
வடமாகாண சபைக்கு தேர்தலை நடத்தக் கூடாது, அதுவும் தற்போதுள்ள சட்ட
ஏற்பாடுகளின் பிரகாரம் வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படக் கூடாது
என்றும் மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியல் யாப்பின் 13வது
திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்குள் உள்ள இனவாத சிந்தனை
கொண்ட அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர்
கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு அமைச்சரவைக்கு வெளியில் இருந்து
பூரண ஆதரவை வழங்கிவருகின்றார் இந்த நாட்டின் இனவாத சக்திகள் அனைத்துக்கும்
ஒட்டு மொத்தமாகத் தலைமை தாங்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
ஒருபுறம் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அதுவும் ஏனைய மாகாண
சபைகளுக்கு நடத்தப்பட்டது போலவே தற்போதைய சட்டங்களின் கீழ் நடத்தப்படும்
என்று ஜனாதிபதி முழு உலகுக்கும் பறந்து திறிந்து வாக்களித்த வண்ணம்
உள்ளார். உள்ளுரில் அமைச்சரவைப் பேச்சாளரும் இதையேதான் கூறுகின்றார். ஆனால்
மறுபுறம் அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், பாதுகாப்பு அமைச்சின்
செயலாளரும் வட மாகாண சபைக்கு தேர்தல் நடந்தால் அது மீண்டும் பிரிவினைக்கு
வழிவகுக்கும் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
மாகாண சபைகள் குறித்து இதுவரை இல்லாத ஒரு புதுமையான அச்சமும் வெறுப்பும்
இவர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.
இதற்கு முக்கிய காரணம் வட மாகாண சபைக்கு தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம்
அரசாங்கம் வெல்லப் போவதில்லை என்பதை இவர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி
தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.இந்த அரசாங்கத்தின் எந்தவொரு
திருகுதாளமும் வடக்கில் பலிக்கப்போவது இல்லை என்பதை இவர்கள் நன்கு
உணர்ந்துள்ளனர்.அரசாங்கத்துக்கு பாடம் புகட்ட வட பகுதி மக்கள் தயாராக
உள்ளனர் என்பதையும் இவர்கள் நன்கு அறிவர். மகிந்த ராஜபக்ஷ
கூட்டாட்சியினதும்,குடும்ப ஆட்சியினதும் அஸ்தமனம் வட மாகாணத்தின் தேர்தல்
முடிவாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்துள்ளதாலேயே தற்போது இனவாத
குழுமத்தின் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வட மாகாண சபைக்கான தேர்தல் நடப்பதை ஏதாவது வழியில் தடுக்கவோ அல்லது அதற்கு
முன் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான
அதிகாரங்களைக் குறைக்கவோ அல்லது 13வது திருத்தத்தை முழுமையாக நீக்கவோ எந்த
முயற்சி மேற்கொண்டாலும் அது இந்த அரசின் வீழ்ச்சியின் தொடக்கமாகத்தான்
அமையும். ஏனெனில் இந்த விடயத்;தில் இனவாத சக்திகளுக்கு இடமளித்து நாடு
தொடர்ந்தும் அழிவுப் பாதையில் செல்வதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அமைச்சரவைக்குள் உள்ள பல அமைச்சர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.
இவர்களுக்குப் பூரண ஆதரவு வழங்க அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும்
சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் முடிவு
செய்துள்ளன. அரசுக்குள் இனவாத சக்திகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்தப்
போராட்டத்துக்கு பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து கொண்டு பூரண ஆதரவு
வழங்க தேசிய ஐக்கிய முன்னணியும் உறுதி பூண்டுள்ளது.
சர்வதேச சமூகத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு
மிக்க இத்தருணத்தில் இனவாத சிந்தனையில் இந்த விடயத்தை அனுகி நாட்டை அதள
பாதாளத்துக்குள் தள்ளும் முயற்சியை கைவிடுமாறு சம்பந்தப்பட்டவர்களை
வினயமுடன் வேண்டிக் கொள்கிறோம்.
அஸாத் சாலி
பொது செயலாளர்
தேசிய ஐக்கிய முன்னணி
Post a Comment