Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அமீர் அலி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் : இணைவாரா? இணைக்கப்படுவாரா?

Thursday, May 20 comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எம்.எஸ்.எஸ் அமீர் அலி பாராளுமன்றம் நுழைந்தார். பாராளுமன்றப் பிரவேசம் மூலம் ஆரம்பித்த அமீர் அலியின் அரசியல் பயணம் இன்று வரைக்கும் கல்குடாத் தொகுதியில் காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருவதை நாம் அவதானிக்கலாம்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவு அல்லது இடைவெளி காரணமாக மீண்டும் பாராளுமன்றம் நுழையும் சந்தர்ப்பத்தை இழந்த அமீர் அலி 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் மூலம் கல்குடாத் தொகுதியை அரசியல்ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு பிரதிநிதியாக தற்போது திகழ்கின்றார்.
அமீர் அலியின் அரசியல் பிரவேசத்திற்கு பிந்திய நிலையில் கல்குடாவின் சமூக நகர்வுகளில் அவரின் செயற்பாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தருணம் வரைக்கும் இருந்து வருவதை அவதானிக்கலாம். எனவேதான் கல்குடாத் தொகுதியில் அமீர் அலியின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கின் கனதியை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவாரா? அல்லது இணைக்கப்படுவாரா? ஏன்ற கேள்விகள் கல்குடாத் தொகுதி மக்களிடம் தொக்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. கல்குடாத் தொகுதி அரசியலில் பாரிய பங்களிப்பை செலுத்தி வரும் அமீர் அலி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான சமிஞைகள் தென்படுவதாக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இந்த செய்தியின் பின்புலத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அந்த வகையில் கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரசின் மரபு ரீதியான செல்வாக்கு அதேபோன்று அமீர் அலியின் அரசியல் செயற்பாடுகள் அல்லது மீண்டும் கல்குடாத் தொகுதி தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு கையாளும் உபாயங்கள் என்ற பாத்திரங்கள் ஊடாக பார்வையை செலுத்துவது பொருத்தமாக அமையும் என்று நினைக்கின்றேன்.
கல்குடாத் தொகுதியும் முஸ்லிம் காங்கிரசும் :
‘முஸ்லிம் காங்கிரஸின் இதையம் கல்குடாத் தொகுதி’ என அதன் ஸ்தாகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களினால் வர்ணிக்கப்பட்ட ஒரு தொகுதியாக இத்தொகுதி காணப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்கு முன்பு தேசிய கட்சிகளின் அல்லது பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கமும் பிரதேச தலைவர்களின் ஆதிக்கமும் கல்குடாத் தொகுதியில் பாரிய பங்களிப்பை செலுத்தியது. அதேபோன்று தனிப்பட்டவர்களின் ஆளுமைகளின் வகிபங்கும் குறிப்பிடத்தக்கவையாக காணப்பட்டன. இந்தப் பின்புலத்தில்தான் கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் வரவு இடம்பெருகின்றது.
மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் சிரேஷ்ட ஆளுமை என்பவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் பொருளாதாரத் துறையை கல்குடாத் தொகுதிக்கே வழங்கப்பட்டது. மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அன்று முஸ்லிம் காங்கிரஸில் இணைவது அல்லது அது சார்பாக தேர்தலில் போட்டியிடுவது என்பன ஆயுதம் இல்லாத இயக்கத்தில் இணைவதற்கு சமமாகவே காணப்பட்டன. அரசியல் சலுகைகளுக்கு அப்பால் தமது இருப்பை தக்கவைப்பதற்கான போராட்ட இயக்கமாகவே முஸ்லிம் காங்கிரஸ் அப்போது காணப்பட்டது. இந்தப் பின்னணியில் மரபுரீதியான தொடர்புகளைக் கொண்ட கல்குடா மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் நிறுவனத்தினால் எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படாததையிட்டு கல்குடாத் தொகுதி மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இவ்வாறான அரசியல் நகர்வுகளின் பரிணாமத்தால் கல்குடாத் தொகுதி 2000, 2001 ஆம் ஆண்டுகளில் முஹைதீன் அப்துல் காதர் ஊடாகவும் 2004 ஆம் ஆண்டு அமீர் அலி ஊடாகவும் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டது. இவ்வாறு தொடராக மூன்று பாராளுமன்றத் தேர்தல்களில்; கல்குடாத் தொகுதி தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு கல்குடா மக்கள் கையான்ட உபாயமே மூல காரணம் என்றால் மிகையாகாது.
கல்குடாத் தொகுதி தமது பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு முன்பே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமை மறைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் கீழ்தான் கல்குடா தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமீர் அலியும் முஸ்லிம் காங்கிரசும் :
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றம் நுழைந்த அமீர் அலி ஒரு வருட காலத்திற்குளே முரண்பட்டு முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறி சந்திரிக்கா அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு அமைச்சராகவும் மஹிந்த அரசாங்கத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராகவும் செயற்பட்டார். அமீர் அலி, அமைச்சர் ரிஷாட் புதிவுத்தீன் மற்றும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி செயற்படலாயினர். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை வடிவமைப்பதில் அமீர் அலியின் பங்கு கனதியானதாக இருந்தது. ஆனால் அக்கட்சி மூலம் பெருத்த பலன்களை அமீர் அலி பெற முடியாமல் போனமையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறிய அமீர் அலி அபிவிருத்தி அரசியல் என்ற செயற்பாட்டின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையை அவதானிக்கலாம். அபிவிருத்தி அரசியல் என்ற செயற்பாட்டின் படி அமீர் அலி குறுகிய காலத்தில் தனது அடையாளத்தை பிரதேச, தேசிய அளவில் நிலை நாட்டியதை மறைக்க முடியாது. அமீர் அலியின் அபிவிருத்தி அரசியல் என்ற வேறொரு பத்தியில் அமீர் அலி மேற்கொண்ட செயற்பாடுகளை நாம் அணுகலாம்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறி அமைச்சராக செயற்பட்ட அமீர் அலி தமது செல்வாக்கை அல்லது ஆதரவாளர்களை திரட்டுவதில் வெற்றி கண்டார் என்றே குறிப்பிட வேண்டும். இதனால் மரபு ரீதியான தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் பரப்பு அமீர் அலியின் செயற்பாட்டினால் மிகச் சிறியதாக சுறுக்கப்பட்டது. இதற்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலை சுட்டிக்காட்ட முடியும்.
கடந்த 2011 மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் 17885 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் முஸ்லிம் காங்கிரஸ் 966 வாக்குகளை மாத்திரமே பிரதேச சபை தேர்தலில் பெற முடிந்தது. அளிக்கப்பட்ட வாக்குகளில் அமீர் அலி சார்ந்திருந்த ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 72.16 வீதமான வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸ் 7.91 வீதமான வாக்குளையும் பெற்றிருந்தது. இவ்வம்சம் வரலாறு காணாத வகையில் முஸ்லிம் காங்கிரஸின் வீழ்ச்சி கல்குடாத் தொகுதியில் இடம்பெற்றதை அடையாளப்படுத்தியது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் :
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வகுத்த திட்டத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 உறுப்பினர்களை அது பெற்றிருந்தது. இதன்படி கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி ஜவாஹிர் சாலி ஏறாவூரை மையப்படுத்தி எம்.எஸ் சுபையர் காத்தான்குடியை மையப்படுத்தி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அம்மூன்று பேரும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது கல்குடாத் தொகுதியில் போட்டியிட்ட ஜவாஹிர் சாலி மிகக்கூடுதலான விருப்பு வாக்கை பெற்ற பின்புலத்தில் அமீர் அலியின் செயற்பாடு அமைந்திருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கல்குடாத் தொகுதியில் அமீர் அலி சார்பாக போட்டியிட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 36731 வாக்குகளைப் பெற்று 66.81 வீதமான வாக்குகளையும் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 15673 வாக்குகளைப் பெற்று 28.51 வீதமான வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் பாராளுமன்ற பதவிகளை இராஜினிமாச் செய்து விட்டு போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதியில் எதிர்பார்த்தளவு சாதிக்க முடியவில்லை இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடுவதென்றால் அமீர் அலியின் அபிவிருத்தி அரசியல் என்பதற்கு முன்னால் முஸ்லிம் காங்கிரஸின் உரிமை அரசியல் செல்வாக்கு இழந்திருந்தமையை குறிப்பிட முடியும்.
கடந்த வருடம் இடம்பெற்ற இரண்டாவது மாகாண சபைத் தேர்தலில் அமீர் அலியின் உபாயம் வெற்றியடைந்ததை குறிப்பிடலாம். 2008 ஆம் ஆண்டு வகுத்த திட்டத்தை அமீர் அலி மீண்டும் பலமுள்ள உபாயமாக வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. இதன்படி கல்குடாவை மையப்படுத்தி அமீர் அலி ஏறாவூரை மையப்படுத்தி சுபையர் காத்தான்குடியை மையப்படுத்தி சிப்லி ஆகியோர் போட்டியிட்டு அவர்கள் மூவரும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் கல்குடாத் தொகுதியில் அமீர் அலி சார்பான ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 22965 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8604 வாக்குளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, கல்குடாத் தொகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் அமீர் அலியின் பங்களிப்பை புறக்கனிக்க முடியாத படி அமீர் அலியின் செல்வாக்கு குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் அமீர் அலியை மிஞ்சி கல்குடாவில் மாற்று சக்திகளால் அரசியல் செய்ய முடியாத நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது.
அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமை :
தற்போது கல்குடாத் தொகுதியில் அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவாரா என்ற வாதத்திற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது முதலமைச்சர் ஹிஸ்புலாஹ்வுக்கு வழங்கப்படும் என அரசாங்க தரப்பு குறிப்பிட்டிருந்தது ஆனால் அது நிறைவேற்றப்பட வில்லை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முதலமைச்சர் அமீர் அலிக்கு வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பு வெளிப்படையாக குறிப்பிட்டது அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அரசாங்கம் அமீர் அலியை பாராளுமன்றத்தில் உள்வாங்கும் என தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை செயற்பாட்டாளரான அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஓட்டமாவடி முஹைதீன் ஜிம்ஆ பள்ளிவாயலில் பொது மக்களுக்கு மத்தியில் வைத்து குறிப்பிட்டார் ஆனால் அதுவும் இதுவரையும் நிறைவேற்றப்பட வில்லை இந்நிலையில் ‘கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு’ என்ற நிலைக்கு அமீர் அலி ஆகிவிடாமல் தனது பிராந்தியத்தில் செல்வாக்குடன் திகழ்வதற்கான உபாயங்களை தற்போது கையாள முன்வந்துள்ளதை அவரது அண்மைய அரசியல் நகர்வுகள் சுட்டி நிற்கின்றன.
இப்படி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை அமீர் அலிக்குக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் மீண்டும் அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பியிருப்பது தமது அரசியல் இருப்பிற்கு ஆபத்தாக அமையக்கூடும் என்ற காரணங்கள் அமீர் அலியை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதற்கான களக்சூழல் தற்போது கல்குடாவில் கருக்கட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் அமீர் அலியை மீண்டும் இணைத்துக்கொள்ளுமா?
சமகால அரசியல் நிலைவரத்தின் படி முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் பாரிய பின்னடைவை சந்துத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு பிரதானமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம். அமீர் அலியின் செல்வாகு மற்றையது கடந்த காலங்களில் மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸை முன்னெடுத்தவர்களின் அணுகுமுறைகள்
எனவே, கடந்த காலங்களில் மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸை முன்னேடுத்தவர் மீதான விசுவாசமின்மை தற்போது தலைமைத்துவத்திற்குள் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவதற்கு அமீர் அலியின் வரவு காங்கிரஸிற்கு தேவையானதாக காணப்படுகின்றது. இதனை இன்னுமொரு வார்த்தையில் குறிப்பிடுவதென்றால் ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற மனநிலையோடு முஸ்லிம் காங்கிரஸ் அமீர் அலியை உள்வாங்கக்கூடும்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடாவின் அரசியல் இருப்புக்கு பிரதான தளமாக ஏறாவூர் இருந்து வருவதை நாம் மறுப்பதற்கில்லை அந்த வகையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அகமட் அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது மட்டக்களப்பில் 50000 ஆயிரம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை திரட்டுவதை குறிப்பிட்டு வருகின்றார். அமீர் அலி முஸ்லிம் காங்கிரசோடு இணைக்கப்பட்டால் மாகாண அமைச்சருக்கு இது இலகுவான காரியமாக போய்விடும்.
அதேபோன்று நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாக காணப்படும் இரண்டரை வருடங்களின் பின்பு கிழக்கு மாகாண சபை முதலைமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு என்ற விடயத்தை அடைவதற்கு அமீர் அலியின் ஆதரவு நஸீர் அகமட்டுக்கு தற்போது தேவையாக உள்ளது இந்த காரணங்களின் பின்புலத்தில்தான் அமீர் அலிக்கும் நஸீர் அகமட்டுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதை நாம் நோக்க வேண்டும்.
அரசியல் உறவுக்கு வழிசமைத்த இலக்கிய உறவு :
ஏப்ரல் 07 ஆம் திகதி உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டை நடத்துவது பற்றிய கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இம்மகாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு பக்கத்தில் அமீர் அலி அமர்ந்து கலந்கொண்டிருந்த காட்சி அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான சமிஞையாக ஊடகங்களின் பார்வைக்கு தென்பட்டது.
அமீர் அலியின் சகோதரரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரரும் இலக்கிய ரீதியான நண்பர்களாக இருந்து வருவதை அவதானிக்கலாம.; அண்மையில் அமீர் அலியின் சகோதரர் வெயியிட்ட ஒரு புத்தகத்துக்கு ரவூப் ஹக்கீமின் சகோதரர் நூல் விமர்சனம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இலக்கிய ரீதியிலான உறவு மீண்டும் அமீர் அலியை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதற்கான பாதையை திறந்துள்ளது என்ற விடயத்தை நாம் மறுக்கமுடியாது. இந்த அடிப்படையில்தான் உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டை பாரக்க வேண்டியுள்ளது.
சமகால முஸ்லிம் பிரச்சினையும் அமீர் அலியும் :
ஹலால் சம்மந்தமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான பிரேரணை ஒன்று கடந்த மார்ச் 04 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றி அமீர் அலி பொது பல சேனாவுக்கு எதிரான பல கருத்துக்களை நியாயபூர்வமாக தெரிவித்திருந்தார். அரசாங்க தரப்பிலிருந்து பொது பல சேனாவுக்கு எதிராக மாகாண சபையில் உரையாற்றியமை வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்பட்டது.
அதேபோன்று முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க அபிவிருத்தி என்ற விடயத்தை தாண்டி சமூக அரசியல் பற்றி செயற்படும் முகமாக ஹக்கீம், ரிஸாட், அதாவுல்லா ஆகியோர் ஒன்றுபட்டு செயற்படடுவதோடு முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளை களைந்து பணியாற்ற வேண்டும் என அமீர் அலி சுட்டிக்காட்டி வருவதையும் அவதானிக்கலாம்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராகிய அமீர் அலி தற்போது கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு திருப்திகரமாக அமையவில்லை என்பதை குறிப்பிட்டு வருகின்றார். இதனால் எதிர்கால்தில் கிழக்கு மாகாண சபையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் இது தேசிய அரசியலையும் பாதிக்கும் என அமீர் அலி குறிப்பிட்டு வருகின்றார். அரசாங்கத்தின் மீது கம்பிக்கை வைத்து களமிறங்கிய எங்களை அரசாங்கம் கவனம் செலுத்த வில்லை என அமீர் அலி தற்போது வெளிப்படையாக அரசாங்கத்தை விமர்சித்து வருவதின் பின்புலம் அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார் என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.
எனவே, அரசியலில் நிலையான நிச்சயிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான முடிவுகளை பெற முடியாது என்பது யதார்த்தமாகும். இன்றைய நிலைமை நாளைய அரசியலில் எதிர்பார்க்க முடியாதளவு மாற்றியமைக்ககூடியதாக காணப்படுகின்றது. சந்தரப்பத்தை சரியாக பயன்படுத்துவன்தான் சமகாலத்தில் அரசியல்வாதி என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். சந்தரப்ப அரசியலில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனவே, அமீர் அலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவது அல்லது அமீர் அலியை முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பது என்ற விடயத்தை ஒரு சந்தர்ப்ப அரசியல் நோக்கோடு அணுகினால் இதன் நம்பகத்தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by