தம்புள்ளைப் பள்ளி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. புனித நகர
அபிவிருத்தி என்ற போர்வையில் இப்பள்ளி எந்த நேரமும் அகற்றப்படலாம் என்ற
அச்ச நிலையும் மேலோங்கியுள்ளது. தம்புள்ளைப் பள்ளி விவகாரம் தொடர்பாக இப்
பள்ளியின் நிர்வாக சபை உறுப்பினர் சட்டத்தரணி புஹாரிதீன் அமானுல்லாஹ்
வழங்கிய செவ்வி
பதில்: நிறைய சிக்கல்கள் உள்ளன. அக் காலத்திலிருந்து இப் பள்ளி
புனரமைக்கப்படுவதை பெரும்பான்மையினர் விரும்பவில்லை. காலத்துக்காலம்
விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதுகூட சரியாகச் சாத்தியப்
படவில்லை. அரச அதிகாரிகள் பள்ளி விஸ்தரிப்புப் பணிகளுக்குத் தடைகளையே
போட்டனர். சில சந்தர்ப்பங்களில் பயமுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
பதில்: இதுவரைக்கும் அவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. 60
வருட கால பழமை, சரித்திரம் கொண்ட பள்ளியை அகற்றுவதற்கும் நிர்வாகம்
ஒருபோதும் துணை போகாது. கடைசி நிமிடம் வரைக்கும் தம்புள்ளை பள்ளி
உடைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகம்
முன்னெடுக்கும்.
பதில்: எத்தனையோ கடிதங்களை ஜனாதிபதி உட்பட, அமைச்சர்களுக்கு அனுப்பி
வைத்தோம். உரிய பதில்கள் கிடைக்கவேயில்லை. தொலைபேசி ஊடாகவும் அறிவித்தோம்.
அதற்குக்கூட தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை. பள்ளி உடைக்கப்பட மாட்டாது
என்ற பதில் தான் வருகிறது.
கேள்வி: தம்புள்ளைப் பள்ளி எந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
பதில்: 1950களில் இப்பள்ளி
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் உண்டு. காத்தான்குடியைச்
சேர்ந்த உதுமான் சாஹிபுஹாஜி முஹம்மத் இப்றாகீம் என்ற வர்த்தகரே இப்பள்ளியை
இங்கு நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தம்புள்ளை
நகரிலிருந்த வர்த்தகர்களும் ஒரு சில பொது மக்களும் இப் பள்ளியை
நிர்மாணிப்பதில் முன்னின்று உழைத்துள்ளனர்.
கேள்வி: பள்ளி ஆரம்பத்தின் போது எதிர்ப்புகள் ஏதும் ஏற்பட்டதா?
பதில்: இல்லை பெரும்பான்மையினர் கூட
இப்பள்ளிவாசல் விடயத்தில் அக்காலத்தில் ஒத்துழைப்ப வழங்கியுள்ளனர்.
பள்ளியின் நிர்வாக விடயங்களில் முஸ்லிம் பிரமுகர்கள் உதவிகளையும் அம்பாறை,
மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள்
சமயக் கடமைகளை நிறைவேற்ற வருகை தந்ததையடுத்து இப்பள்ளி பிரபல்யமடையத்
தொடங்கியது.
கேள்வி: ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களும் இருந்ததுண்டா?
பதில்: தற்போது உள்ளதை விடவும்
முஸ்லிம்கள் அப்போது அப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். குடியிருப்புக்களும்
பெருமளவு இருந்துள்ளன. இப் பள்ளியை இவர்கள் கட்டிக் காத்து வந்துள்ளனர்.
கேள்வி: இப்பள்ளியை ஏன் நவீன வசதிகளுடன் மீள் நிர்மாணம் செய்ய முடியவில்லை?
கேள்வி: புனித பூமி அபிவிருத்தித் திட்டத்துக்குள் இப்பள்ளி இடம்பெற்றுள்ளதா?
பதில்: அவ்வாறு இடம்பெற்றுள்ளதாகத்தான்
சொல்கிறார்கள்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி வரை படங்கள்
இரகசியமாகப் பேணப்பட்டு புனித நகர அபிவிருத்திப் பணிகள்
முன்னெடுக்கப்படுவதால் பள்ளிவாசல் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கூற
முடியாவிட்டாலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலைமையைப்
பார்க்கும் போது பள்ளியும் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
கேள்வி: தம்புள்ளைப் பள்ளி விவகாரம் எப்போது சூடுபிடிக்க ஆரம்பித்தது?
பதில்: கடந்த இரண்டு வருட காலத்துக்குள்
தம்புள்ளைப் பள்ளி விவகாரமாக மாறியது. தம்புள்ளை ரஜமகா விகாரையின் பிரதம
தேரர் இனாமலுவ தேரர் இப் பள்ளி விடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு
வருகிறார். இப் பள்ளி அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென்பதில் தேரர்
உறுதியாக உள்ளார். முஸ்லிம்களுக்கும், இப் பள்ளிக்கும் எதிராக அவர்
தொடர்ந்தும் இனவாதத்தைக் கக்கி வருகிறார். புனித நகர அபிவிருத்தி என்ற
போர்வையில் தம்புள்ளைப் பள்ளியை அகற்றுவதற்கான முஸ்தீபுகளை அவர்
தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்.
கேள்வி: 2012 ஏப்ரல் மாதத்தில் தம்புள்ளைப் பள்ளி தாக்கப்பட்டதே, சேதமாக்கப்பட்ட பகுதிகள் சீர் செய்யப்பட்டதா?
பதில்: ஆம், சேதமாக்கப்பட்ட பள்ளியின்
பாகங்கள் சீர் செய்யப்பட்டதுடன், இதற்கு மேலதிகமாக விஸ்தரிப்புப் பணிகள்
ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான அனுமதி அரச அதிகாரிகளால்
வழங்கப்படவில்லை.
கேள்வி: ஜும்ஆ தொழுகைக்கு எவ்வளவு பேர் வருகின்றனர்?
பதில்: ஏறத்தாழ 1500 பேர் அளவில் ஜும்ஆத்
தொழுகையை நிறைவேற்ற வருகின்றனர். இவர்களுள் 500 பேர் தினமும் பள்ளிக்கு
வெளியே தொழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான பாதையிலிருந்து 250 மீற்றர்
தொலைவில் பள்ளி அமைந்துள்ளதால் பள்ளி வளவுக்குள் தொழுவதற்குக் கூட
சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
அம்பாறை, மட்டக்களப்பு, கல்முனை உட்பட
பிரதான இடங்களிலிருந்து கொழும்பு மற்றும் இதர இடங்களுக்குச் செல்லும்
முஸ்லிம்கள் தொழுகைக்காக இந்தப் பள்ளியையே நாடுவதுண்டு. தம்புள்ளை
நகரிலிருந்தும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் முஸ்லிம்கள் பெருமளவில்
தொழுகைக்காக வருகின்றனர். இந்த எண்ணிக்கை சில சந்தர்ப்பங்களில்
அதிகரிப்பதும் உண்டு.
கேள்வி: புனித நகர அபிவிருத்தி என்ற
போர்வையில் பள்ளி அகற்றப்படுமிடத்து வேறு இடமொன்றில் பள்ளி நிர்மாணிக்க
நிர்வாகம் திட்டமிட்டுள்ளதா?
கேள்வி:பள்ளி அகற்றப்படுமானால் நிலைமை எவ்வாறிருக்கும்?
பதில்: இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
கறைபடிந்த நாளாகவே அது இருக்கும். இன்னொரு மதத்தின் அபிவிருத்தி என்ற
போர்வையில் புனித இஸ்லாமிய மார்க்கத்தின் பழமை வாய்ந்த பள்ளியை உடைப்பதை
மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். பள்ளி உடைக்கப்படுமானால்
தம்புள்ளை முஸ்லிம்கள் நிர்க்கதிக்கு உள்ளாகுவார்கள்.
கேள்வி: பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்படுமானால் பள்ளி நிர்வாகம் அதை ஏற்குமா?
பதில்: அதுகுறித்து பள்ளி நிர்வாக இறுதித்
தீர்மானமொன்றினை மேற்கொள்ளலாம். எந்த இடத்தில் பள்ளி
நிர்மாணிக்கப்பட்டாலும் தற்போதுள்ள வசதியான இடம்போல் அது அமையாது.
கேள்வி: கடைகள், குடியிருப்புக்கள் அகற்றப்பட்டுள்ளமை பற்றி..?
பதில்: புனித நகர அபிவிருத்தித்
திட்டத்தின் கீழ் கடைகள், குடியிறுப்புக்களை அகற்றும் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்படுகின்றன. பள்ளியைச் சூழவுள்ள கடைகள், கட்டிடங்கள் ஏற்கனவே
அகற்றப்பட்டு விட்டன. ஏனையவற்றையும் துரிதமாக அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி
அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கேள்வி: அபிவிருத்திப் பணிகளை தீவிரமாக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளாரே?
பதில்: ஆம், இப் பணிகள் நிறைவு பெற நீண்ட
காலம் எடுக்குமென எதிர்பார்த்திருந்தோம். எனினும் ஜனாதிபதியின் பணிப்புரையை
அடுத்து பணிகள் வேகமாக்கப்படுமானால் பள்ளியும் தீவிரமாக அகற்றப்படலாம்.
ஏனெனில் பிரதான பாதையின் ஒரு பகுதி பள்ளியை ஊடறுத்துச் செல்கிறது. இப்பள்ளி
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டதல்ல. அமானா வீட்டினால்தான்
மறைக்கப்பட்டிருக்கிறது. இதனை பிரதான பாதை ஊடறுக்குமானால் நிலைமையை நீங்களே
புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி: புனித நகர அபிவிருத்தி துரிதப்படுத்துவதன் மூலம் பள்ளியும் கூடியகெதியில் அகற்றப்படுமா?
பதில்: ஆம், பள்ளியை அங்கிருந்து அகற்றாமல் புனித நகர அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது. இதுதான் உண்மை.
கேள்வி: பள்ளியின் நிலை குறித்து ஜனாதிபதி பிரதமர், அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லையா?
கேள்வி: முஸ்லிம் அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள்?
பதில்: அவர்கள் பிரச்சினை
ஆரம்பத்திலிருந்து பள்ளி உடைக்கப்பட மாட்டாது என்றே கூறி வருகிறார்கள்.
தற்போதும் அதைத்தான் சொல்கிறார்கள். ஒரு சிலர் மாற்றுக் கருத்துக்களையும்
சொல்கிறார்கள்.
கேள்வி: அவர்கள் யார். என்ன சொன்னார்கள் என்பதைக் கூற முடியுமா?
பதில்: அவ்வாறு கூற முடியாது. அது அவர்களுக்குப் பிரச்சினையாக அமையக் கூடும்.
கேள்வி: பள்ளியில் எத்தனை பேர் அங்கத்தவர்களாக உள்ளனர்?
பதில்: ஏறத்தாழ 100 பேர் அளவில் இவர்களுடன் சேர்ந்து வெளியூர்களிலிருந்து வருகின்றவர்களும் பள்ளிப் பணிகளுக்கு உதவுகிறார்கள்.
கேள்வி: இனமாலுவ தேரருடன் பள்ளி பற்றிப் பேசவில்லையா?
பதில்: ஆரம்பத்திலிருந்தே புனித நகர
அபிவிருத்தி என்றதும் பள்ளி அகற்றப்பட வேண்டுமென்பதில் அவர்பிடிவாதமாக
உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக அவர் விடாப்பிடியாக உள்ளார்.
நேரடியாகவும் மறைமுகமாகவும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார். இது
தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வெளியிடுகிறார். ஊடகங்களில் பிரசாரம்
செய்கிறார். இவ்வளவும் செய்து வரும் தேரரிடம் பள்ளியைக் காப்பாற்றித்
தருமாறு எவ்வாறு கோருவது.
கேள்வி: பள்ளி அகற்றப்பட்டால் எங்கே தொழுவது?
பதில்: அதுதான் முஸ்லிம்களிடமுள்ள முக்கிய கேள்வி. இந்தக் கேள்விக்கு எங்கிருந்து விடை கிடைக்குமோ இறைவன் தான் அறிவான்.
கேள்வி: பள்ளி அகற்றப்பட்டால் தம்புள்ளை பள்ளிக்கு வரும் முஸ்லிம்கள் தொழுகைக்கு எங்கு செல்ல வேண்டும்?
பதில்: 20 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள
கலேவெல பள்ளிவாசல் அல்லது 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள நாவுல
பள்ளிவாசலுக்கு அல்லது 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள நிகவடவல
பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.
கேள்வி: தம்புள்ளையில் பள்ளி நிர்மாணம் பற்றி எவரும் பேசினார்களா?
பதில்: பள்ளி தாக்கப்பட்ட போது ஒரு சிலர்
இது பற்றிப் பேசினார்கள். பின்னர் அது பற்றி யாரும் கதைப்பது கிடையாது.
இப்போது கூட எவரும் இதுபற்றிப் பேசுவதில்லை.
கேள்வி: அரசாங்கமோ, தனிப்பட்டவர்களோ பிறிதொரு இடத்தில் பள்ளியை நிர்மாணிக்கும் பட்சத்தில் பள்ளியை இடம்மாற்றுவீர்களா?
பதில்: பள்ளி இருக்கும் போது வேறு பள்ளியொன்று அவசியமில்லை. பள்ளி உடைக்கப்படுமாயின் நிர்வாகம் அது குறித்து தீர்மானிக்கும்.
கேள்வி: முஸ்லிம்கள் இந்த விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பதில்: கடந்த கால இனவாத
செயற்பாடுகளின்போது முஸ்லிம்கள் பொறுமைக்கு மேல் பொறுமை காத்தார்கள்.
தம்புள்ளைப் பள்ளி விவகாரத்திலும் முஸ்லிம்கள் பொறுமையைக் கைக்
கொண்டார்கள். தற்போது நிலைமை மோஷமான கட்டத்தை எட்டியுள்ளது. எனவே,
முஸ்லிம்கள் இப் பள்ளி விவகாரத்தில் மிகச் சிறந்த தீர்வு கிட்ட வேண்டுமென
பிரார்த்தனை புரிய வேண்டும். துஆ ஒன்று மாத்திரமே தற்போது எமது
ஆயுதமாகவுள்ளது. எனவே அனைவரும் பிரார்த்திப்போம். நிச்சயமாக அல்லாஹ்
வெற்றியைத் தருவான்.
Post a Comment