பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
சூரிய காந்தி படத்தில் வரும் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடலின் இடையில் இப்படி சில வரிகள் வருகின்றன. ” உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிலவும் கூட மிதிக்கும்” என்ற கவிஞர் கண்ணதாசனின் இந்த கருத்தாழமிக்க வரிகள் பொதுவான நிலைப்பாட்டையே சுட்டி நின்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதுக்கு பொருத்தமில்லாத வரிகளாகத்தான் இவை இருக்கும் என நம்பலாம்.
பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரச தலைமையினால் அழைத்துக் கொடுக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள இந்த அமைச்சர் பதவியானது தன்னை மேலே தூக்கி விட்டு மக்கள் செல்வாக்கையும் மேன்மையையும் ஏற்படுத்தி விடும் என அவர் நினைத்திருந்தால் அந்த நினைப்பு தப்பானது என்பதனை அவர் இப்போது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
அவர் அரசியலின் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மதிக்கப்படாத, தனித்து விடப்பட்ட நிலைமையே இன்று காணப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த தானும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதனை தனது கட்சித் தலைமை கை நீட்டி வரவேற்கும் என அவர் நினைத்திருந்தால் அது அவரது மாபெரும் தவறான நினைப்பு என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இல்லாத போது அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டமை மற்றும் தலைவருடன் இது தொடர்பில் பேசி அனுமதி பெற்றுக் கொள்ளாமை போன்றன கட்சித் தலைமையிடம் மட்டுமல்ல..கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களிடையேயும் பஷீர் தாவூத் மீதான அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது
இதன் விளைவுகளை காலம் இப்போது மெது,மெதுவாக அவருக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. பஷீருக்கு இந்த விடயம் மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத ஒரு இக்கட்டான நிலைமையை இன்று ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.
அவரது மாவட்டத்தில் ஏன் அவர் பிறந்த ஊரில் கூட அவருக்கு ஒரு சரியான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றால், அவர் தொடர்பில் கட்சி மட்டத்திலும் மக்கள் மனங்களிலும் என்ன உள்ளது என்பதனை அறிந்து கொள்ள நடிகர் விவேக்கை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் கட்சியின் பல முக்கியஸ்தர்கள் மத்தியில் இவரது அமைச்சுப் பொறுப்பு என்பது மிகுந்த எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதற்குச் சான்றாக சில ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
1. ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராகப் பதவிப் பிரமாணஞ் செய்து கொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அமைச்சில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் வைபவத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட முக்கியஸ்தர்களை அழைத்திருந்த போதும் அதனை அவர்கள் முற்றாக நிராகரித்திருந்தனர். கடைசியாக தனக்குத் தேவையான சிலருடன் சென்று கடமையைப் பொறுப்பேற்றார்.
2. ஏறாவூரில் பிரமாண்டமான வரவேற்புக் கூட்டம் ஒன்றை பஷீர் சேகு தாவூதுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அதில் பங்கெடுக்குமாறும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினாலும் முக்கியஸ்தர்களாலும் நிராகரிக்கப்பட்டமை.
3. அகில உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மகாநாடு தொடர்பான சில ஏற்பாட்டுக் கூட்டங்களுக்கு இவர் அழைக்கப்படாமை அல்லது அழைத்தும் கலந்து கொள்ளாமை. போன்ற சில காரணங்களே அவர் மீதான அதிருப்திக்குப் போதுமான சான்றுகளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அமைச்சர் ஹக்கீம் பதவியேற்ற காலம் முதல் அவர் பஷீர் ஷேகுதாவூதுடன் எவ்வாறு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார் என்பது எவருக்கும் தெரியாத விடயமல்ல. இவர்களின் ஐக்கியத்தினால் கட்சிக்குள் முரண்பாடுகள் கூட கடந்த காலங்களில் தோன்றியிருந்தன. ஆனால் அந்த ஐக்கியம் இன்று கண்பட்ட கதையாகப் போய் விட்டது.
அமைச்சர் ஹக்கீமின் நம்பிகையை வென்றவராகக் கருதப்பட்ட பஷீர் இன்று நம்பிக்கைத் துரோகியாக கணிக்கப்படும் நிலைக்கு அவரது அமைச்சுப் பதவி அவரைக் கொண்டு சென்றுள்ளது.
இது ஒரு புறமிருக்க, அமைச்சர் பஷீர் ஷேகு தாவூதை அமைச்சுப் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்க வேண்டுமென்ற யோசனைகள் மிக இரகசியமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் கட்சி முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஹக்கீம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலியை முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்வாங்குவதன் மூலம் பஷீர் சேகு தாவூத்தை ஒதுக்கி விடும் முதற்கட்ட வியூகம் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை உண்மைப்படுத்துவது போன்றே அண்மையில் அமீர் அலி தெரிவித்திருந்த சில கருத்துகளும் அமைந்திருந்தன. அதாவது, கிழக்கு மாகாண அரசியலிலும் தேசிய அரசியலிலும் எதிர்பாராத சில மாற்றங்கள் நிகழப் போவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், தான் கூறிய கருத்துகள் பஷீருடன் தொடர்புபட்டதல்ல என அமீர் அலி கூறுவாராக இருந்தாலும் அது காகம் அமர பழம் விழுந்த கதையாகவே இருநது போகட்டும்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாநாடு தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஹக்கீமும் அமீர் அலியும் ஒன்றாகத் தோன்றியிருந்தனர். தான் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் அவரின் சார்பாகத்தான் இந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன் என்று அமீர் அலி இதற்கு காரணம் கூறினாலும் இன்று எழுந்துள்ள நிலையில் அதனை மக்கள் எந்தளவுக்கு நம்புவார்கள் என்பதும் சந்தேகமே.
மேலும், அமீர் அலியை முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்வாங்கும் விடயத்தில் தற்போது அமைச்சர் ஹக்கீம் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தம் என்பது ஹக்கீமைப் பொறுத்த வரையில் ஒரே கல்லில் இரு மாங்காய்களைப் பறிப்பது போன்றதானதொரு சந்தர்ப்பத்துக்கு இடமளித்துள்ளது என்றும் கூறலாம்.
1. பஷீர் ஷேகு தாவூதை ஓரங்கட்டி விட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ள செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப அமீர் அலியை கட்சிக்குள் உள்வாங்குதல்.
2. அதற்கு மேலாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த முக்கியஸ்தரான அமீர் அலியை மு.காவுக்குள் உள்வாங்குவதன் மூலம் அந்தக் கட்சியை மேலும் தனித்து விடல்.
எது எப்படியிருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் மேற்கொள்ளப்படும் ஓர் அகற்றலுக்கான இன்னொரு அணைப்பு என்ற இந்த விடயத்தில் அமீர் அலி கவனமாகச் செயற்பட வேண்டும். அமைச்சர் அஷ்ரப் தனது கட்சிக்கு தேவையானோரை அணைத்துக் கொண்டதும் அதற்காக அவர் கையாண்ட யுக்திகளும் வேறானவை. அவரால் உள்வாங்கப்பட்ட எவரையும் அவர் தனது தற்காலிக தலைவலி மாத்திரைகளாகப் பயன்படுத்தியதே இல்லை என்பதனயும் அமீர் அலி புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், பஷீர் ஷேகு தாவூதை நீக்கி விட்டு தன்னை உள்ளே எடுப்பதனை முஸ்லிம் காங்கிரஸினால் தான் மாலை போட்டு வரவேற்கப்படும் ஒரு விடயமாக அமீர் அலி நினைத்துக் கொள்ளவும் கூடாது. அவ்வாறு அவர் நினைத்தாரானால் அது அவரின் அரசியல் வெகுளித்தனமாகவே முடியும்.
இந்த விடயத்தில் அமீர் அலி அரசனை நம்பி புருஷனைக் கைவிடல் என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொள்ளல் அவருக்கு நல்லது.
Post a Comment