
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் இன்று (21) வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தனது தலைமையிலான அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று பிற்பகல் 1:04 க்கு சமர்ப்பித்து உரையாற்றுவார்.
2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செலவினங்களுக்கு 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
2014 ம் வருட வரவு-செலவு திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் 22 ம் திகதி சபை முதல்வர் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை 2014 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து நவம்பர் 22ம் திகதி முதல் 29ம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 29ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
அத்துடன் குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 2ம் திகதி முதல் 20ம் திகதி வரை சனிக்கிழமைகள் அடங்கலாக 16 நாட்களுக்கு இடம்பெறும். 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டம் இடம்பெறும் காலப் பகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு விஜயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளும் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு மேலாக தண்ணீர் போத்தல் வீசப்பட்டது.
இந்நிலையில், இம்முறை மக்கள் கலரிக்கு வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment