(எஸ்.எம்.அறூஸ்)
அழுத்கமவிலும், தர்ஹாநகரிலும் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த தாக்குதலை கண்டித்து இன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அமைதிப் பேரணியை விசேட அதிரடிப்படையினர் தடுத்து தாக்குதல் மேற்கொண்டனர். இன்று காலை 10.00 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதிப் பேரணியை நடத்தியபோது, அவ்விடத்திற்கு வந்த விசேட அதிரடிபப்டையினர் பொதுமக்களை மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தினால் ஏசியதுடன் தாக்குவதற்கும் முற்சித்துள்ளனர். இதன்போது குறுக்கிட்டு அமைதிப் பேரணியின் நோக்கத்தை விசேட அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்டபோது, இதனை கருத்தில் கொள்ளாத விசேட அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டர் தவிசாளரை துவக்குப் பிடியினால் கடுமையாகத் தாக்கியுள்ளார். தான் ஒரு தவிசாளர் என்று பாலமுறை சொல்லியும், விசேட அதிரடிப்படையினர் எல்லோரும் சேர்ந்து தவிசாளர் அன்ஸிலை தாக்கியுள்ளனர். அமைதியான முறையில் நடந்த அமைதிப் பேரணியை வேண்டுமென்றே குழப்பி தவிசாளரைத் தாக்கி மக்களை விரட்டிய இந்த சம்பவத்தினால் பிரதேச மக்கள் விசேட அதிரடிப் படையினரக்கெதிராக கோசங்களை எழுப்பினர். சும்பவ இடத்திற்கு விரைந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் வேண்டுகோளினையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்தைவிட்டு அகற்றப்பட்டனர். அமைதியான பேரணியை நடத்திவிட்டு மகஜர் ஒன்றை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்காக தயாரான நிலையில் மக்கள் இருந்தபோது, அதனை தடுத்து மக்களின் தலைவனான தவிசாளரை தாக்கிய சம்பவம் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக மக்கள் இங்கு ஆவேசமாக கருத்துத் தெரிவித்தனர். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுபப்திகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் மற்றும் பொதுமக்களிடம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர். தவிசாளரை தாக்கியதால் பொதுமக்கள் ஆவேசமாக கோசம் எழுப்பினர். தவிசாளரும், மாகாண சபை உறுப்பினரும் மக்களை அமைதி காத்து வீடுகளுக்குச் செல்லுமாறு கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். தன்மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதி மன்றத்தில் அடிபப்டை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
Post a Comment