ஆளும் கட்சி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் போது வழங்கிய உறுதி
மொழிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதும்
ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஒதுக்கப்படும் நிலையே
அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாத நிலையில் கட்சியின்
உயர்பீடம் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்க உள்ளது
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற
உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர
சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் விசாரணைகளில் வெளிப்படைத்
தன்மை காணப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்தில்
இவ்விடயம் குறித்தும் பேசப்பட உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஹசன் அலி எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த கிழக்கு மாகாண சபைச் தேர்தலின் பின்னர் ஆளும் கட்சி அங்கு
ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவியை நாடியது. இதன் போது
முஸ்லிம் காங்கிரஸ் பல கோரிக்கைகளை முன் வைத்ததுடன் அரசாங்கமும் பல
வாக்குறுதிகளை எமக்கு வழங்கியது. ஆனால் இதுவரையில் அவ் வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை.
மாறாக தொடர்ந்தும் பல்வேறு வகையில் அரசியல் ரீதியாக பழிவாங்கல் மற்றும் ஒடுக்கப்படல் போன்ற விடயங்களே இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும்
வீணடிக்கப்படும் நிலையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்
எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொண்டு அதனை ஜனாதிபதிக்கு
அறிவிக்க உள்ளனர். இக்கூட்டத்தின் போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள
அசாத்சாலி தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
அண்மையில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில்
அசாத் சாலி தீவிரமாக குரல் கொடுத்தார். இந்நிலையில் அவரை கைது செய்துள்ளமை
முஸ்லிம் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீதான விசாரணைகள்
வெளிப்படையாக இடம்பெற்று அவரை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார்.
Post a Comment