
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.
சின்னதொரு பிரச்சினை இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பென்னம் பெரிதாக மாறியுள்ளது. கல்முனை மாநகர மேயர் சர்ச்சை இன்று மாபெரிய விடயமாகப் போய் அதன் விளைவுகள் அறைவடையாகிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளாமை, அல்லது திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதம் ஒன்றை ஜே.ஆர் பாணியில் பெற்றுக் கொள்ளாமை காரணமாக ஏற்பட்ட இழுபறியே இது..
யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். அது இப்போது ஹக்கீமுக்கும் தான் என்ற நிலை. அமைச்சர் ஹக்கீம் முன்னர் எத்தனையோ சூடுகளைக் கண்டு கொணடவர் ஆனால் மீண்டும் அவர் அடுப்பங்கரைக்கே சென்றுள்ளார். தனது கட்சிக்காரர்களிலும் பேராளிகளிலும் அவர் இன்னும் கொண்டுள்ள அதீத நமபிக்கையே இதற்குக் காரணமாகலாம்.
”இந்த நாசமாய்ப் போன மேயர் பிரச்சினையால் ஊரும் இரண்டுபட்டு, உறவுகளும் மூன்றுபட்டு விட்டன என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மேயர் பிரச்சினையை வைத்தே முஸ்லிம் காங்கிரஸுக்கு ”கேம்” கொடுப்போம் என எதிர்தரப்பு அரசியல்வாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எனது பதவியை எப்படி விட்டுக் கொடுப்பது? மக்கள் ஆணை இல்லாமல் அதுவெல்லாம் நடப்பதா? எனற பிடிவாதத்தில் தொடர்ந்தும் சிராஸ் மீராசாகிப்.
பள்ளிவாசல் மரைக்காயர்கள் என்ன? சாய்ந்தமருது மக்கள் அனைவரும் வந்தாலும் அசையமாட்டேன் என்ற தோரணையில் அமைச்சர் ஹக்கீம்.
மிகுதிக் காலப் பதவிக்காக மேயருக்கான உத்தியோகபுர்வ உடையைத் தைப்பதா இல்லையா என்ற இரண்டும் கெட்டான் நிலையில் போல் சட்டத்தரணி நிசாம் காரியப்பர்.
இப்படியெல்லாம் விடயங்கள் நடக்கின்றன. இதன் முடிவுதான் என்னவாகுமோ என்ற பொதுசனத்தாரின் எதிர்பார்ப்பின் மத்தியிலேயே அவரது இராஜினா இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மர்ஹும் அஷ்ரஃபிடமிருந்து விடுபட்டு ஹக்கீமிடம் போன பின்னர்.. கட்சியிலிருந்து இல்லாமல் போன விடயங்களே அதிகமே தவிர உள்ளே வந்தவை ரொம்பக் கம்மிதான்.
அதாவுல்லாஹ் போனார், றிஷாத் பிரிந்தார், அமீரலி ஆளை விட்டால் சரி என்ற நிலையில் விலகிக் கொண்டார். இவர்கள் தவிர நஜீப் மஜீத், பாயிஸ், நிஜாமுதீன் என பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அந்தக் கட்சியிலிருந்து சென்றனர். சென்று கொண்டே உள்ளனர். அந்தப் பட்டியலை கைவலிக்க, வலிக்க நான் எழுத நீங்களும் அதனைப் படித்துப் படித்தே சலித்துப் போக வேண்டாம் போதும்… நிறுத்திக் கொள்கிறேன். கணக்குச் சொல்வதும் கொஞ்சம் கஷ்டம்தான்.
ஆனால், வரவுகளைப் பார்க்கும்போது கல்குலேட்டர் கணக்குத் தேவை இல்லை. கைவிரல் எண்ணலே போதும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று அப்படித்தான்..
அமைச்சர் அஷ்ரஃப் காலத்தில் இப்படிக் கூட்டம் கூட்டமாகப் போனவர்களும் இல்லை.. முரண்பட்டு முட்டுப்பட்டுக் கொண்டே கட்சிக்குள் இருந்தவர்களும் பெரிதாக இல்லை. சேகு இஸ்ஸதீன் மட்டுமே சென்றதாக ஞாபகம். அதனை விட பெரிதாக ஒன்றுமில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் தலைமைத்துவம் சரியில்லை. அதனால்தான் இவ்வளவு சரிவு என்பதே பதிலாக உள்ளது.
கல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் அண்மையில் கல்முனையைச் சேர்ந்த பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் (மரைக்காயர்கள்) அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்துப் பேசினார்கள். ஆனால், அமைச்சர் ஹக்கீம் தனது முடிவில் பிடி தளராது இருந்தார். பள்ளிவாசல்கள் மரைக்காயர் சபையின் கோரிக்கையைக் கூட நிராகரித்த ஹக்கீம், அதற்கான பதிலை அவரொரு சிறந்த கவிஞர் என்ற தோரணையுடன் இவ்வாறு வழங்கியிருந்தார். ஆறு மாத கால அவகாசம் அல்ல ஆறு மணித்தியால அவகாசம் கூட வழங்கமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.
சரத் பொன்சேகா சிறையிலிடப்பட்ட போது கண்டி மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து அவரை விடுதலை செய்யுமாறு இன்றைய அரசாங்கத்தைக் கேட்டபோது, அதனைக் கணக்கெடுக்காமல் சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய சம்பவம் இதன்போது ஞாபகம் வருகிறது.
மதத் தலைவர்கள், மத தலங்களின் நிர்வாகிகள் கேட்டால் எல்லாம் சரிப்பட்டு விடும் என்ற காலம் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடம் சரிபட்டு வராது என்றதொரு புதிய அரசியல் நடைமுறையும் இந்த நாட்டில் இப்போது தோன்றியுள்ளதனை இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது நினைத்துப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
சிராஸ் மீராசாகிப் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.“சிராஸ் மீராசாஹிப் கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது மட்டுமல்ல. கட்சித் தலைமைத்துவத்திற்கு சூளுரைத்து, சவால் விட ஆரம்பித்தும் விட்டார். அவர் அமானிதம், பைஅத் என்பவற்றுக்கு மாறு செய்து விட்டார்.
“ஊர் சென்று விட்டு வந்து இராஜினாமாச் செய்யும் வரை அவகாசம் கேட்ட அவர், கடந்த ஒரு வார காலத்திற்குள் யார், யாருடன் சந்திப்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்பதும் எவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்பதும் நன்கு கண்காணிக்கப்பட்டுள்ளது. வேறு வேறு தோணிகளில் அவர் கால்களை வைத்துள்ளார். உண்மையான முஸ்லிம் காங்கிரஸ்காரர் ஒருவர் ஒரு காலை முஸ்லிம் காங்கிரஸிலும் மற்றக் காலை வேறெங்கும் ஊன்ற முடியாது. அவரை ஓர் ஆயுதமாகப் பாவித்து கட்சியை கருவறுக்க சிலர் எத்தனிப்பது தெரிய வந்துள்ளது.”
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நிக்ஸனின் வோட்டர்கேட் ஊழல் அம்பலமாவதற்கு எவ்வாறான புலனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டதோ அவ்வாறான புலனாய்வுகள் பின் தொடரல்கள், ஒத்துக் கேட்டல்களும் இந்த விடயத்திலும் இடம்பெற்றுள்ளதோ என்றும் எண்ணத் தோன்றுகிறதுதான்.
இதேவேளை, அமைச்சர் ஹக்கீம் சிராஸ் தொடர்பில் தெரிவித்திருந்த இந்த விடயங்களை ஒட்டியதாகச் சில கேள்விகளையும் எழுப்ப வேண்டியுள்ளது.
சிராஸ் மீராசாஹிப் கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுகிறார் என்றால் தெவிநெகும சட்டமூலம் கிழக்கு மாகாண சபைக்கு வந்தபோது, அதற்கு ஆரவளிக்க வேண்டாமென கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைச்சர் ஹக்கீம் கேட்டிருந்த நிலையில் அதனைக் கணக்கிலெடுக்காது அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக அந்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தனரே? அது தலைமைத்துவத்தை மீறிய செயல் இல்லையா?
13 ஆவது திருத்தச் சட்டத்தின் திருத்தங்கள் மாகாண சபைகளில் முன்வைக்கப்படும் போது அதற்கெதிராகவே தங்களது உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் அதற்குச் சார்பாக வாக்களித்தபோது அது தலைமைத்துவ கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரியவில்லையா?
சரி இவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள்தான் என்ன,? இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. (இருவருக்கும் மன்னிப்பு வழங்கியது வேறு விடயம்).
சிங்கள அரசாங்கம் தமிழ்பேசும் சமூகத்தினதும் நலன்களில் கைவைக்கும் அளவிலான இந்த இரு சட்டமூலங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவளித்தது பெரிய குற்றமா? அல்லது சிராஸ் மீராசாகிப் இவ்வாறு நடந்து கொண்டது மாபெரும் குற்றமா? இந்த விடயத்தில் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியது கட்டாயமாகும்.
”தலைமைத்துவத்திற்கு சூளுரைத்து, சவால்விட்டு அமானிதம், பைஅத் என்பவற்றிற்கு மாறு செய்து விட்டார். அவர், யார் யாருடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதும், அதற்கு முன்னரும் எவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்பதும் நன்கு கண்காணிக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
அண்மையில் நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மிக முக்கிய புள்ளிகள் யார்.. யாருடன் தொடர்பு வைத்திருந்தனர்… உண்டவன் வீட்டுக்கு எவ்வாறு ரண்டகம் செய்தனர் என்பது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமல்ல.. முழு முஸ்லிம் சமூகத்துக்குமே தெரிந்த வியடம். அப்படிப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவது ஏன்?
முஸ்லிம் காங்கிரஸில் ஏலவே தாராள மயப்படுத்தப்பட்டுள்ள வாக்குமீறல், தலைமைத்துவ எதிர்ப்புச் சம்பவங்களில் நிறையவே அனுபவத்தைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், இந்த மேயர் விடயமும் இப்படியாகி விடுமே என் சிந்தித்து ஓர் ஒப்பந்தைந்தை ஏன் இந்த விடயத்தில் செய்து கொள்ள முடியாது போனது? இந்த விடயமே இன்று மேயர் சிராஸுக்கு ஒரு துரும்பாக மாறியுள்ளது.
அதேவேளை, அக்குறணை பிரதேச சபை சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையே மீறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நிலைகள் இவ்வாறிருக்க, சிராஸ் மீராசாகிப் உண்மையில் செய்யக் கூடாத ஒரு விடயத்தைச் செய்து விட்டார் என்பதற்காக இவ்வாறான பரபரப்பு நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ள வேண்டும்? கட்டி வைக்கப்பட்டுள்ள யானையின் தும்பிக்கையையே தொடும் திராணியற்றவர்கள் அதன் வாலின் நுணியை தூர நின்று தொட்டுத் தொட்டுத் சட்டித்தனம் காட்டுவது போல்தான் இந்த விடயம் உள்ளது.
இது இவ்வாறிருக்க, மேயர் சிராஸ் மீராசாகிப் தொடர்பிலும் சில விடயங்கைள இங்கு பிரஸ்தாபிப்பதும் தேவையான விடயமாகவே உள்ளது. அவர் இப்போது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் என்பதற்கும் மேலாக இந்த விடயங்களைக் கூறியேயாக வேண்டும்.
முதல் இரு வருடத்துக்கும் தன்னை மேயராக நியமிப்பது தொடர்பில் கட்சித் தலைவர் தனது தீர்மானத்தைக் கூறிய போது, ” சேர் ஊருக்குப் போய் எனது சாய்ந்தமருது மக்களிடம் கேட்டுச் சொல்கிறேன். கால அவகாசம் தாருங்கள்” என சிராஸ் அன்று தனது தலைமையிடம் கேட்டாரா என்பதும் ஒரு கேள்வியே.
ஏனெனில் பதவியை இராஜினாமாச் செய்ய ஊர் மக்கள் விட்டக் கொடுத்துள்ளனர் என்பதனாலேயே இந்தச் சந்தேகம்
இரு வருடகாலத்துக்கான பதவியை தலைவர் தரும்போது அன்றைய நிலைமையைச் சமாளிப்பதற்காகவே அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்தார் என தான் நினைத்ததாக சிராஸ் தனது அறிக்கைகளிலும் தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றிலும் தெரிவித்திருந்தார். அதாவது நிலைமை சுமூகமடைந்து விடும் தொடர்ந்தும் தன்னையே மேயராக வைக்கும் நோக்கம் தலைவருக்கு இருந்ததாகவே அவரது கூற்று வெளிக்காட்டுகிறது.
சிராஸ் கூறுவது போன்று நிலைமையைச் சமாளிப்பதற்காகவே இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தாரானால் அது பாராதூரமான விடயம். சிராஸ் மீராசாகிபையா, நிசாம் காரியப்பரையா அல்லது கல்முனை நகர சபைக்கு உட்பட்ட மக்களையா ஏமாற்றுவதற்கு தலைவர் ஹக்கீம் முனைந்திருந்தார் என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு கட்சியின் தலைமை இவ்வாறு கூறியிருந்தால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல. பாரதூரமான விடயம்
இது தவிர, தான் ஆரம்பித்து வைத்த திட்டங்களை முடித்து வைப்பதற்காகவேணும் கால அவகாசம் தரவேண்டுமென்று சிராஸ் மீராசாகிப் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த விடயத்தில் சிராஸ் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நல்ல பல திட்டங்களை புதிய மேயர் தொடருகிறாரா இல்லையா என்பதற்கான ஒரு சந்தர்ப்பமுமாக இதனை அவர் கருதிக் கொள்ளலாம்.
இந்த விடயத்தில் புதிய மேயர் நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் மக்களே அவருக்குப் பதிலளிப்பர். இது சில வேளைகளில் சிராஸுக்கு எதிர்காலத்தில் சாதகத்தன்மையையும் ஏற்படுத்துமல்லவா? பாலையும் தண்ணீரையும் பகுத்தறிந்து கொள்ள மக்களுக்கு வழங்கும் ஓர் அரிய சந்தர்பமாகவே இது அமைகிறது.
மேலும் முஸ்லிம் காங்கிரஸின் கோபித்துக் கொண்டு அவர் கட்சியை விட்டு விலகி பிறிதொரு கட்சி ஊடாக தனது அரசியல் பயணத்தைத் தொடரும் எண்ணம் சிராஸ் மீராசாகிபுக்கு இருப்பின் அது கூட ஒரு சாத்தியமற்ற செயற்பாடாகவே எதிர்காலத்தில் அமைந்து விடவும் முடியும்.
காரணம் கல்முனையின் அரசியல் களநிலை என்பது வித்தியாசமானது. இதனை சிராஸுக்குப் புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. இதனை அவர் இப்போது புரிந்து கொண்டு செயற்பட்டுள்ளார் என்றும் நம்பலாம்.
சாட்சிகளைச் சரியாகச் சோடித்தால் அரிச்சந்திரனுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கலாம் என்பதனை இருதரப்புக்கும் கூறிவைத்துக் கொள்வது நல்லதாகப்படுகிறது.
(அடிக்குறிப்பு இந்தக் கட்டுரை கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை எழுதப்பட்டதாகும். வெள்ளிக்கிழமையான 8 ஆம் திகதி சிராஸ் மீராசாகிப் மேயர் பதவியை இராஜினாமா செய்ததனையடுத்து இந்தக் கட்டுரையானது கட்டுரையாளரால் சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் எப்போதும் காலத்துக்குப் பொருத்தமானவையே)
நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 10-11-2013
Post a Comment