அசாத் சாலியின் கைதின் மூலம் நாட்டில் கருத்துச் சுதந்திரம் மற்றும்
அரசியல் செய்யமுடியாத நிலைமை போன்றன இல்லையென்பது வெளிப்படையாக
தெரிகின்றது. அரசுக்குள்ளேயே இன்னொரு அரசாங்கம் செயற்படுகின்றது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமே இது ஒரு சட்டத்திற்கு விரோதமான செயல் என
தெரிவித்துள்ளார். இவ்வாறு நீதியமைச்சர் தெரிவித்துள்ளமையானது வெட்கப்பட
வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும்
இதற்காக குரல்கொடுக்கவில்லை. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் பதவிவிலக
வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற
உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின்
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு
ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் .
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும்.
அசாத் சாலிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் அவரைக் கைது செய்ய வேண்டும்.இது
ஒரு பழிவாங்கும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
அசாத் சாலியின் கைது குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை சந்தேகநபர் மற்றும் சர்வதேச பிடிவிறாந்து
பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான கே.பி. அரசின் பாதுகாப்பிலும் கருணா அம்மான்,
தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசின் பாதுகாப்புடன்
உள்ளனர். அரசாங்கம் திவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்து தன்னுடன்
வைத்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment