முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி நியாயமின்றி கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட அசாத் சாலி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.இந்நிலையில் அசாத் சாலி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே நான்காம் மாடியில் தனது கைதை எதிர்த்து அசாத் சாலி உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் இதனால் நீரிழிவு நோயாளரான அவரின் உடல் நிலையில் சிக்கல்கள் ஏற்படலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாளை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெவடகஹ பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment