Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் நெற்றியடி!

Monday, October 70 comments

 
சிறுபான்மை மக்களின் நீண்ட காலப் போராட்டத்தின் பயனாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றங்களோ அதிகாரக் குறைப்புக்களோ செய்யப்படுவதை ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. மு.கா.வை கிள்ளுக் கீரையாக கற்பனை பண்ணியவர்களுக்கான நெற்றியடியாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.


இவ்வாறு ஸ்ரீ.ல.மு.கா.வின் ஊடகப் பணிப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை மு.கா. வினால் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஏதும் செய்யப்படக்கூடாது எனும் பிரேரணை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.


இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:


13வது திருத்தச் சட்டம் என்பது தமிழ்பேசும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அளவிலான அரசியல் நிர்வாக விமோசனமாகும். இதனைக்கூட இச்சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவித்துவிடக் கூடாது என்ற பேரினவாதிகளின் நச்சுத்தனமான நிகழ்ச்சி நிரல்களுக்கு சோரம் போகும் அமைப்பாக ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் ஒருபோதும் இருந்து விட மாட்டாது. சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கென்றே ஸ்தாபிக்கப்பட்ட சமூக விடுதலை இயக்கமான மு.கா.வை யாராவது கிள்ளுக்கீரையாக்கிக் கொள்ள நினைப்பதைக்கூட மு.கா. ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது.


இதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சபை அமர்வில் மு.கா.வின் கிழக்கு மாகாண சபைக்கான குழுத் தலைவர் ஜெமீல் அவர்களால் இப்பிரேரணை கொண்டு வரப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும், இது வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதற்கு கட்சியின் சகல மாகாண சபை உறுப்பினர்களும் முழுப்பங்களிப்பையும் வழங்க வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்டு அதிகப்படியான மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதனை, மு.கா.வுக்கு கிடைத்த வெற்றியாக நாம் பார்க்கவில்லை. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கும், ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகங்களுக்கும் கிடைத்த வரலாற்று வெற்றியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.


மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தூரதிருஷ்டிமிக்க சிந்தனைகளில், இந்த நாட்டின் ஏழு மாகாணங்களில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஆட்சியாளர்களாகவும், தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஆளப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 இதேபோன்று வடக்கில் தமிழர்கள் ஆட்சியாளர்களாகவும், சிங்கள - முஸ்லிம் சமூகங்கள் அங்கே ஆளப்படுகின்ற கௌரவப் பிரஜைகளாகவும் இருக்க வேண்டும். இவ்வாறே கிழக்கில் முஸ்லிம்கள் ஆளுகின்றவர்களாகவும், சிங்களவர்களும், தமிழர்களும் அங்கே ஆளப்படுகின்ற சமூகங்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் ஒரு இலட்சியக் குறிக்கோளாக இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. அன்னாரது அந்த உயர்ந்த இலட்சியக் கனவை நோக்கியே இன்றும் ஸ்ரீ.ல.மு. காங்கிரானது தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் அதன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


13வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது எனும் பிரேரணை ஸ்ரீ.ல.மு.காவினால் கொண்டு வரப்பட்டதும், இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், குறிப்பாக கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்கா அவர்கள் உட்பட அதிகப்படியான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருப்பதும், சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த முக்கியமான இப்பிரேரணையில் சில தமிழ் - முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது புறக்கணித்திருப்பதும் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களால் மட்டுமன்றி சர்வதேசத்தினால் கூட மிக உன்னிப்பாகப் பார்க்கப்படுகின்றது என்றும் அஷ்ஷெய்க் ஹனீபா மதனி மேலும் கூறினார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by