Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சோகம் நிறைந்த “CHOGM”

Thursday, November 210 comments


நாட்டு பற்றாளன் என்று தன்னை கூறிக் கொண்ட ஒருவன் தேசத் துரோகி என்று காந்தியை கொலை செய்ததால் காந்தியின் கொலை தேசத் துரோகத்துக்கான தண்டனையாகி விடவில்லை. மாறாக இன்றும் காந்தி “மகாத்மா” என்றே அறியப்படுகின்றார்.    நாட்டை அபிவிருத்திப் பதையில் மாத்திரமல்ல “டொச்” காரரின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றான் “யூதன்” என்று அவர்களை வகை தொகையின்றி, குழந்தைகள், வயோதிபர்கள், பெண்கள், நோயாளிகள் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி கொன்று இன அழிப்பு செய்த “அடொல்ப் ஹிட்லர்”  ஜேர்மனிக்கு ஒரு சாபக்கேடு என்கின்றனர் ஜேர்மனியர், இன்றும் “இஸ்ரேல்” க்கு நட்ட ஈடு கட்டிக் கொண்டிருக்கின்றனர்.  பயங்கரவாதி என்று சுமார் 25 வருடங்கள் சிறையில் தவித்து  இன்று மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் முன்னை நாள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி “நெல்ஷன் மண்டேலா” வின் சுகமான வாழ்வுக்கு அவருக்கு பயங்கரவாதி நாமம் சூட்டியவரும் கூட பிராத்திக்கின்றனர். இவை மனித இனத்துக்கான நவீன அரசியலின் சில உதாரணங்கள்.
அரசியலில் இருப்பவர்கள் தம்மை சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்து பாடம் படிக்கவில்லை என்றால் அவர்கள் தங்களை தாங்களாகவே ஆபத்தில் வீழ்த்துகின்றனர். அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட தாங்களாகவே முன்னின்று காரியமாற்றுகின்றனர் என்றால் அதுவும் மிகையாகாது. இந்த அடிப்படை அரசியல் பாடத்தில் இருந்து  நம் நாட்டார் மாத்திரம் விதிவிலக்காக முடியாது.  அதைத்தான் இந்த 23வது பொதுநலவாய அரச தவைவர்கள் மாநாட்டு நடப்புகளில் இருந்து நாம் தெரிந்து கொள்கின்றோம்.
30 வருட ஆயுத போராட்டத்தின் முடிவு 2009 மேயில் எட்டப்பட்டது என்பதில் நம் நாடும் உலகமும் ஓரளவு திருப்தி கொண்டதுடன், யுத்ததிற்கு பின்னால் செய்யப்படவேண்டிய அனைத்தும் குறிபிட்ட சில மாதங்களுக்குள் செய்துவிட முடியாது என்ற நடைமுறை சிக்கல் உலக சமூகத்தால் உணரப்பட்டதால் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசம் வருடங்களாக்கப்பட்டது. ஆனால் அதயே தன் பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கான சந்தர்ப்பமாக இலங்கை அரசாங்கம் அர்த்தப்படுத்தியதும், கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் சுயலாப அரசியலுக்கு பயன் படுத்தியதோடு நாட்டை குழப்ப நிலைக்குள் வைத்திருக்க “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற புதிய முனை ஒன்றும் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டது. ஒரு கொடுமையை மறைத்து புதிய கொடுமை ஒன்றை இன்னொமொரு சிறுபான்மை இனத்தாருக்கு செய்து இது உலக அளவிலான இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை தோற்கடிப்பதற்கான முன்னேற்பாட்டின் ஒரு அங்கம் என்று காட்ட கங்கனம் கட்டிய அரசாங்கத்துக்கு நடந்து முடிந்த பொ.அ.த. மாநாடு உள்ளூர சோகம் நிறைந்த நிகழ்வே.
இந்த மாநாட்டை நடத்தி அதிலே அனைத்து அங்கத்துவ நாடுகளின் அரச/அரசாங்க தலைவர்களை கலந்துகொள்ளச் செய்வதன் மூலம் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் அது தொடர்பான செயல்பாட்டிற்கும் ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிடலாம் என்றும் அப்படி பெற்றுவிட்டால் இனி எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, சிம்பாவையின் ரொபட் முகாபே போல் ஆயுள்காலம் வரையும் பிரச்சினைகள் இன்றி ஆட்சிக்கட்டில் அமரலாம் என்ற ஜனாதிபதியின் கனவு அனேகமாக பகல்கனவாகிட்டது என்றே தெரிகிறது.
எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை, அரச/அரசாங்க பிரதிநிதிகளோ அல்லது ஊடகவியலாளர்களோ எங்கும் செல்லலாம், யாரையும் சந்திக்கலாம் என்ற உறுதி கூறியதற்கிணங்க யாழ் செல்ல முனைந்த ஷெனல் 4 வின் கலெம் மெக்ரேயையும், ஜொனதன் மில்லரையும் அவர்கள் விரும்பியவாறு அங்கு செல்ல அனுமதிக்கிருக்க அவர்கள் அங்கே “உதயன்” பத்திரிகை காரியால விஜயத்துடன், அகதி மக்களையும், கூடவே புதிய வடமாகாண முதலமைச்சரையும் சந்தித்திருப்பர். ஆனால் முதலமைச்சரிடமிருந்து புதிய தகவல் எதையும் பெற்றிருக்க முடிந்திருக்காது. எனவே  இந்த ஊடகவியலாளர்கள் ஷெனல் 4 வின் மூத்த செய்தியாளரான ஜோன் ஸ்னோவின் யூ.கே பிரதமர் டேவிட் கம்ரொன் உடனான பேட்டியை விட மேலதிகமாக ஒன்றையும் செய்திருக்க முடியாது. மாறாக அவர்கள் அனுராதபுடத்துடன் திருப்பி அனுப்பப்பட்ட செய்கையானது இந்த ஊடகவிலளாளர்கள் கேட்ட கேள்வியான “எங்களை திருப்பி கொழும்புக்கு அனுப்புவதன் மூலம் எதை மறைக்க முயல்கின்றீர்கள்?”  என்பது உலக நாடுகளின் பார்வையில் இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைய விடயங்களை மறைக்கின்றது என்பதை நிரூபிக்கும் செயலாக அமைந்துவிட்டது.
அதே நேரத்தில் இலங்கையின் உளவுத்துறை கவனத்தில் எடுக்க தவறியதாக தெரியும் விடயம் தமிழ் பகுதிகளில் இருந்து 2009 மே கடைசி கட்ட நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் எடுப்பது என்பது சாதாரண விடயம் என்பதை மறந்த நிலையும், இராணுவ சிப்பாயிகளிடம் இருக்கும் பிரத்தியேக வீடியோ, மற்றும் புகைப்படங்கள் (பணத்திற்காக) கொழும்பில்தான் பெறமுடியுமே தவிர யாழ்பாணத்தில் அல்ல என்ற விடயமுமாகும். எனவே இந்த ஊடகவிலளாளர்கள் கொழும்பில் முடக்கப்பட்டதானது இலங்கை அரசாங்கத்தைவிட  ஷெனல் 4க்கே  சாதகமானதாக அமைந்து விட்டது.  சிறு பிள்ளைகள் போல “கள்ளன் பொலீஸ்” விளையாட்டில் ஈடுபட்ட இலங்கையின் உளவு துறையும், சிவிலியன் உடையுடன் கடமையில் ஈடுபட்ட பெருந்தொகை பொலீஸ் படையும் ஷெனல் 4 வின் தொழில் ரீதியான அனுபவத்தில் நகைப்புக் குறியோரே. அவர்களுக்கும் விடப்பட்ட கொலை அச்சுறுத்தல் முதல் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிக்கல்கள் வரை அனைத்தும் அடுத்த மார்ச் மாதம் ஐ.நா.களின் ஜெனிவா மனித உரிமை செயலமர்வுக்கு முன்னால் ஷெனல் 4 இந்த 23ம் பொ.நா.அ.த. மாநாட்டிலும், பொதுவாக இலங்கையில் ஊடக அடக்கு முறை தொடர்பாக வெளியிட சாதியமான ஆவணப்படம் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செய்த குற்றங்களை மறைக்க செய்த புதிய குற்றங்களை அம்பலப்படுத்த போதுமான சாட்சியமாக அமையும்.
யூ.கே. பிரதமர் டேவிட் கம்ரொன்னுக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் இரு தரப்பில் இருந்தும் இடைக்கிடையே “குரல் உயர்த்தல்” நடை பெற்றதும், வெளி நாட்டு, குறிப்பாக ஷெனல் 4 வின் ஊடகவிலளாளர்களுக்கு  முகங் கொடுப்பதில் இருந்து அனேகமாக ஒழிந்தே இருந்த இலங்கையின் படைத்துறை செயலர் கோட்டபாய ராஜபக்ஸ “பிரதமர்-ஜனாதிபதி” சந்திப்பின் போது கூடவே இருந்து ஜானாதிபதி பதிலளிக்க வேண்டிய பல நேரங்களில் இவரே விடயங்களைக் கையாண்டதும்,  டேவிட் கம்ரொன்னிடம் நிறைய கேள்விகள் கேட்கவுள்ளேன் என்று அவரின் வருகைக்காக காத்திருந்த ஜனாதிபதி இறுதியில் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் செயல் ரீதியில் விடையளிக்க கால அவகாசம் தேவை என்ற சரணாகதி அடைந்தது ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பயத்தை சற்று படம் பிடித்து காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இலங்கைக்கான யூ.கே அரசாங்கத்தின் காலக் கெடுவானது, அதாவது “சுதந்திரமான விசாரணை” ஒன்றுக்கான மார்ச் 2014 வரையிலான காலக்கெடு மீறப்பட்டால் “சுதந்திரமான சர்வதே விசாரணை” ஒன்றை வலியுறுத்துவோம் என்ற கம்ரொன்னின் பகிரங்க அறிப்பானது மிகவும் அர்த்தம் பொதிந்தது.  இது மேற்குலனின் சராசரி ரஜதந்திர அணுகுமுறை. ஓடிவிளையாட காலம் தந்தோம், இப்போது காரியம் ஆற்றும் நேரம் என்பதை திட்டவட்டமாக கூறியிருப்பது இலங்கைக்கு ஒரு பலத்த அடியே. மேலும் இலங்கை அரசாங்கமும் அவர்களால் கூலிக்கு அமர்தப்பட்ட “ஆர்ப்பாட்டக்காரர்” களும் புலிகளின் பணத்துக்காகவும், பிரித்தானிய தமிழர்களின் வாக்குகளுக்காகவுமே இங்கிலாந்து மனித உரிமை, மனித உரிமை என்று தூக்கிப் பிடிக்கின்றது என்ற அரசியல் அறிவீனமான குற்றச்சாடை  பிரதமர் கம்ரொன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்தே ஒரே வார்த்தையில் உடைத்தெறிந்தார். அதாவது “புலி பயங்கரவாதம்” ஒழிந்து நான்கு ஆண்டுகளாகியும் இலங்கை அரசாங்கம்  இன்னும் பல விடயங்களில்  அக்கறைகாடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்ற தொனியில் கூறியதன் தாற்பரியத்தைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அரசியல் அவதானிகளையும், ஆலோசகர்களையும் ஜனாதிபதி பக்கத்தில் வைத்திருப்பதே அவரின் அரசியல் அஸ்தமனத்திற்கான திடமான சாட்சியாகும்.
இந்த மாநாட்டு காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதி-பத்திரிகையாளர் கேள்வி-பதில் களம் திடீரென்று இடை நிறுத்தப்பட்டதும், இடையே மக்களால் தெரிவு செய்யப்படாத ஆனால் முஸ்லீம்களுக்கான பிரதிநிதி என்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவரும், ஏற்கனவே முஸ்லீம்கள் விவகாரத்தில் தன் கையாலாகத  நிலையை அடிக்கடி  நிரூபித்துக் கொண்டிருப்பவரும்,  அரசியலில் அதுவும் பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி அவர்கள் தொடர்பாக கருத்து சொல்லவும், காரியமாற்றவும் கடப்பாடுடையவர் என்ற சாதாரண விடயத்தையும் புரியாமால், “முஸ்லீம்கள் பற்றி கதைக்க வேண்டுமானால், விருத்தஷேதனம் செய்து கொண்டு வரவேண்டும்” என்று  மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பா.உ. திரு மனோ கணேஷனுக்கு கூறி குழப்பம் ஏற்படுத்திய அஸ்வர் (ஹாஜியார்) இந்த மா நாட்டிலும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அவர் ஒரு ஊடகவியலாளராக இல்லாத நேரத்தில் அந்த இடத்தில் பிரவேசித்ததும் அல்லாமல், எதிர்பாராத விதமாக ஊடகவிலளாளர்களை சாடியது, குறிப்பாக பிரித்தானிய ஊடகங்களை சாடியதானது, உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கான ஆபத்துக்களின் கனதியை சுட்டிக் காட்டுவதாக இருந்தது.
எதிர்வரும் ஐ. நா.களின் மனித உரிமைகளுக்கான ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தை நியாயப்படுத்த “ஜம்மியத்துல் உலமா” வுக்கு மாற்றீடாக அஸ்வரின் தலைமையிலும்  ஒரு குழு அனுப்பபடும் சாத்தியப்பாடானது  இலங்கை அரசியலானது வேட்டை மிருகங்கள் நிறைந்த காடாகவும் (சிறுபான்மை இனங்கள், அரசாங்க எதிர்ப்பாளர், ஊடகவியலாளர்)  அங்கே தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகலாம் என்ற ஒரு காட்டுமிராண்டி நிலையை உலகுக்கு காட்டுவதாக அமைந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும்- தமிழ் (அரசியல்) தரப்புக்கும் இடையிலான ஒருவகை பணிப்போர் இந்த மாநாட்டில் இந்திய பிரதமரின் பங்குபற்றல் தொடர்பான முடிவில் முடிவடைந்தது.  தமிழ் நாடு மாணிலத்தில் அதுவும் அதன் சட்டசபையின் ஏகோபித்த முடிவினை  மீறுவது தன் தனிப்பட்ட அரசியலுக்கு மாத்திரமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பெரிய அரசியல் சேதத்தை ஏற்படுத்தம் என்பதை நன்கறிந்த  பிரதமர் மன்மோகன் சிங்க் மாநாட்டை பகிஸ்கரித்ததும் இலங்கையின் கன்னத்தில் விழுந்த பலமான அடியாகும். ஆனாலும் பிரதமர் மாநாட்டுக்கு வரத்தவறியதும் அதற்கான காரணம் “தமிழ் நாட்டின்” அழுத்தம் அல்ல என்று தனக்கு கடிதம் மூலம் இந்திய பிரதமர் அறிவித்ததானது திருப்தியளிப்பதாக உள்ளதாக கூறியதானது ஜனாதிபதியின் பரிதாபத்துக்குறிய நிலையை சிறப்பாக எடுத்துக் காட்டியது. அதேபோல் கனேடிய பகிஸ்கரிப்புக்கு “தமிழ் வாக்குகள்” என்ற காரணம் கண்டுபிடிக்கப்பட்டதும், ஆனால் மொரிஸியசின் பகிஸ்கரிப்புக்கு  இனிதான் காரணம் தேடி பிடிக்க வேண்டும் என்பதும் அதுவும் கூட தொன்மைய “தமிழ் தொடர்பு” என அந்த காரணம் அமையக் கூடியதுமான  நிலையும் கூட இலங்கையை ஒரு மரியாதைக் குறிய அரசியல் தலைவர்களைக் கொண்ட நாடாக உலக அரங்கில் காட்டாது.
ஆக மொத்தத்தில் இத்தனை கோடி, கோடியான (கடன்) பணத்திலும், கற்பனை கற்களாலும் கட்டபட்ட ஜனாதிபதிக்கான பொது நலவாய நாடுகளின் கனவு அங்கீகாரம் விபரீதமான கனவாக அமைந்ததே  இம் மாநாட்டின் உச்ச சோகமாகும்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by