இலங்கையின் தென் பகுதியில் இனங்களுக்கு
இடையில் வன்முறை ஏற்பட்டு அதனால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம்
தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது
எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவரை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கியதாக குற்றம்
சுமத்தி, அடிப்படைவாத பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் பேரணியை தொடர்ந்து
நேற்று அளுத்கம நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்
இடம்பெற்றன.இதன்போது முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.
இதனையடுத்து சுமார் 1200 பொலிஸார் வரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் இரவு வேளைகளிலும் வன்முறைகள் தொடர்ந்தன.
இந்தநிலையில் வன்முறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
அதேநேரம் சகல சிறுபான்மை சமூகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரியுள்ளார். அத்துடன் நேற்று ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறை ஏனைய இடங்களுக்கும் பரவலாம் என்று தாம் அச்சப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சட்ட ஒழுங்குகளை அரசாங்கம் உடனடியாக அமுல்செய்ய வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினரும் தமது கடமைகளை உரியமுறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை கோரியுள்ளார்.
Post a Comment