
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் ஐய்யூப் மேற்கண்டவாறு கூறினார்.
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தின் மூலம் வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் ஐய்யூப் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்து உரையாற்றிய போது கூறியதாவது,
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை காட்சிப் பொருளாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியலை செய்தது. இதன் மூலம் 1994ஆம் ஆண்டு வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
அதேபோன்று வடக்கு முஸ்லிம்களை காட்டி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாமலுள்ளது. ஆனால் வட மாகாண முஸ்லிம்களின் நிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.
புத்தளத்திற்கு சென்று பார்த்தால் வட மாகாண முஸ்லிம் அகதிகளின் நிலை என்னவென்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினை என்பது இந்த நாட்டிலுள்ள தேசிய முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினையாகும்.
எம்மிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பிரதி நிதியும் வட மாகாண முஸ்லிம்களின் நலனுக்காக உழைப்பார்கள் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என சரியாக தெரிவிக்கும் எந்த ஆவணமும் செய்யப்படாத நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின் மூலம் வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என தெரிவிக்கும் வரலாற்று ரீதியான ஆவணத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
இது வட மாகாண முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல தேசிய ரீதியாக முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று அடையாளமாக இதை நாம் பார்க்க முடியும். இந்த மகத்தான வரலாற்று பொறுப்பை காத்தான்குடியிலிருந்து உதயமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டுள்ளது என்பதை நினைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மாத்திரமல்ல இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
இதற்காக காத்தான்குடி மக்களுக்கு வடமாகாணத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் நன்றி கூறுகின்றேன்.
வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் கவனம் செலுத்துவதும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் எமக்கு எதிர்காலத்தில் உள்ள வேலைத்திட்டமாகும் என்று கூறினார்.
Post a Comment