|
|||||||||||||
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கொண்டு வந்த பிரேரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு
வழங்கியுள்ளது. இதேபோன்று எதிர்வரும் காலங்களில் நாங்கள் கொண்டுவரும்
பிரேரணைகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமா? என
கேள்வியெழுப்பும் நிலை உருவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்களின் தாயகமான இணைந்த வடகிழக்கை பிரித்து மாகாண சபைகளுக்கு
கொடுக்கப்பட்ட உரிமைகளை முதலாவது அமர்விலே பறித்தெடுத்து இன்றுடன் ஒரு
வருடம் பூர்த்தியாகிறது.
நாட்டின் சுதந்திரத்தின் பின் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மாறி மாறி
ஆட்சி புரிந்த அரசாங்கங்களினால் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக எமது மக்கள்
கடந்த 60 வருட காலங்களில் 30 வருடங்கள் அஹிம்சையும், 30 வருடங்கள் தமிழ்
தலைவர்களினால் தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த
காலப்பகுதியில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த
பேச்சுவாரத்தைகள் பலவகை.
பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக ஒப்பந்தங்கள்
செயல் வடிவில் பெறவில்லை. அந்த நேரத்தில் ஏதாவதொரு ஒப்பந்தம்
நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழர்களின் தீர்வை கண்டிருக்கலாம்.
தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்தின் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தம்
உருவானது. இதனை ஏற்றுக் கொண்டுதான் நான் சார்ந்த அமைப்பு ஆயுதப்
போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தன.
இந்த அடிப்படையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பிரசவமான குழந்தை தான்
13ம் அரசியல் யாப்புத் திருத்தம். இதை அந்த நேரத்தில் மக்கள், இது நிரந்தர
தீர்வு அல்ல என்று ஏற்றுக் கொள்ளவில்லை.
அரசியல் யாப்பில் 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் மாகாண சபையின் சில
அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்த சபையில் நர்ன கவலையுடன் கூறிக் கொள்ள
விரும்புவது யாதெனில், எமது முதலாவது அமர்விலேயே “திவிநெகும” சட்டம்
நிறைவேற்றப்பட்டு சில அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
இந்தச் சட்டம் கிழக்கு தற்போது உறுப்பினர் முஹமட் ஜமீல் அவர்கள் 13வது
யாப்பில் இருந்து நீக்குவதற்கோ அல்லது அதிகாரங்களை குறைப்பதற்கோ ஆதரவு
வழங்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இப்பிரேரணையை எமது கட்சி ஆதரிக்கின்றது. ஆனால், இதேபோன்ற பிரேரணையை எமது
கட்சி முன் வைத்திருந்தால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமா
என்று எம்முன் வினா எழும்புகின்றது.
ஏனென்றால் திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் அங்கீகரிக்க
முனைந்த போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவு வழங்கி நிறைவேற்றிக்
கொடுத்தது.
தற்போது விவாதத்தில் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு திருத்தத்தை
பாதுகாக்கும் இப்பிரேரணை 2 மாதங்களுக்கு முன்னால் முன் வைக்கப்பட்டது.
ஆனால் இறுதி நேரத்தில் சபையில் எடுக்கப்படவில்லை.
தற்போது இப்பிரேரணை கொண்டு வருவதன் அவசரம் எமக்கு புரிகின்றது. இப்பிரேரணைக்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.
Post a Comment