Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

லண்டனில் ஹலால் உணவுத் திருவிழா

Friday, October 40 comments


இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹலால் உணவுக்கு அண்மையில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில் அரங்கேறியது.
 
"ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த திருவிழாவின் நோக்கம் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார்.
 
"நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான இடங்களில் சென்று சாப்பிட உரிமை இருக்கிறது. அவர்களுக்கென சில ஹலால் உணவுகளையும் அவ்விடுதிகள் பரிமாறுவது அவசியம்," என அவர் வாதிட்டார்.
 
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மொத்தம் கிட்டத்தட்ட முப்பது லட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றனர்.
 
நல்ல வேலையில் உள்ளவர்களாகவும், நல்ல வருவாய் ஈட்டுபவர்களாகவும் பிரிட்டனின் இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் குடியேறிகள் பலர் உருவாகியிருக்கின்றனர்.
பிரிட்டனின் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவருகின்ற சூழலில் அவர்களுக்குரிய உணவுகளை தயாரித்து வழங்குவதில் வியாபார நலன் இருப்பதை பிரிட்டிஷ் உணவு நிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களுக்கான உணவு விடுதிகளும் உணர்ந்துள்ளன என்பதை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
 
ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறிக்கிறது.
 
உணவு என்று வரும்போது, ஆரோக்கியமாகவும் உயிரோடு இருக்கும் விலங்குகளை மட்டுமே அறுக்க வேண்டும், விலங்கின் குரல்வளையை ஒரே வெட்டில் வேகமாக அறுத்து, அதனுடைய எல்லா ரத்தத்தையும் முழுமையாக வடியவிட வேண்டும் என்றுள்ளது. பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது, மது கலந்திருக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளும் உண்டு.
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில், உணவுக்காக விலங்குகளைக் கொல்லும்போது, அது அறவே வலியை உணராமல் இருக்கவேண்டும் என்பதற்காக அதனை உணர்விழக்கச்செய்து பின்னர் கொல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.
 
தலையில் இரும்பு குட்டி ஒன்றை சட்டென அடித்தோ, மின்சாரத்தை பாய்ச்சியோ, சுயநினைவு இழக்கச்செய்கிற மருந்து கொடுத்தோ விலங்கை உணர்விழக்கச் செய்யும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
 
ஆனால் முஸ்லிம் சமூகத்தாருக்கும், யூத சமூகத்தாருக்கும் மதக் காரணங்களை முன்னிட்டு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
ஹலால் முறையில் சுயநினைவோடு இருக்கும் விலங்கைக் கொல்வதில் மிருகச் சித்ரவதை அடங்கியிருக்கிறது என மேற்குலகில் பலர் கருதுகின்றனர்.
 
ஆனால் ஹலால் முறையில் விலங்குகளைக் கொல்வதில் சித்ரவதை இல்லை என உணவுத் திருவிழாவின் தோற்றுநர் இம்ரான் கவுசர் வாதிடுகிறார்.
 
"கூரான கத்தியால் கழுத்தை ஒரே வெட்டில் அறுக்க வேண்டும் என்பதேகூட விலங்குக்கு வலியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில்தான்," என்கிறார் அவர்.
உணர்விழக்கச் செய்து அறுத்தால் ஹலாலா?
 
இன்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் சந்தையில் கிடைக்கும் ஹலால் இறைச்சியில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை முன்கூட்டியே உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகள்தான்.
 
விலங்கை உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால் முறையில் அறுத்தாலும் அது ஹலால் ஆகுமா என்ற வேறு ஒரு கருத்தொற்றுமை இல்லாத விவகாரமும் இதில் உள்ளது.
இந்த ஹலால் உணவுத் திருவிழாவுக்கு சில எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. ஆனால் தற்போது லண்டன் வாழ் மக்களில் பத்தில் ஒருவர் முஸ்லிம் என்பதை சுட்டிக்காட்டி மாநகரின் மேயர் போரிஸ் ஜான்சன் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கியிருந்தார். (பி.பி.சி. தமிழ்)
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by