எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகக் கட்சியின் தலைவர்
சரத் பொன்சேகா தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்
முன்னால் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில்
இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேச்சு
வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள
போதும் எதுவித முடிவும் இதுவரையில் எடுக்கப்படவி்ல்லை.
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் மற்றும்
பொதுத் தேர்தலின் போது பொதுவான ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்றினைந்து
செயற்படுதல் போன்ற விடயங்கள் பற்றி இந்த பேச்சுவார்த்தையின் போது
ஆராயப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான இந்த சந்திப்பின் போது மக்கள் விடுதலை
முன்னணியினர் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின்
போது அவர்களும் கலந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினருடன் தொடர்பு கொண்டு
கேட்ட போது தமக்கு அவ்வாறான ஒரு கூட்டணி தொடர்பாக எவ்வித தகவலும்
கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு ஆரமபித்தால் அதில் இணைவதா?இல்லையா? என்பது
தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தனர்.

Post a Comment