்கும் எத்தி வைக்கப்பட
வேண்டிய கட்டாயமும் இருந்தது.
தீர்வு
அதன்
அடிப்படையில் இன்று நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக மூன்றாம் தரப்பின்றி
பாடசாலை அதிபரும் பாதிக்கப்பட்ட நபரும் எதிர் வரும் திங்களன்று
பாடசாலையில் சந்தித்து நேரடியாக இவ்விவகாரத்தை பேசிக்கொள்ள இரு தரப்பும்
சம்மதித்துள்ளதொடு தொடர்புகளும் பரிமாறப்பட்டுள்ளன.
தனது உரிமைகள் மறுக்கப்பட்ட வேகத்தில்
சட்ட ரீதியான அனைத்து வழிமுறைகளையும் நாடிய திரு நௌஷாத் இவ்விவகாரத்தை
பலரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் மனித உரிமைகள் அமைப்பொன்றின்
உதவியையும் நாடி முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
எனினும் தனக்கு தேவையான தீர்வு கிடைக்கும்
பட்சத்தில், அதாவது குழந்தை பாடசாலையில் முறைப்படி மீள அனுமதிக்கப்படும்
பட்சத்தில் தாம் மேற்கொண்ட முறைப்பாட்டையும், தாக்கல் செய்த
வழக்கையும் மீளப்பெற அவரும் இணங்கியுள்ளதால் கல்லூரி அதிபர் இவ்விடயத்தில்
சுமுகமான தீர்வொன்றை எட்டுவதற்கும் இணங்கியுள்ளார்.
வாக்குறுதி
இதன் அடிப்படையில் பாடசாலை அபிவிருத்தி
சபையுடனும் இது குறித்து கலந்துரையாடி, ஏட்டிக்கு போட்டியான நிலைப்பாட்டை
தவிர்த்து எதிர் வரும் ஒரு வாரத்திற்குள் இவ்விடயத்தை சுமுகமாக முடித்து
விடுவதாக கல்லூரி அதிபர் பஹ்மி அவர்கள் எமக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான பல ஆவணங்கள் எம்
கைவசம் இருக்கின்ற போதும் இவ்விவகாரம் நல்லெண்ண அடிப்படையில், அதுவும் ஒரு
குழந்தையின் கல்வி எதிர் காலத்தை கவனத்திற்கொண்டு தற்போது சுமுகமான
தீர்வொன்றை எட்டும் நிலையில் உள்ளதால் ஊர் மக்களும் இது தொடர்பில்
ஒத்துழைப்பை வழங்குவதே நமது சமூக ஒற்றுமைக்கும் இன்றைய நிலையில்
அவசியமானதாகும்.
இதற்கிடையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டால்
தான் தனியாக மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என முன்னாள் அதிபர் நசீர்தீன் சவால்
விட்டதாகவும் கருத்து நிலவினாலும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வரும்
நோக்கில் வழக்கை வாபஸ் பெற குழந்தையின் தந்தையும், ஏற்கனவே கல்வி
அமைச்சிடமிருந்து கடிதமும் பெறப்பட்டிருப்பதனால் மேலதிக அழுத்தங்கள் இன்றி
குழந்தையை மீள இணைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர்
பஹ்மியும் இணங்கியுள்ளமையே இங்கு முக்கியம் பெறுவதால் இரு தரப்பின் இந்த
முயற்சியின் மூலம் சுமுகமான முடிவு எட்டப்பட இறைவனை பிரார்த்திப்போம்!
Post a Comment